நில ஆக்கிரமிப்பை தடுக்க தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்
தமிழ் மக்களை முற்றாக ஒடுக்குவதற்கான பெரும் வாய்ப்பாக முள்ளிவாக்கால் இனப்படுகொலை வெற்றியைச் சிங்கள அரசு பார்க்கிறது.
அதாவது தமிழீழ மண்ணில் அனைத்து வகையான சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொள்வதற்கேற்ற ஒரு மடைதிறப்பாக முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டமையானது அமைந்ததாக எண்ணி சிங்கள அரசு கட்டற்றுச் செயற்படுகிறது.
தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசையை அடைவதற்காக சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலான தமது சக்திக்கும் கொள்ளளவுக்கும் மிஞ்சிய அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் முன்னிறுத்தி ஆயுதப் போராட்டத்தை நடத்தியும் முள்ளிவாய்க்காலில் அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் எதிரியிடம் நிர்வாணமாக சரணடைய வைக்கப்பட்டார்கள். இவ்வாறு அவமானகரமாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் தொகுதியை யுத்தத்தின் பின் அரவணைப்பதும், கௌரவமாக நடத்துவதும், அவர்களுடைய இயல்பு வாழ்க்கையை செப்பனிடுவதற்கான வழிமுறைகளை செய்வதும்தான் சமாதானத்திற்கும், சகவாழ்வுக்குமான வழியாகும்.
அவ்வாறு கௌரவமாக நடத்தப்பட்டால் மட்டுமே சமாதானமும் சகவாழ்வும் நிலைக்கும். முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களே தவிர வெற்றிகொள்ளப்படவில்லை.
தமிழர்களின் மனங்கள் வெல்லப்படவில்லை என்பதை இன்றைய பௌத்த பேரினவாத அரசின் நிலஅபகரிப்பு செயற்பாடுகள் நிரூபிக்கிறது.
முதலாம் உலகப் போரின் போது அவமானகரமாக தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனியையும் இத்தாலியையும் வெற்றி பெற்றவர்களால் கௌரவமாக அரவணைக்க தவறியதன் விளைவுதான் வரலாற்று இயக்க உந்துவிசை ஹிட்லரையும் முசோலினியையும் மிகக் கொடுமையாகப் பிரசவித்தது.
தமிழ் மக்களுக்கு ஒரு சாதக தன்மை
அதுவே இரண்டாம் உலகப் போரை தோற்றுவித்து பேரழிவை தந்தது என்பதையும் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக சிங்கள பௌத்த பேரினவாத அரசு வட-கிழக்கில் மேலும் தமிழர்களை ஒடுக்குவதற்கான அனைத்து வகையான அரச இயந்திரங்களையும் பயன்படுத்தி ஒடுக்க முனைகின்றது.
இந்தச் சூழலில் இலங்கை தீவுக்குள் தமிழ் மக்கள் எவ்வாறு போராட வேண்டும் என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுந்து நிற்கிறது. இலங்கை தீவுக்குள் தமிழ் மக்கள் போராடுவதற்கான வாய்ப்புகளையும் அதற்கான மூலோபாயத்தையும் சரிவர கணிப்பிட்டுத்தான் எதிர்கால அரசியலை தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள் தமக்கான தனியரசை இழந்து நான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்டது. இந்த நிலையில் மீண்டும் தமது அரசை நிறுவுவது என்பது சிக்கலானதுதான். எனினும் ஈழத் தமிழ் மக்களுடைய தாயக நிலம் அமைந்திருக்கக் கூடிய புவியியல் அமைவிட கேந்திரத் தன்னை தமிழ் மக்களுக்கான அரசை நிறுவுவதற்கு இன்றைய உலகளாவிய மற்றும் பிராந்திய அரசியல் பொருளியல் போக்கு என்றும் இல்லாத அளவு சாதகமான வாய்ப்பையும், வழிவகையையும் இப்போது கொண்டிருக்கிறது.
இந்த வாய்ப்பு நீண்ட காலத்திற்கு தொடர்ந்து நிலைக்குமென்று கூறிட முடியாது. உலக ஒழுங்கு மாற்றமடைகின்ற காலச்சூழல் தமிழ் மக்களுக்கு ஒரு சாதகத் தன்மையை இப்போது தந்திருக்கிறது.
இந்த சாதகத் தன்மையை சரிவர பயன்படுத்த வேண்டியது தமிழ் அரசியல் தலைமைகளுடைய தலையாய கடமையாகும். ஒரு அரசுக்கு நிலம், மக்கள், இறைமை, அரசாங்கம் என்ற நான்கு அம்சங்கள் இன்றியமையாதவை.
ஈழத்தமிழரிடம் அரசாங்கமும், இறைமையும் பறிபோய்விட்டது. இந்நிலையில் மக்களையும், நிலத்தையும் பாதுகாப்பதே இன்றைய உடனடி தேவையாகும். மக்களும் நிலமும் இன்றி ஒரு அரசு நிலைபெற முடியாது. மக்களும் நிலமும் இன்றி அரசாங்கமும் இறைமையும் தோற்றம்பெற முடியாது.
எனவே ஈழத் தமிழர்கள் தமக்கான அரசை அல்லது தமது சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டுவதற்கு "நிலமும் மக்களும்" இன்றியமையாதது. தமிழர் தாயக நிலப்பரப்பை தமிழ் மக்கள் இழக்காமல் இருப்பதும் அதே நேரத்தில் தாயக நிலப்பரப்பில் தமிழ் மக்கள் தொடர்ந்து வாழ வேண்டியதும் அவசியமானது.
இந்தப் பின்னணியிற்தான் இன்று தமிழர் தாயகத்தை இல்லாத ஒழிக்கும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதம் நில ஆக்கிரமிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. டி எஸ் சேனநாயக்க தொடக்கம் இன்றைய ரணில் வரை தமிழர் தாயகத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதும் தமிழர் தாயகத்திலிருந்து தமிழ் மக்களை புலம்பெயரச் செய்வதற்கான அனைத்து சூழல்களையும் கச்சிதமாக திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது.
இது தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளுக்கு சாவு மணி அடிக்கின்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அரசியல் புவியியல் சதி ஏற்பாடாகும். டி எஸ் சேனநாயக்க வறண்டவலய குடியேற்றம், வறண்டவலய அபிவிருத்தி, பசுமைப் புரட்சி என தமிழர் தாயகத்தை சிதைக்கின்ற கபளீகரம் செய்கின்ற சிங்களக் கொடியேற்றங்களை மிகக் கச்சிதமாக ஆரம்பித்தார்.
சிங்களவர்களை வடகிழக்கில் குடியேற்ற ஆரம்பகட்ட அடிக்கட்டுமானங்கள்
அதன் தொடர்ச்சியை இன்று ரணில் உட்படச் சிங்களத் தலைவர்கள் தொல்பொருள் ஆய்வுகள் என்றும், பௌத்த தொல்லியல் தளங்கள் என்றும், புனித பிரதேச என்றும் தமிழர் தாயகத்தில் நில ஆக்கிரமிப்பு செய்வதோடு, பௌத்த விகாரங்களை கட்டுவதற்கான பெருந்தொகை காணிகளை வழங்கி எதிர்காலத்தில் பெருந்தொகையான சிங்களவர்களை வடகிழக்கில் குடியேற்றுவதற்கான ஆரம்பகட்ட அடிக்கட்டுமானங்களை மிகவும் வேகமாக செய்யத் தொடங்கி விட்டனர்.
இது மிகவும் ஆபத்தானது. தமிழர் தாயகத்தை இல்லாது ஒழிக்கின்ற மூலோபாயத்தை கொண்டது. தமிழர் தாயகத்தின் கிழக்கு மாகாணம் தெளிவாகவே கல்ஓயா, அல்லை -- கந்தளாய் வெட்டப்பட்டுச் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டு சிதைக்கப்பட்டுவிட்டது. வடக்குக்கும் கிழக்குக்கும் நடுவேயான.
வெலிஓயா சிங்கள குடியேற்றத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத் தொடர்பு அறுக்கப்பட்டுவிட்டது. இப்போது வடக்கு நோக்கி தமிழர் தாயத்தை சிதைக்கும் செயற்பாடுகளில் முனைப்பு காட்டத் தொடங்கிவிட்டனர்.
பௌத்த தொல்லியல் தலங்கள் என்று அவற்றில் பௌத்த விகாரர்களை கட்டியும் வருகின்றனர். இங்கே வரலாற்று ரீதியாக வடக்கில் இருக்கின்ற பௌத்த தொல்லியல் தலங்களை பக்கச் சார்பின்றி ஆராயப்பட வேண்டும்.
உண்மையில் இலங்கையின் வட -கிழக்கின் பெரும்பகுதியில் காணப்படுகின்ற பௌத்த தொல்லியல் சின்னங்கள் இன்று சிங்கள மக்கள் பின்பற்றும் தேரவாத பௌத்தத்துக்குரிய தொல்லியல் சின்னங்கள் அல்ல. அவை மகாயன பௌத்த தொல்லியல் சின்னங்களே.
இந்த மகாயண பௌத்தத்தை சிங்கள மக்கள் பின்பற்றியது கிடையாது. இலங்கை வரலாற்றில் மகாசேன மன்னன் காலமான கிபி 247 தொடக்கம் 304 காலத்தில் மாத்திரமே அதுவும் அனுராதபுரத்தின் அபயகிரி விகாரையில் மாத்திரமே பின்பற்றப்பட்டது.
அத்தகைய மகாயான பௌத்த விகாரையான அபயகிரி விகாரை இன்றும் பாழடைந்தபடி கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுகிறது. தேரவாத பௌத்தமும் மகாயான பௌத்தமும் ஒன்றுக்கு ஒன்று பகமை கொண்ட மதப்பிரிவுகளே தவிர அவை இரண்டும் ஒன்றல்ல.
குறிப்பாக மன்னன் மகாசேனனை மகாயானத்திற்கு மதம் மாற்றிய மகாயானப் பிரிவின் தலைமைக் குருவான சங்கமித்த தேரரை ( இவர் தமிழன்) தேரவாதப் பிரிவினர் படுகொலை செய்தனர் என்ற ஜீவமரணப் போராட்டம் இரு பிரிவினருக்கும் இடையில் நடந்த வரலாறும் கவனத்திற்குரியது.
வடக்கில் கிமு 3ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே மகாயான பௌத்தம் நிலை பெற்றிருந்தது என்பது கந்தரோடை தொல்லியல் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட நவீன தொல்லியல் ஆய்வின் முடிவு.
தமிழர் தாயகத்தின் எல்லை
வட-கிழக்கு தமிழ் மக்கள் மகாயான பௌத்தத்தை பின்பற்றி வாழ்ந்தார்கள் என்பதும் வரலாற்று உண்மை. அந்த மகாயான பௌத்தத்தை தமிழக மக்களும் பின்பற்றினார்கள்.
தமிழிலே இருக்கின்ற சிலப்பதிகாரம், மணிமேகலை ,குண்டலகேசி ஆகியவை உட்பட ஐந்து காப்பியங்களும் பௌத்த காப்பியங்களே. தமிழ் இலக்கியப் பரப்பில் காணப்படுகின்ற அனைத்து வகையான அறநூல்களிலும் பௌத்த கருத்துக்கள் மேலோங்கி உள்ளன என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்று வட-கிழக்கில் உள்ள மகாயான பௌத்த சின்னங்கள் சிங்களவர்களுடையது என்று சொன்னால் தமிழகத்தில் ஏராளமான பௌத்த சின்னங்கள் இன்றும் காணப்படுகின்றன. அதனையும் இந்த சிங்கள அரசு அங்கும் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா?
ஆகவே இங்கே வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள் கடைப்பிடித்த மகாயான பௌத்த மதத்தை கிபி 7ம் நூற்றாண்டின் பின்னர் படிப்படியாக கைவிட்டு கிபி 10ம் நூற்றாண்டில் அறவே பௌத்த மதத்தை கைவிட்டு விட்டார்கள்.
தமிழர்கள் பின்பற்றிய மகாயான பௌத்த மத சின்னங்கள்தான் இன்றும் வடக்கில் இருக்கின்றன. எனவே அந்த பௌத்த சின்னங்களை தொல்லியல் என்ற அடிப்படையில் பாதுகாப்பதும் அவற்றை நூதன சாலைகளில் வைத்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதும்தான் சரியானது. வரலாற்று சின்னங்களையும் மரவுரிமைச் சின்னங்களையும் பேணுவதற்கு நூதன சாலை போதுமானது.
ஆனால் வடக்கில் தமிழ் மக்களால் கைவிடப்பட்ட மகாயான பௌத்த சின்னங்களை சிங்கள தேரவாத பௌத்தர்கள் தங்களுடையதென உரிமை கொண்டாடுவது மிகவும் அபத்தமானது. இது வேண்டுமென்றே தமிழ் மக்களுடைய தாயக பிரதேசத்தில் இந்த ஒரு சிங்கள பௌத்தர்களும் வாழாத ஒரு பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அந்தப் பகுதியில் புதிய பிரமாண்டமான தேரவாத பௌத்த விகாரங்களை கட்டுவது என்பது முற்றிலும் ஏற்புடையதல்ல இது ஒரு வகை ஆக்கிரமிப்பாகவே கருதப்பட வேண்டும்.
ஒரு மக்கள் கூட்டத்தின் இயல்பு வாழ்க்கையை குழப்புவது, அந்த மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது, அந்தப் பிரதேசத்தில் இருந்து அந்த மக்களை வெளியேற்றுவதற்கான தூண்டுதலை ஏற்படுத்துவது, இத்தகைய அனைத்து ஏற்பாடுகளும் இனவழிப்பு என்ற சாராம்சத்துக்குள்ளேயே அடக்கப்படுபவை.
தமிழர் தாயகம் என்கின்ற போது வடகிழக்கின் நிலப்பரப்போடு அந்த நிலப்பரப்பை ஒட்டியுள்ள கடற்பரப்பும் தமிழர் தாயகத்துக்குள்ளே அடங்கும் இலங்கைத் தீவின் மூன்றில் இரண்டு கடற் பரப்பும் கடற்கரையோரம் தமிழர் தாயகத்துக்குள் அடங்குகின்றன.
இந்த தமிழர் தாயக கடற்கரை ஓரத்தில் 12 மைல்கள் அகலமான கடற் பரப்பும் தமிழர் தாயக நிலம் என்ற வரையறைக்குள் அடங்கும். இந்தக் கடற் பரப்பின் வளங்களை நுகர்வதும் அனுபவிப்பதற்குமான தரமீக உரிமையும் ஈழத் தமிழர்களுக்கே உண்டு.
ஆனால் ஈழத் தமிழர்கள் இந்தக் கடற்கரையோர பலன்களை பயன்படுத்துவதற்கு தடையாக தாயக கடற்கரையோரங்களில் பெருமளவு கடற்படையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடற்படை பாதுகாப்பு வளையம் என்றும், தடை செய்யப்பட்ட கடற் பரப்பு என்றும் கரையோர மீனவர்கள் கரையோர தமிழ் மினருடைய அன்றாட செயல்பாடுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
அவருடைய இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல இப்போது தமிழர் தாயகத்தின் கரையோரங்களில் முளைத்திருக்கின்ற புதிய சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயகத்தின் கடல் வளங்களை அபகரிக்கும், சூறையாடும் நோக்கங்களைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இப்போது இலங்கையின் மொத்த ஆயுதப் படைகளில்( 3, 46 000) மூன்றில் இரண்டு பகுதி படையினர் ( 2, 35, 000 )தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு என்ற இரண்டு மாகாணங்களிலும் நிலை கொண்டுள்ளனர் . ஏனைய ஏழு மாகாணங்களில் மூன்றில் ஒரு விகித ஆயுதப் படையினர்தான் நிலை கொண்டுள்ளனர்.
இது தமிழர் தாயகத்தில் மொத்த ஜனத்தொகையில் இரண்டுக்கு ஒன்ற என்ற விகிதத்தில் அமைந்திருக்கிறது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆயுதப் படையினருடைய செறிவுதான் தமிழ் மக்களை தொடர்ந்தும் அச்சத்துக்குள் உள்ளாக்கி கொண்டிருக்கிறது.
இதன் வெளிப்பாடுதான் தமிழர் தாயகத்திலிருந்து இளைஞர், யுவதிகளை தொடர்ந்து இலங்கை தீவைவிட்டு மேற்குலக நாடுகளை நோக்கி புலம்பெயர வைக்கிறது. இத்தகைய உள்ளக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இலங்கை தீவுக்குள் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக ஒரு பலமான போராட்டத்தை முன்னெடுப்பது அவசரமும் அத்தியாவசியமானது அவ்வாறு ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு செயற் திட்டத்தின் கீழாவது ஒன்று சேர்ந்து போராட வேண்டும், போராட. முன்வர வேண்டும்.
இப்போது தமிழ் மக்களுக்கு முன்னே உள்ள மிக அபயகரமான பிரச்சனை என்னவெனில் நில ஆக்கிரமிப்பும் தமிழர் தாயகத்தில் இருந்து தமிழ் மக்கள் புலம்பெயர்வதும்தான் . இந்த இரண்டையும் கட்டுப்படுத்துவதற்கான செயற்திட்டத்தில் ஒருங்கிணைந்து தமிழரசியல் தலைவர்கள் எனப்படுவோர் செயற்படத் தவறின் தமிழ் மக்கள் பாரதூரமான விளைவுகளை இன்னும் சில ஆண்டுகளில் சந்திப்பர் நாடாளுமன்றத்தில் பேச்சுப் போட்டிகளை நடத்துவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும் பகுதியினர் சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்திக் கொண்டிருக்கின்ற போது ஒரு சிலர் குந்தி இருக்கின்ற நாடாளுமன்ற மண்டபத்தில் நின்று வாய் கிழிய கத்துவதும், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து அறைகூவல் விடுவதும் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனையும் தராது.
அணிதிரண்டு போராட வேண்டும்
வேண்டுமானால் அது இவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரண்டாம் முறையும் புதுப்பிப்பதற்கு உதவக் கூடும் வாக்கு வங்கியை சேகரிக்க உதவக்கூடும். ஆனால் தமிழ் மக்களுக்கு நடைமுறையில் எதனையும் பெற்று தராது.
தமிழர் நாடாளுமன்ற அரசியல் என்பது காலத்துக்கு காலம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து புதிய பணக்காரர்களை உருவாக்குவதற்கான ஒரு செயல்முறையாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலும் நாடாளுமன்ற உறுப்புரிமையும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் துரதிஷ்டவசமான தமிழர் அரசியலாக மாறி உள்ளது.
இப்போது உடனடியாக நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் கட்சிகள் போராட முன்வர வேண்டும். இதில் யாருக்கும் கொள்கை வேறுபாட்டுப் பிரச்சினை இருக்க இடமில்லை.
அதற்காக அனைத்து கட்சிகளும் உள்ளடக்கிய ஒரு செயற்குழுவை உருவாக்கி நில ஆக்கிரமிப்பு எதிரான போராட்டத்தை அனைவரும் இதயசுத்தியுடன் முன்னெடுக்க வேண்டும்.
அத்தகைய போராட்டம் வடகிழக்குக்குள் மாத்திரமல்ல அது கொழும்பை நோக்கி விஸ்தரிக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் நிர்வாக முடக்கத்தை ஏற்படுத்தக் கூடியதான வலுவான போராட்டங்களை முன்னெடுத்தால் மாத்திரமே நில ஆக்கிரமிப்பை தடுக்க முடியும்.
இப்போது எத்தகய கொள்கைவிளக்கத் தத்துவப் பிரச்சினைக்கும் இடமில்லாத இந்த மிக அடிப்படையான விடயத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட்டு முழுப்பலத்துடன் போராடினாற்தான் தமிழர் தாயகத்தை குறைந்த பட்சமாவது பாதுகாக்கலாம்.
அவ்வாறு இதுவிடயத்தில் ஒன்றுபட்டு ஒற்றைக் கோரிக்கையின் அடிப்படையில் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு போராட மறுப்பவர்கள் எவராயினும் அவர்கள் எதிரியின் கையாட்களே.
ஆதலால் நில அபகரிப்புக்கு எதிராக அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சியினரும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் இதற்கான ஒரு செயற் குழுவை உருவாக்கி போராடத் தயாராக வேண்டும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 13 September, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.