ஐ.எம்.எப் போன்று இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை கோரும் ஆசிய அபிவிருத்தி வங்கி!
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, சர்வதேச உதவியைப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவர் ஷீசென் ஷென் உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் ஜனாதிபதி விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெருக்கடியை தவிர்ப்பதற்காக, குறிப்பாக அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், நீர் சுத்திகரிப்புக்கான பொருட்கள், உரம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான செயல்பாட்டு மூலதனம் போன்ற உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஆசிய அபிவிருத்தி வங்கி ஈடுபட்டுள்ளமை தொடர்பில் வங்கியின் துணைத் தலைவர் ஷென் ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளார்.
சர்வதேச வர்த்தகம்
இந்நிலையில், வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி நிதித் திட்டத்தின் மூலம், முக்கியமான சர்வதேச வர்த்தகத்தைத் தொடர ஆசிய அபிவிருத்தி வங்கி உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவர்,
நீண்டகால மேக்ரோ பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்யவும், தனியார் துறை
வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிக்கு
ஆதரவளிக்கவும் ஆழமான, அர்த்தமுள்ள மற்றும் நீடித்த கட்டமைப்பு
சீர்திருத்தங்களுக்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.