பிபிசி நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு
முன்னணி ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீனின் (Azam Ameen) ஒப்பந்தத்தை முன்கூட்டியே நிறுத்துவதற்கான பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (BBC) முடிவு நியாயமற்றது என இலங்கையின் களுத்துறை தொழிலாளர் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், இதற்காக நிறுவனம் மனுதாரரான அஸ்ஸாம் அமீனுக்கு 10 மாத சம்பளத்துக்கு சமமான தொகையை நட்டஈடாக வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, 2024 ஏப்ரல் 26ஆம் திகதியன்று தீர்ப்பை வழங்கிய தொழிலாளர் தீர்ப்பாயம், நேற்று (30.04.2024) அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தீர்ப்பாயத்தின் சாட்சியங்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான (Ranjan Ramanayake) தொலைபேசி உரையாடல் கசிந்தமை தொடர்பாக பிபிசி தம்முடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதற்கு எதிராக அஸ்ஸாம் அமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதனையடுத்து, சில செய்தித்தாள் அறிக்கைகளின் அடிப்படையில் அஸ்ஸாம் அமீனின் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள பிபிசி நடவடிக்கை எடுத்ததாக தீர்ப்பாயத்தில் அமீனின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், உத்தரவை வழங்கிய களுத்துறை தொழிலாளர் தீர்ப்பாயத்தின் தலைவர் அலங்கா டி.அந்தோனி, தீர்ப்பாயத்தில் வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள், ஊடகவியலாளர், பிபிசியின் கீழ் கடந்த பத்து வருடங்களாக கறைபடாத சேவைப் பதிவை கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |