அருண் ஹேமச்சந்திரா பெல்ஜியத்திற்கு பயணம்
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா , நவம்பர் 19 முதல் 22 வரை பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணைக்குழுவின் உப-தலைவருமான காஜா கல்லாஸை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கை - பெல்ஜியம்
இந்தச் சந்திப்பின்போது, எஸ்டோனியாவின் முன்னாள் பிரதமருமான காஜா கல்லாஸுடன், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, இலங்கை-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவது, தற்போதுள்ள ஒத்துழைப்புப் பகுதிகளை மீளாய்வு செய்வது மற்றும் புதிய கூட்டுறவுக்கான வாய்ப்புகளை ஆராய்வது குறித்து பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

அத்துடன், பிரதி அமைச்சர், பெல்ஜியத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரும், பெல்ஜியம்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவருமான பிரான்கி டீமனையும் சந்தித்தார்.
அதன்போது அவர் இலங்கை பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொண்டு வரும் தற்போதைய ஈடுபாடுகளை எடுத்துரைத்ததுடன், இரு தரப்பினரும் நாடாளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடினர்.
பிரதி அமைச்சர், 4ஆவது ஐரோப்பிய ஒன்றியம்-இந்தோ பசுபிக் அமைச்சர்கள் மன்றத்தில் கலந்துகொள்வதற்காகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவதற்காகவும் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.