தலைகீழாக மாறிய தமிழர்களின் நம்பிக்கை! மிகப் பிந்திய உதாரணமாகிய இரா.சம்பந்தன்
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலப் பகுதியில் அவர்களின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது, "நீங்கள் ஜனநாயக வழிகளைத் தவறவிடுகிறீர்கள்" என்பதாகும்.
அதாவது தமிழர்களின் தேசம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயகத் தளத்திலும் போராட வேண்டும். எல்லாவற்றையும் துப்பாக்கிகளின் வழியே அடைய முடியாது என்பதுதாம் அதன் விளக்கம்.
இங்கு "ஜனநாயக வழிகள்" எனக் குறிப்பிடப்பட்டது தேர்தல் அரசியலைத்தான். தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை இலங்கையின் அதியுச்ச ஜனநாயக அரங்கான நாடாளுமன்றத்திற்குக் கொண்டு போவது, ஒரு நாட்டின் நாடாளுமன்றிற்கு கிடைக்கும் சர்வதேசப் பார்வையையும், அங்கீகாரத்தையும் தமிழர்கள் விடயத்திலும் குவியச்செய்வது போன்றவற்றை தேர்தல் அரசியலின் வழியே செய்துகொள்ளலாம்.
இலங்கை மக்களை அசிங்கப்படுத்திய முடிவு! மாமனாரின் ஏக அஸ்திரத்தைப் பயன்படுத்த தயாராகும் ரணில்... |
இது ஒருவகையில் இனவிடுதலைக்கான பரப்புரை வடிவம்தான். உலக ஜனநாயக விழுமியங்களுக்கும், அறம்சார்ந்த நியமங்களுக்கும் உட்பட்டும் நடத்தப்படும் பரப்புரை. 2002ஆம் ஆண்டு தமிழர் தரப்பின் ஜனநாயகத் தூதர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 22 பேரிடமும் இந்த விடயமே முன்வைக்கப்பட்டது.
விடுதலையுணர்வின் பெரும் பிணைப்பு
களத்தில் புலிகள் பலமாக இருக்கும் வரையில் இந்தப் பரப்புரையைத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்தது. "வீட்டுக்கு நேர புள்ளடி விடுதலைக்கு இதுவும் ஒரு படி" எனத் தன்னை பரப்புரைப்படுத்திக் கொண்டது.
2009ஆம் ஆண்டு புலிகள் மெளனித்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கொள்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றே தமிழ் மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை விமர்சனத்துக்குள்ளாகியது. தமிழ் மக்களின் அவநம்பிக்கைக்குட்பட்டது.
தேர்தல் காலத்துக்கு சுவாரஷ்யம் சேர்க்கும் பரப்புரைச் சரக்குகளாக மாத்திரம் கூட்டமைப்பின் மெய்நோக்கங்கள் பயன்படுத்தப்பட்டன. தமிழர் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெறும் பொருள் விற்பனைக்கான துண்டுப்பிரசுரங்கள்தான் என்றவகையில் பயன்படுத்தப்பட்டன.
பொருள் விற்றுத் தீர்ந்ததும் அத்துண்டுப் பிரசுரங்கள் காற்றில் பறந்தன. கூட்டமைப்பின் இப்போக்கில் தமிழ் மக்கள் கடும் அதிருப்தி கொண்டிருந்த போதிலும் வேறு வழியே இன்றி அதனைத் தெரிவுசெய்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ் தேசியத்திற்கும் அதன் உருவாக்க காலத்தில் இடப்பட்ட உணர்வு ரீதியான அத்திவாரத்தை அசையவிடாது காத்துவந்தனர். ஏனெனில் அது வெறும் உணர்வல்ல.
தம் பிள்ளைகளின் உயிரால், உதிரத்தால் எழுதப்பட்ட விடுதலையுணர்வின் பிணைப்போடுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற பெயர் மக்கள் மனங்களில் நின்றது.
மக்களை மதியாத அகங்காரம்
இந்த விடயத்தினைக் கணக்கிலெடுக்காத கூட்டமைப்பினர், தாம் செய்வதெல்லாம் சரி என்றனர்.
அதற்காகவே மக்கள் வாக்களிக்கின்றனர், தம்மை வெற்றிவாகை சூடவைக்கின்றனர் எனவெல்லாம் பிணாத்தித் திரிந்தனர். தாம் என்ன செய்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் சிவப்பு மஞ்சள் போதும் ஏழேழு தலைமுறையும் வெல்வதற்கு என மமதை கொண்டு திரிந்தனர்.
இந்த மமதைப் போதையின் உச்சத்தில் நின்றபடியே கூட்டமைப்பு மேற்கொண்ட அத்தனை அரசியல் முடிவுகளும் கோணல்களாயின. இன விடுதலைக்கான நோக்கத்தை சிதைக்கும் சூழ்ச்சிகளாயின.
விடுதலை வேணவா கொண்டு போராடிய இனமொன்றை காட்டாற்றில் கரைத்துவிட்டன. இப்போக்கை கண்டு அதிருப்தியுற்ற மக்கள் மெல்லமெல்லாகக் கூட்டமைப்புக்கும் தமக்குமான ஆத்மார்த்தப் பிணைப்பை விடுவித்துக் கொண்டனர். கடந்த பதின்மூன்று ஆண்டுகளில் கூட்டமைப்பு சந்தித்துவரும் ஆசன வீழ்ச்சி அதனையே சுட்டிக்காட்டியது.
தவறான தலைமை
இவ்வாறானதொரு வீழ்ச்சியை சந்திப்பதற்கு கூட்டமைப்பின் ஆயுட்கால தலைவராக இருக்கும் இரா.சம்பந்தனே முழுமுதற் காரணமும் ஆவார். அரசியலை ஒரு தொழிலாக மட்டும் கொண்டியங்கும் ஓர் ஆளுமை கொள்கை வழியில் சேர்ந்தியங்கும், அதனைத் தொடர்ந்தும் கொண்டு செல்லும் என நம்பமுடியாது.
அதற்கு மிகப் பிந்திய உதாரணமாக இரா.சம்பந்தர் மாறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்குநர்களான விடுதலைப் புலிகள் மெளனித்ததன் பின்னர், அவர்கள் ஜனநாயக விரோதிகள் என்றார்.
கொடிய பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமைக்காகவென மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி கூறினார். புலிகள் இருக்கும்போது கிளிநொச்சியில் புலிக்கொடி ஏற்றியவர், புலிகள் மெளனித்ததும் இப்போதுதான் தான் தன் சொந்த ஊரான திருகோணமலைக்குச் சுதந்திரமாக வந்து போகிறேன் என்றார்.
இவ்வாறாக அவ்வப்போது புலிகள் மீதான வன்மத்தை வெளிப்படுத்தித் தன் அரசியல் கொள்கையும் கூட்டமைப்பின் உருவாக்க நோக்கமும் வேறுவேறென வகைப்படுத்திக்காட்டினார்.
இதனால் உள்ளொன்றும் புறமொன்றுமெனக் கொண்டியங்கும் தலைமையினால் இனவிடுதலைக்காகப் பயணிக்குமென நம்பப்பட்ட கூட்டமைப்பு தன்னைத் தேர்தல்கால கட்சிகளின் கூட்டாகப் பிரகடனம் செய்துகொண்டது.
முதற்கோணல்
2010 ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைக் கூட்டமைப்பு ஆதரித்தது. இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், பல இலட்சக்கணக்கானோர் வாழ்க்கையை நிர்க்கதியாக்கியதோடு போர் முடிவுக்கு வந்தது.
தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடியபோரை வெற்றிகொண்டமைக்காகவே 'பீல்ட் மார்ஷல்' பட்டத்தை சரத் பொன்சேகா பெற்றுக்கொண்டார்.
போரில் பட்ட விழுப்புண் ஆறும் முன்பே அப்போரை வழிநடத்தியவரை ஆதரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தமிழரிடம் கோரியது.
தன் அரசியல் பயணத்தில் தன் சொந்த மக்களுக்கே கூட்டமைப்பு செய்த முதற் துரோகமும் முதல் நோக்குத் தவறும் இதுவாகும்.
முண்டுகொடுத்த நல்லாட்சி
2015 ஆம் ஆண்டோடு ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியின் முதற்பாகம் நிறைவுக்கு வந்தது.
அதனை நிறைவுபடுத்திய பெருமையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பெற்றுக்கொண்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி இந்தப் பணியைச் செய்தது.
எனவே அந்த நல்லாட்சிப் படகைக் கவிழாமலும், ஒரு கல்லெறி விழாமலும் முன்னகர்த்திச் செல்லும் பணியைக் கூட்டமைப்பினர் செய்தனர். தன் தேசிய இனத்துக்கு எவ்வித களங்கங்களும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையெடுக்கும் ரணில் விக்ரமசிங்கவின் மொத்த சூழ்ச்சிக்குள்ளும் கூட்டமைப்பு சிக்குண்டு கிடந்தது.
ராஜபக்சக்கள் மீது உருவாகிவந்த சர்வதேச விசாரணைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் பணியை நல்லாட்சியின் நிழலிலிருந்து செய்தது. "போர்க்குற்ற விசாரணை முடிந்துவிட்டது", "உள்நாட்டுக்குள் கலப்பு நீதிமன்றப் பொறிமுறை அமைப்பதன் மூலமாகக் கடந்தகாலங்களுல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு நீதியைப் பெறமுடியும்" போன்ற மந்திர உச்சாடங்களை ஐ.நா வரை கொண்டு போனது கூட்டமைப்பு.
எவ்வித நீதியுமின்றி மக்கள் தெருவில் நின்று இறந்துகொண்டிருக்க வெந்த புண்ணில் வேல் குத்தியது. இதுவரையான காலமும் இலங்கை சுதந்திர தினத்தையும், இலங்கையின் தேசியக் கொடியையும் நிராகரித்து வந்த தமிழர்கள் மத்தியில் அந்தக் கொடியை உயர்த்திப் பிடித்து "இது எனக்கு விருப்பமான கொடியென்றார்" கூட்டமைப்பின் தலைவர்.
அரச விசுவாசத்திற்காக தமக்குக் கிடைக்கும் அற்ப சுகபோகங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்க நோக்கத்தை நல்லாட்சியிடம் முற்றாக இழந்தது.
கதவுகளை மூடிக்கொண்ட கோட்டாபய
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தயாரிப்பான சஜித் பிரேமதாஸவை ஆதரித்தது. சிங்கள இனத்தின் அதியுன்னதத் தேசிய வீரனாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட கோட்டபாய ராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் திரும்பியும் பார்க்கவில்லை.
கூட்டமைப்போடு சேர்ந்தால் தான் தோற்றுப்போவேன் என்பதில் தெளிவாக இருந்தார். பெளத்த சிங்கள பேரினவாத சிந்தனையால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சிங்கள மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டிய கூட்டமைப்பு, கடுமையான கோபத்தையே அம்மக்களிடம் சம்பாதித்திருந்தது.
நல்லாட்சி காலத்தில் சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் தரப்போடு இணைந்து கூட்டமைப்பினர் மேற்கொண்ட அரசியல் கோமாளித்தனங்கள் இந்தப் பகையுணர்வை அதிகப்படுத்தியிருந்தது. போர் முடிந்த கையோடு போர்வாளின் ரத்ததோடு வந்துநின்ற சரத் பொன்சேகாவை ஆதரித்தவர்களுக்கு கோட்டபாய ராஜபக்சவை ஆதரிப்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
தமிம் மக்களிடம் எதையாவது சொல்லி "உருட்டலாம்" என்று இறங்கியிருப்பர். எனவே வேறு வழியின்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கக் கோரினர்.கூட்டமைப்பின் ஆதரவு பெற்ற சஜித்தும் தோற்றுப்போனார்.
பெரமுனராகிய கூட்டமைப்பினர்
கோட்டபாயவினால் தனிச் சிங்கள ஆட்சியைக் கொண்டுநடத்த முடியவில்லை. சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட அந்தப் பதவி வெற்றிடமானது. நாடு எதிர்கொள்ளப்போகும் இவ்வாறதொரு அரசியில் நெருக்கடி நிலையை நன்கு கணித்து வைத்திருந்த ரணில் விக்ரமசிங்க துணை ஜனாதிபதி வரை முன்னேறியிருந்தார்.
அடுத்து ஜனாதிபதி பதவிதான் அவரின் இலக்காக இருந்தது. ஜனாதிபதி வேட்பாளர் நியமிப்புக்கு முன்பாகவே ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தக் காலப்பகுதியில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்கும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான "ஏதோவொரு விடயம் குறித்த பனிப்போர்" நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் பெரும் அக்கப்போராக மாறியிருந்தது.
இது கணவன் - மனைவிக்கிடையிலான சண்டை, சில நாட்களில் சரியாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு சஜித்தை மீட்பரெனவும், பொதுஜன பெரமுனவினரை எதிரிகள் எனவும் வரிந்து கட்டி நின்ற கூட்டமைப்பினர், இப்போது சஜித்தைக் கழற்றிவிட்டு, அவ்விடத்திற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், தனிச் சிங்கள கொடியோடு அலைந்தவருமான டலஸ் அழகப்பெருமவை ஆதரித்தனர்.
பொதுஜன பெரமுனவின் மறைமுக ஆதரவு பெற்ற ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றுவார் எனவும் இது 'கோட்டாகோகம' போராட்டக்காரர்களின் அரசியல் அபிலாசைகளைப் பாதிக்கும் எனவும், எனவே தாம் பொதுஜன பெரமுனவின் நேரடி வேட்பாளரான டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாகக் கூறினர்.
அது மட்டுமில்லாது டலஸ் ஜனாதிபதியானால் நிறைவேற்றுவதாக எழுத்தில் உறுதிப்படுத்திய எட்டு விடயங்கள் என்கிற பேஸ்புக் பதிவொன்றையும் பகிர்ந்தனர். எந்த சிங்கள அரசும் நிறைவேற்றாது எனத் தெரியும் எட்டு விடயங்களும் சமூக வலைதளங்களிலேயே மிகுந்த நகைப்புக்கிடமான உடன்படிக்கையாக மாறியிருந்தது.
இந்த உடன்படிக்கையை தேர்தலுக்கு முன்பு வெளியிட்டால் அது தம் அணி ஜனாதிபதி வேட்பாளரான டலஸ் அழகப்பெருமவின் வெற்றியைப் பாதிக்கும் என ரகசியம் காத்தது கூட்டமைப்பு. ஆனால் டலஸ் 52 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
நோக்கம் தவறிய முடிவுகள்
2009 ஆண்டின் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த மைத்திரிபால சிறிசேன தவிர அத்தனை ஜனாதிபதிகளும் தோற்றுப்போயிருக்கின்றனர். எனவே இதிருலிருந்து புலப்படுவதென்னவாயின் கூட்டமைப்பினர் ஜனாதிபதி தெரிவு விடயத்தில் தேவையற்று மூக்கை நுழைக்கின்றனர்.
சிங்கள மேலான்மைவாதத்தை நிர்வாகம் செய்வதற்கான தலைமையொன்றைத் தெரிவதாற்கான இடத்தில் தமிழர்களுக்கு என்ன வேலை என்கிற கணக்கில் இவர்கள் ஆதரிக்கும் சிங்களத் தரப்பை தோற்கடித்து விடுகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கத்திற்கு அப்பாலான இத்தகைய ஆதரவுகளும் அதன் விளைவான தொடர் தோல்விகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி, "நோக்கம் தவறிச் செல்கிறீர்கள்" என்பதையே சொல்கின்றன.
ஆனால் அதனைப் புரிந்துகொண்டு கொள்கை வழி நடக்குமளவிற்கு
அந்தக் கூட்டமைப்பினுள் அரசியல் ஆளுமைகள் இல்லை. அது ஈகோ
சண்டைக்காரர்களினதும், வாக்குப்புரள்வாளர்களினதும் கூடாரமாகிவிட்டது.