தத்தளிக்கும் அரசும் வாக்களித்த சிங்கள மக்களும்
சமகால அரசியல் நிலைப்பாட்டில் சலித்துப்போன பெரும் தேசியவாத சிங்கள மக்களின் நாவுகளில் இன்று அடிக்கடி கேட்கக்கூடியதான வார்த்தை, நம்மால் கொண்டுவரப்பட்டது நல்லாட்சிக்குப் பிந்திய நாசமாப்போன ஆட்சி என்று இந்த ஆட்சியை கொண்டுவந்த சிங்கள மக்கள் அதே ஆட்சியை திட்டித்தீர்க்கின்றார்கள் என கட்டுரையாளர் எஸ்.எம். இஹ்ஸான் என தெரிவித்துள்ளார்.
அவர் தனது கட்டுரையில் மேலும்,
சிறிமாவோ வந்தா சீனி நக்க தந்தா என்று ஒருகதை நமது தாய்நாட்டில் இன்னமும் மறவாமல் அடிக்கடி எமது வயோதிபர்கள் கூறக்கேட்டிருக்கின்றோம்.
ஆனால் இன்று நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் மூலம் அந்த பழைய சிறிமாவோ காலத்து அரசாங்கத்தின் நிலையை விட ஒரு மோசமான நிலைக்கு எமது நாட்டின் அரசியல் இயந்திரம் நகருவதை நினைத்து இவ் ஆட்சியை நிறுவ எத்தனித்து வெற்றிகன்ட சிங்கள மக்களே இன்று வெட்கித் தலைகுனியும் துர்ப்பாக்கிய நிலை எமது நாட்டில் உருவாகி இருக்கின்றது.
தின்பதற்கு அரிசி இல்லை, கறிக்கு பருப்பு இல்லை, கோதுமை மா இல்லை, பான் இல்லை, கறி மஞ்சல் இல்லை, அங்கர் இல்லை, சீனி இல்லை, சீமெந்துஇல்லை, கட்டிட வேலைப்பாடுகளுக்கான கம்பி இல்லை, பிள்ளைகளுக்கு படிப்பு இல்லை, விவசாயிகளுக்கு பயளை இல்லை, வாகனம் இறக்குமதி இல்லை, அன்றாட கூலி வேலை செய்யும் மக்களுக்கு தொழில் செய்வதற்கான வசதிகள் கூட இல்லை, மக்களிடம் பணமும் இல்லை, அரசிடமும் பணம் இல்லை.
எங்குபார்த்தாலும் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. நாட்டை அன்னிய நாட்டுக்கு விற்பனை பன்ன மாட்டோம் என்று கூத்தாடி ஆட்சிக்கு வந்த இந்த அரசு இன்று நாட்டை துண்டுதுண்டாக நாட்டின் நாலாபக்கங்களையும் சீனா, அமெரிக்கா, இந்தியா என்று நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய கேந்திர நிலையங்களை விற்று முடித்திருக்கின்றது.
எமது அழகிய தாய் நாட்டில் வாழமுடியாத சூழ்நிலை இன்று உருவாகி இருக்கின்றது. நாட்டில் உள்ள இளைஞர்கள் நாட்டிலே வாழமுடியாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வதற்காக காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
ஜனநாயக நாடொன்றில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கு எங்கு பார்த்தாலும் இராணுவத்தின் செயற்பாடுகளும் கெடுபிடிகளும். மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இவ்வரசைக் கொண்டுவர வாக்களித்த சிலரின் மௌனங்களினூடான துக்கானுஸ்டானம் என்று இன்னும் இன்னும் எத்தனையோ நிலமைகள்.
இவற்றை எல்லாம் மூடி மறைக்க அரசு பயன்படுத்தும் நாடகம் இனவாதப் பேச்சுக்கள் ஆனால் இன்று நிலமை தலைகீழாக மாறி இருக்கின்றது. சிங்கள மக்கள் விழித்திருக்கின்றார்கள் இனவாதம் பேசுகின்ற மதகுருக்களை ஊடகங்கள் வாயிலாக விளாசித்தள்ளுகிறார்கள்.
இனவாதமும் இன்று கைகொடுக்காத நிலையில் அரசு திண்டாடுகின்றது. கொறோனா மாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி மக்கள் மனங்களை ஏதோ ஒரு இடத்தில் திசை திருப்பி தப்பிக்க முனைகின்றது அரசு ஆனால் இன்று மக்கள் உசாரடைந்து விட்டார்கள் அந்தக் கணக்குகளும் வீன்போய் இருக்கின்றது.
நாட்டை மூடி நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பெற்றோலிய தட்டுப்பாடுகளை மறைக்க முனைகிறது அரசு ஆனால் மக்கள் வழிப்படைந்திருக்கின்றார்கள் இப்படியே எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு இடத்தில் அரச இயந்திரம் சரிவர இயங்கமறுக்கின்றது.
இந்த நிலை தொடருமானால் இவ்வாட்சியை கொண்டுவந்த சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து இவ்வாட்சியாளர்களை விரட்டி அடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே நிதர்சனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.