பொலிஸ் விசாரணையில் சிக்கிய தம்பதி - பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
475 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பல சொத்துக்களை முடக்குவதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
பதவி பராக்ரமபுர பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சொத்துக்களை சேர்த்துள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடொன்று, கிடைத்துள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள்
அந்த முறைப்பாடு பொலிஸ் மா அதிபரால் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சம்பந்தப்பட்ட நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்திச் சொத்துக்களையும் வாகனங்களையும் வாங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றுள், அவரது மனைவியின் பெயரில், பதவிய பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட 275 லட்சம் ரூபாய் பெறுமதியான 15 பேர்ச் காணியும் அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரு மாடிக் கட்டடமும் அடங்குகின்றன.
பண மோசடி
மேலும், அனுராதபுரம் விஜயபுர பகுதியில் அமைந்துள்ள 120 லட்சம் ரூபாய் பெறுமதியான 15 பேர்ச் காணியும் அதில் உள்ள வீடும், 65 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேன், 15 லட்சம் ரூபாய் பெறுமதியான லொறியும் விசாரணைகளின் போது அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 47 வயதுடைய சந்தேகநபரும் அவரது 45 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட 475 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை 22 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.