கோசங்களை புறக்கணித்து ஆட்டத்தை இரசிக்க வேண்டும் - வாசிம் அக்ரமின் கோரிக்கை
இன்று (14) நடைபெறும் மிகவும் பரபரப்பான ஆசிய கிண்ண 20க்கு20 போட்டியில், பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்திக்கும் போது, கோசங்களை புறக்கணித்து ஆட்டத்தை இரசிக்க வேண்டும் என்று வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் இரசிகர்களிடம் கோரியுள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிலை ஏற்பட்டது. அது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவை கீழ்நிலைக்கு கொண்டு சென்றது.
இந்தநிலையில் அந்த சம்பவத்துக்கு பின்னர் இரண்டு நாட்டு அணிகளும் பங்கேற்கும் முதல் கிரிக்கெட் போட்டியாக நாளைய போட்டி அமையவுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தப்போட்டியை புறக்கணிக்கவேண்டும் என்று முன்னதாக இந்தியாவில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், "மகிழ்ச்சியாக இருங்கள், இது ஒரு கிரிக்கெட் விளையாட்டு" என்று வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த போட்டியின் போது, கிரிக்கெட்டைத் தவிரமற்ற அனைத்தையும் மறந்துவிடுங்கள்.
இரசிகர்களிடம் கோரிக்கை
நிச்சயமாக ஒரு அணி வெற்றி பெறும், ஒரு அணி தோற்கும், என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை நாளைய போட்டியின்போது, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 25,000 இரசிகர்களைக் கொண்ட முழு அரங்கம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் 1999 இல் இந்தியாவுக்கு பாகிஸ்தான் சுற்றுப்பயண அணியை தான், வழிநடத்தி சென்றதையும் அக்ரம் நினைவுக்கூர்ந்துள்ளார்.
இதற்கிடையில் அனுபவமற்ற பாகிஸ்தான் அணிக்கு, 20க்கு 20 உலக செம்பியன் மற்றும் பரம எதிரியான இந்தியாவுடன் விளையாடுவதன் மூலம் பெரிய படத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும் என்றும் அதிக போட்டிகளால் ஈர்க்கப்படாமல் இருக்க வேண்டும் என்றும் அக்ரம் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுடனான முத்தரப்பு தொடரை வென்றதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்றும் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்று மாத்திரம் நினைக்கக்கூடாது, ஆசிய கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்றும் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான போட்டியைப் போல போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்கும் என்று தாம் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அக்ரம், நாளைய போட்டியில் எதுவும் நடக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.




