ஈழத்தமிர்களின் இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஈழத் தமிழர்கள் தாம் இழந்துபோன இறைமையை மீட்பதற்காக முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டது.
இதனை முதலாம் முள்ளிவாய்க்கால் என்போம். இராணுவரீதியாக விமானங்களையும், பல்குழல் பீரங்கிகளையும், கொத்துக் குண்டுகளையும், ரசாயன குண்டுகளையும், துப்பாக்கிகளையும் பயன்படுத்தி , மக்கள் குடியிருப்புகளை தாக்கி பெருந்தொகை மக்களை இடம்பெயரவைத்து , ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் அந்த மக்களை ஒதுக்கி, இடம் பெயர்ந்த மக்களை புலிகளுக்கு சுமையாக்கி, வகை தொகை இன்றி மக்களை படுகொலை செய்ததன் மூலம் விடுதலைப் புலிகளை முடக்கி எதிரி வெற்றி பெற்றான்.
இந்த வெற்றி என்பது இனப்படுகொலை வெற்றியே. முள்ளிவாய்க்காலில் பெற்ற இனப்படுகொலை வெற்றியை சிங்கள தேசம் யுத்த வெற்றியாக கொண்டாடுகிறது.
எதிரியின் இந்த யுத்த வெற்றி கொண்டாட்டத்திற்குள்ளால் நிகழும் அரசியலையே நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதுவே மிகவும் ஆழமானதும், அபயகரமானதும், தமிழ் மக்களை இலங்கை தீவுக்குள் முற்றாக அழித்தொழிக்கின்ற இரண்டாம் முள்ளிவாய்க்காலாகவும் அமைகிறது. ஈழத் தமிழருடைய சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இரண்டு வழிமுறைகளை கொண்டிருந்தது.
ஒன்று அஹிம்சை போராட்டம் (அரசியல் போராட்டம்) இரண்டாவது ஆயுதப் போராட்டம். இந்த இரண்டிலும் முதலில் அஹிம்சை போராட்டம் 40. ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டது . அதனால் எதுவும் அடைய முடியாது என்ற நிலையில் இரண்டாவது வழிமுறையாக ஆயுதப் போராட்டம் என்ற கொள்கை இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் இலக்கை அடைவதற்காக கைக்கொள்ளப்படுகின்ற கொள்கைகள் காலத்திற்கும், தேவைக்கும், அதேநேரம் சர்வதேச அரசியல் போக்கிக்கும், பிராந்திய அரசியல் சூழலுக்கும் ஏற்ற வகையில் பொருத்தமானவற்றை அந்தந்த காலத்தில் தெரிவு செய்வது அரசரவியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமையும்.
இது தவிர்க்க முடியாத அரசியல், ராஜதந்திர மூலோபாயமாகவும் அமையும். முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் என்ற கொள்கை முதற்கட்டமாக தோற்கடிக்கப்பட்டது. எதிரி தமிழ்மக்கள் மீது மிகப் பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி இனப்படுகொலையின் வாயிலாக ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது.
தமிழீழ அரசியல் தலைமைகள்
ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் அரசியல் ரீதியாகவும், தமிழ் தேசிய சிதைவு, சீரழிவு என்பவற்றை சிங்களதேசம் வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அழிப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் அவர்கள் அடைந்துவிட்டார்கள். அதேநேரம் தமிழ் தலைமைகள் எனப்படுவோர் அனைவரும் அனைத்து வழிகளிலும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு தோற்கடிக்கப்பட்டதை இரண்டாம் முள்ளிவாய்க்கால் என்று சொல்வதே பொருந்தும். விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனம் என்பது ஆயுதப் போராட்டம் என்ற கொள்கையை முடக்கியது என்பது உண்மைதான். அதுமட்டுமல்ல யுத்தத்தில் ஏற்பட்ட அழிவு என்பதும் மிகப்பெரியதுதான். அது தமிழ் மக்களை உளவியல் ரீதழயாக பாரதூரமாக பாதித்ததுதான்.
ஆனாலும் முள்ளிவாய்க்காலின் தோல்விக்கு பின்னர் தமிழ் அரசியல் தலைமைகள் எல்லாமே முடிந்துவிட்டது என்னு எண்ணியது மிகத்தவறான முடிவாகும். அத்தோடு இனி சரணாகதி அரசியலுக்கு செல்வதுதான் சரி என்ற முடிவுக்கு மனதார வந்துவிட்டார்கள் என்பதே கசப்பான உண்மையாகும்.
அதனாற்தான் ""தனிநாட்டை கைவிட்டு விட்டோம் சமஸ்டிதான் தமிழ் மக்களுக்கான தீர்வு"" என்றும் ""பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு"" என்றும் ""ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு"" என்றும் ""ஒரு நாடு இரு தேசம்"" என்றும் ""உள்ளக நிர்ணயம்"" என்றும் ""உள்ளக சமஸ்டி"" என்றும் பலவாறாக சொல்லத் தலைப்பட்டு விட்டார்கள்.
இது இந்தத் தலைவர்களின் அரசியல் திடசங்கர்ப்பத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. அரசியல் தெளிவின்மையை புலப்படுத்துகிறது. அரசியல் இலக்கை, அரசியல் பார்வையை, அரசியல் முன்னெடுப்பை கேள்விக்குள் ஆக்குகிறது. தமிழீழ அரசியல் தலைமைகள் யாரும் எந்தக் கொள்கையிலும் சரியாகவும், உறுதியாகவும் இல்லை என்பதையே இது இனங்காட்டுகிறது.
எதிரியின் முள்ளிவாய்க்கால் இரண்டின் பிரதான நோக்கம் என்பது தமிழர்கள் தேசிய ரீதியாக எழுச்சி பெறக்கூடாது என்பதுதான். அதனை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்குமான அனைத்து வழிமுறைகளையும் எதிரி அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், பிரச்சார உத்திகளூடாகவும் கையாளுகிறான்.
ராணுவ ரீதியாக பார்த்தால் விடுதலைப் புலிகள் எங்கெல்லாம் தமது பலமான படைத்தளங்களை வைத்திருந்தார்களோ, எங்கெல்லாம் பயிற்சி முகாம்களை வைத்திருந்தார்களோ அவையெல்லாம் தாயகப் பிரதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாயப் பிரதேசங்களாக இருந்தவை.
குழப்ப நிலை
அவற்றினை எதிரி இனம் கண்டு அங்கெல்லாம் இப்போது தமது ராணுவ முகாம்களை பிரம்மாண்டமாக வெளியே தெரியக்கூடியவாறு தமிழ் மக்கள் பார்த்து அச்சப்படக்கூடியவாறு நிறுவி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல விடுதலை புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களின் மீது படை முகாம்களை நிறுவி இருக்கிறார்கள். இது சிங்கள ராணுவம் எதற்கும் அஞ்சாத வீரம் மிகுந்த படை என்பதை தமிழ் மக்களுக்கு காட்டுவதற்காகவே.
இது தமிழ் மக்களின் உளவரணை பெரிதும் பாதித்திருக்கிறது. தமிழ் மக்களை அச்சத்தோடு வாழ வைத்திருக்கிறது. அடுத்து போலீஸ் நிலையங்கள் இந்த பெரும் ராணுவ முகங்களுக்கு அருகிலேயே அமைந்து அவர்களுக்கு பக்கபலமாக அமைக்கப்பட்டிருப்பதனால் தமிழ் மக்களை நினைத்தவாறு பயன்படுத்தவும் ஆட்டிப் படைக்கவும் உறுதுணையாக இருக்கிறது.
அது மட்டுமல்ல நிர்வாக ரீதியாக தமிழ் தெரியாத சிங்கள போலீசாரை வைத்து தமிழ் மக்களை அடக்கவும், ஒடுக்கவும், அநாகரிகமாக நடத்தவும் அதற்கான நிர்வாக ஒழுங்கையும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் தமிழ் மக்களின் உழவுரணை பாதிப்பது மாத்திரமல்ல நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் தொகையை அதிகரிக்கவும் செய்திருக்கிறது.
சிவில் நிர்வாக ரீதியாக பார்த்தால் தமிழர் தாயகத்தின் எல்லைப்புற மாவட்டங்களில் நிர்வாக அதிகாரிகளை சிங்கள இனத்திலிருந்து அல்லது ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களையோ நியமிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச சலுகைகளைகூட பெற முடியாமலும் மாற்றினத்தவர்களுக்கு பெரும் சலுகைகளை, முன்னுரிமைகளையும் வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் உளவரணை பெரிதும் உடைத்திருக்கிறார்கள்.
அடுத்து புலனாய்வுத்துறை மற்றும் சமூகவிரோத கும்பல்களை பயன்படுத்தி தமிழ் மக்களிடையே அச்சத்தையும் குழப்ப நிலையில் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு தேசிய சிந்தனையை வளரவிடாமல் தடுப்பதோடு தொடர்ந்து தமிழ் மக்களை ஒரு பதட்ட நிலையில் வைத்திருக்கும் உத்தியை கையாள்கிறார்கள்.
இதில் ஒரு பகுதி தான் போதை வஸ்து விற்பனையும், பயன்பாட்டை ஊக்குவிப்பதும். அவ்வாறே தமிழர் தரப்பபில் புதிய கட்சிகளை உருவாக்க துாண்டுவது, கட்சிகளுக்கிடையே மோதல்களை உருவாக்குவது, கட்சிகளுக்குள் மோதல்களை உருவாக்குவது, கட்சிகளை உடைப்பது, ஆசை வார்த்தை காட்டி கட்சி பிரமுகர்களை விலைக்கு வாங்குவது, சிங்கள தேசியக் கட்சிக்குள் இணைப்பது என தமிழர் அரசியலை உடைத்து சின்னா பின்னப் படுத்தும் மூலோபாயத்தையும் எதிரி கையாள்கிறான்.
தமிழர்களுடைய ஐக்கியத்தை உடைப்பது தான் தமிழ் தேசியத்தை அழிப்பதற்கான பிரதான ஆப்பாக சிங்கள தேசம் கையாள்கிறது. கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு வெளியேயும் ஓடுகாலிகளை விலைக்கு வாங்கி அவர்களையே தமிழ் மக்களுக்கிடையே செருகிய ஆப்பாக எதிரி பயன்படுத்துகிறான்.
தமிழ்த் தேசிய இனம்
அத்தோடு தமிழர் தாயகத்தில் புதிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்குவது, தாயகத்தின் எல்லையோர மாவட்டங்களின் சில பகுதிகளை சிங்கள மாவட்டங்களுடன் இணைப்பதன் மூலம் தாயக நிலப்பரப்பை சிறு சிறுதாக அரித்தெடுக்கப்படுகிறது.
அத்தோடு புதிய பௌத்த விகாரங்களை உருவாக்குவது மற்றும் தமிழர்களுடைய தொல்லியல் எச்சங்களை, தொல்லியல் தளங்களில் பௌத்த சின்னங்கள் இருப்பதாக கூறி அவற்றை தொல்லியல் பிரதேசங்களாக அறிவித்துவிட்டு அங்கே பிரம்மாண்டமான பௌத்த விகாரங்களை கட்டுவது,: தமிழர் தாயகத்தின் முக்கிய சந்திகள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பிரம்மாண்டமான பௌத்த தூவிகளை கட்டுவதன் மூலம் தமிழ் மக்கள் எங்குதிரும்பி பார்க்கின்ற போதும் அவர்களின் கண்ணில் பௌத்த விகாரங்களை தென்பட வைத்து உளவியல் ரீதியாக தம்மீது மேற்கொள்ளப்படுகின்ற ஆக்கிரமிப்புகளை இதுவே இயல்பு என்ற நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் அதை தமிழ் மக்களிடையே இயைபாக்கம் பெற வைப்பது.
இதன் மூலம் அடுத்த தலைமுறை தமது சுதந்திரம், விடுதலை, தேசியம் என எதையும் எண்ண முடியாத உளவியல் மலட்டுத்தன்மையை உருவாக்குவது. இதுவே தமிழ் மக்களின் இரண்டாம் முள்ளிவாய்க்கால் சென்று கொள்ளப்பட வேண்டும்.
எனவே இத்தகைய பிரம்மாண்டமான ஈழத் தமிழர் அழித்தொழிப்பு நாசகாரத் திட்டத்தை உடைத்தெறியவும், தமிழ் மக்களை ஐக்கியப்படுத்தவும், தமிழ் தேசியத்தை மீள்கட்டுமானம் செய்யவும், தமிழ் மக்களின் உளவுரணை வலுப்படுத்தவும் வேண்டியது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும்.
எனவே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய அனைத்து வகையான வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்துவதற்கான மூலோபாயத்தை இன்றைய நிலையில் தமிழ்த் தேசிய இனம் உடனடியாக வகுக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் இலங்கை அரசியல் யாப்புக்குள் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்துவதற்குமான ஒரு களம் இப்போது கனிந்துள்ளது.
அதுதான் இலங்கை ஜனாதிபதித் தேர்தல். இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான அல்லது அதற்கான படிக்கட்டாக, கொழுகொம்பாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை தமிழ் மக்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
இலங்கை அரசியல் யாப்பை தமிழ் மக்களாகிய நாம் எதிர்க்கிறோம், தமிழ் மக்களின் அனுசரணை இன்றி உருவாக்கப்பட்ட இந்த அரசியல் யாப்பை நாம் நிராகரிக்கிறோம். ஆனாலும் இன்று இலங்கை தீவில் நடைமுறையில் இருக்கின்ற இந்த அரசியல் யாப்புக்குள் ஒரு ஊடறுப்புத் தாக்குதல் அரசியலை நடத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இந்த யாப்பைப் பயன்படுத்தி இந்த யாப்பின் முதுகெலும்பான தேர்தலைப் பயன்படுத்தி இந்த யாப்பை தாக்கும் ஓர் உத்தியாகும். ஆகவே இலங்கை அரசியல் யாப்பிற்குள் நின்று கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை ஒன்று குவிப்பது, தமிழ் மக்களை ஐக்கிய படுத்துவது, தமிழ் மக்களின் ஆணையைப் பெறுவது, தமிழ் மக்கள் தமது இலட்சியத்தை கைவிடவில்லை என்பதை பறைசாற்றுவது, அதனை சர்வதேச உலகிற்கு வெளிக்காட்டுவது என்பவற்றை அடைவதற்காக தமிழ்மக்கள் ஒன்றிணைந்து இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும்.
சிங்கள தேசத்தின் ஜனாதிபதி
இவ்வாறு நிறுத்துவதன் மூலம் சிங்கள தலைவர்களை ஜனநாயக ரீதியில் வலுவற்றவர்களாக தோற்கடிப்பது, சிங்களத் தலைவர்களின் வெற்றியை மல்லினப்படுத்துவது, சிங்களத் தலைவர்களின் வெற்றியை சவாலுக்கு உட்படுத்துவது அல்லது அர்த்தமற்ற தாக்குவது ஆகியவற்றை தமிழ் மக்களால் தமது தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அந்த வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிப்பதன் மூலம் செய்து காட்ட முடியும்.
இவ்வாறு ஒரு தமிழ் பொது வேட்பாளரின் மூலம் பெறக்கூடிய நன்மைக்கு எதிராக பொது வேட்பாளரை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ யாரெல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கவில்லையோ அவர்கள் யார்? உண்மையில் அவர்கள் சிங்கள தேசத்தின் சேவகர்கள், சிங்களத்தின் கையாட்கள், தமிழ் தேசியத்தின் மீது சிங்கள தேசத்தால் செருகப்பட்ட ஆப்புகள்தான் இவர்கள் என்பதையும் இனங்காட்டி தமிழ் மக்களிடையே ஊடுருவி இருக்கின்ற இந்தபுல்லுருவிகளையும், வேடதாரிகளையும் துரத்தி அடிக்க முடியும்.
தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டு இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் சிங்கள தேசத்தின் தலைவனை தெரிவு செய்வதில் சிக்கலை உருவாக்க வேண்டும். அவ்வாறு தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளருக்கு மட்டும் தமது வாக்கை அளிப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாக்கை ஒன்று குவித்து பலப்படுத்துவோம். தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்துவோம். தமிழ் தேசியத்தை பலப்படுத்துவோம்.
தமிழ்த் தேசியத்தை மீள் புனரமைப்புச் செய்வோம். அதேநேரம் வாக்களிக்கும் போது இரண்டாம் விருப்ப தேர்வு வாக்கை அளிக்காமல் தவிர்ப்பதன் மூலம் முழுமையான ஒரு பகிஷ்கரிப்பை நடத்திக் காட்டுவோம். சாதாரணமான பரிஷ்கரிப்பினால் கிடைக்கும் வெற்றி என்பது அரைகுறையானது.
ஆனால் தமிழ் வாக்காளர் அனைவரும் இரண்டாவது வாக்கை அளிக்காமல் தவிப்பதன் மூலம் முழுமையான ஒரு தேர்தல் பரிஷ்கரிப்பை வெற்றிகரமாக செய்து காட்ட முடியும். அதாவது சிங்கள தேசத்தின் ஜனாதிபதியை தெரிவு செய்வதை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை வாக்கு எண்ணிக்கையினால் காட்ட முடியும்.
இங்கே தமிழ் தரப்பில் சிலர் பகிஷ்கரிப்பின் மூலம் சிங்களத் தலைவர்களை எதிர்த்து காட்டுவோம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் நேரடியான பகிஷ்கரிப்பானது அதாவது தேர்தலில் வாக்களிக்காமல் தவிர்ப்பது என்பது சிங்கள தலைமைகள் இலகுவாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை கொடுப்பதாகவே அமையும். அவ்வாறு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவது என்பது சிங்களத் தலைவர்களுக்கு சேவகம் செய்வதாகவே, அவர்களுக்கு உதவி புரிவதாக அமையும். எதிரிக்கு நன்மை பயக்கக்கூடிய எதனையும் தமிர்கள் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம்.
பகிஸ்கரிக்குமிடத்து அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்கில் அரைவாசி வாக்கைப் பெறும் சிங்கள வேட்பாளர் அறுதிப் பெரும்பான்மை வாக்குடன் முதலாவது சுற்றில் ஜனாதிபதியாகிடுவார். ஆனால் பொதுவேட்பாளரை நிறுத்தி இரண்டாம் விருப்பத் தெரிவு வாக்கை நிராகரிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்கள் முதலாம் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியடைந்து இரண்டாம் வாக்கு எண்ணிக்கைக்குச் சென்று தோல்வியடைந்து அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையை அடைந்து வெறும் சாதாரண பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெறும் சூழலுக்கு சிங்களத் தலைவர்களை தள்ளுவோம்.
இதனால் தெளிவாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி என்பதை அல்லது சிங்கள தேசத்தின் தலைவன் என்பதை சர்வதேச உலகத்துக்கு வெளிக்காட்டி தமிழ் மக்களின் தேசிய உணர்வை உலகுக்கு வெளிக்காட்ட. முடியும்.
சிங்கள தேசத்தின் யாப்பை பயன்படுத்தி, அவர்களுடைய தலைவனை தெரிவு செய்யும் தேர்தலைப் பயன்படுத்தி அத்தேர்தலில் ஒரு தமிழ் மகனை நிறுத்தி போட்டியிட்டு அவர்களுடைய யாப்பின் முதுகெலும்பான இலங்கை ஜனாதிபதியை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை உலகத்துக்கு காட்ட முடியும்.
இதன் மூலம் சிங்கள அரசு குலைக்க முயலும் தமிழ்த் தேசியத்தை ஐக்கியப்படுத்திப் பலப்படுத்துவதன் வாயிலாக விடுதலைக்கான பாதையை முன்னெடுக்க முடியும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 09 June, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.