எமது அரசாங்கத்தில் பாதுகாப்பு பொறுப்பு அருண ஜயசேகரவுக்கு-அனுரகுமார
உலகத்திற்கு முன்னால் இலங்கையை ஒளிமயமான நாடாக மாற்றும் பொறுப்பை தேசிய மக்கள் சக்தி ஏற்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டுக்கு வினை செய்தவர்கள் குழப்பமடைந்துள்ளனர்
அனைத்து அரசியல் மேடைகளிலும் தற்போது தேசிய மக்கள் சக்தி பற்றியே பேசப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச, சஜித் பிரேமதாச போன்றவர்களின் மேடைகளில் எம்மை பற்றியே பேசுகின்றனர்.
நாட்டுக்கு வினை செய்த எதிரிகள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. வரலாற்றில் என்றுமில்லாத அளவில் நாட்டின் அரசியல் பிரிவு சரியாக ஏற்பட்டு வருகிறது.
இதற்கு முன்னர் அரசியல் பிரிவுகள் பொய்யானவை. தேசப்பற்றாளர்கள், தேசத்துரோகிகள் என பிரித்தனர். நீலம், பச்சை என பிரித்தனர். சால்வை, ஐரோப்பிய உடை என பிரித்தனர். இப்படி பொய்யான பிளவுகளை ஏற்படுத்தினர்.
நாட்டை அழித்த அணி மற்றும் நாட்டை கட்டியெழுப்பும் அணி
எனினும் தற்போது உண்மையான அரசியல் பிரிவுகள் உருவாகியுள்ளன. இந்த நிலையில் சமூகத்தை சரியாக இரண்டாக பிரிக்க வேண்டும். இதில் இரண்டு மூன்று, நான்கு என்று எதுவுமில்லை.
நாட்டை அழித்த அணி மற்றும் நாட்டுக்கு தீர்வை கொண்டு வரும் அணி என பிரிக்க வேண்டும். நாட்டை கட்டியெழுப்புவது சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தி முறையான திட்டத்தை உருவாக்கும்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் கமத்தொழில் அமைச்சு நாமல் கருணாரத்ன தலைமையில் இயங்கும் என்பதுடன் பாதுகாப்பு சம்பந்தமான பொறுப்பு முன்னாள் இராணுவ அதிகாரியும் கிழக்கு மாகாண முன்னாள் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு வழங்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.