அரோகராப் போராட்டம்...!
ஒரு நீதிபதிக்கு நீதி கேட்டுத் தமிழ் மக்கள் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.கடந்த வாரத்திலிருந்து தமிழ்ப் பகுதிகளெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் குறிப்பாக கடந்த புதன்கிழமை(04.10.2023) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும்.இது குத்துவிளக்குக் கூட்டணியால் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் ஏனைய கட்சிகளும் அதற்கு ஆதரவைக் காட்டின.
அந்தப் போராட்டம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது சொந்த மக்களின் கவனத்தையும்,உலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கத்தக்க விதத்தில் பிரம்மாண்டமானதாக முன்னெடுக்கப்பட்டதா?
மருதனார் மடத்திலிருந்து தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.போராட்டத்தில் இணையுமாறு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.
எனினும் அது ஒரு நீண்ட மனிதச் சங்கிலிப் போராட்டமாக அமையவில்லை. மனிதச் சங்கிலி தொடர்ச்சியானதாக அமையவில்லை. கொக்குவில் சந்தியில் கட்சித் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்களும் முழந்தாளிட்டு நீதி தேவதையிடம் முறைப்பாடு செய்தார்கள். அங்கே அரோகரா கோஷமும் எழுப்பப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்பங்குக்கு ஒரு மனிதச் சங்கிலிப் போராட்டத்தைச் செய்தது. இரண்டு மனிதச் சங்கிலிகளுக்கும் இடையே தொடுப்பு இருக்கவில்லை.
எளிமையான ஒரு கணிதம்
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அங்கே காணப்பட்டார்கள். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காணவில்லை.முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினரும் உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும் அங்கே காணப்பட்டார்கள்.
சட்டத் துறையை சேர்ந்தவர்கள் அதிகரித்த அளவில் பங்குபற்றவில்லை. சிவில் சமூகங்களும் குறைவு. பல்கலைக்கழக மாணவர்களைக் காணவில்லை. கட்சி ஆதரவாளர்கள்கூட முழு அளவுக்குப் பங்குபற்றியதாகத் தெரியவில்லை.
அப்படி ஒரு போராட்டத்தை முதலில் சிந்தித்த கட்சிகள் அதைக் குறித்து நடைமுறைச் சாத்தியமான வழிகளில் திட்டமிட்டிருக்கவில்லையா? அது மிக எளிமையான ஒரு கணிதம். மருதனாமடத்திலிருந்து யாழ்ப்பாணம் வரையிலுமான மொத்தத் தூரத்தைக் கணக்கிட்டு அவ்வளவு தூரத்துக்கும் கைகோர்த்தபடி நிற்பதற்கு எத்தனை பேர் தேவை என்பதை கண்டுபிடித்திருக்கலாம்.
அதன்பின் அத்தூரத்தைப் பங்கு கொள்ளும் கட்சிகளின் தொகையால் பிரித்து,ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கிலோமீட்டர் என்று பிரித்துக் கொடுத்திருக்கலாம். அதன்படி ஒவ்வொரு கட்சியும் தனக்குரிய தூரத்துக்கு வேண்டிய ஆட்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தாலே போதும்.
மனிதச் சங்கிலி வெற்றிகரமானதாக அமைந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்தால் மக்கள் வருவார்கள் என்று கட்சிகள் நம்பினவா?ஆனால் இதுபோன்ற மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான அடிமட்டக் கட்டமைப்புகள், வலையமைப்புகள் கட்சிகளிடம் குறைவு என்பதைத்தான் போராட்டம் மீண்டும் ஒரு தடவை உணர்த்தியது.
தாங்கள் அழைத்தால் மக்கள் வருவார்கள் என்று கட்சிகள் நம்பினவா? எந்த ஒரு போராட்டத்திற்கும் வீட்டு வேலை அவசியம். எல்லாவற்றையும் கணிதமாக கணக்கிடலாம். அதில் எங்கேயும் கற்பனையான எதிர்பார்ப்புகளுக்கு இடமில்லை.
கடந்த சில தசாப்தங்களாக தமிழ் மக்கள் மத்தியில் வெற்றி பெற்ற எல்லாப் போராட்டங்களின் பின்னணியிலும் கடுமையான உழைப்பு இருந்திருக்கிறது. ஒன்றிணைவு இருந்திருக்கிறது. மக்கள் தாமாகத் திரள்வதற்கு இது ஒன்றும் கோவில் திருவிழா அல்ல.
அல்லது பண்டிகைக்காலச் சந்தையும் அல்ல. கட்சிகள் தங்களுடைய கீழ்மட்ட வலையமைப்புக்கள் ஊடாக மக்களைத் திரட்டிக் கொண்டுவர வேண்டும். ஆனால் கடந்த புதன்கிழமை அது நடந்ததாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு போராட்டத்தின் முடிவில் கொக்குவில் நீதி தேவதையிடம் முழந்தாளிட்டு மன்றாடப்பட்டது.
நீதிக்காகப் போராடும் மக்கள்
முழந்தாளிட்டு மன்றாடுவது போராட்டமாகி விடாது. அதைத் தேவாலயங்களில் செய்யலாம். சில ஆண்டுகளுக்கு முன் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நினைவு கூர்தல் நிகழ்வில் அவ்வாறு முழந்தாளிட்டு நின்றதாக ஞாபகம். அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கறுப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்டதையடுத்து போராட்டங்கள் வெடித்தன. அதன்போது அமெரிக்க போலீஸ் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரிடம் மன்னிப்பு கேட்கும் விதத்தில் ஒரு காலில் முழந்தாளிட்டு அமர்ந்து மன்னிப்பு கேட்டது.
அது மன்னிப்புக் கேட்பது. போராட்டம் அல்ல. ஆனால் கொக்குவில் நடந்தது ஒரு போராட்டம். தமிழ் மக்கள் ஆலயங்களில் மன்றாடியிருக்கிறார்கள்.ஆனால் அரசியல் காரணங்களுக்காக மன்றாடவில்லை. வீரமாகப் போராடியிருக்கிறார்கள்.
விதி திரைப்படத்தில் நீதிமன்றக் காட்சியில் கதாநாயகி சுஜாதா தனது தர்க்கத்தை முன்வைத்த பின் அழுது மன்றாடி மயங்கி விழுந்து நீதி கேட்கின்றார். ஆனால் நீதிக்காகப் போராடும் மக்கள் அப்படியெல்லாம் மன்றாட முடியாது. பைபிளில் ஒரு வசனம் உண்டு “நீதியின் கிரீடம் முட்களாலானது” என்று. நீதிக்கான போராட்டம் அத்தகையதுதான்.
கண்ணகி தன் கணவனுக்கு நீதி கேட்டு பாண்டிய மன்னனிடம் மன்றாட வில்லை.அவளுடைய கோபம் பாண்டியனை கொன்றது; மதுரையைச் சுட்டெரித்தது .சாவித்திரி தன் கணவனைக் காப்பாற்றுவதற்காக யமனோடு அதாவது மரணத்தோடு போராடினாள்.
இவை காப்பியகால உதாரணங்கள். போராட்டங்கள் மன்றாட்டங்களாக இருக்க முடியாது. அவை வீரமானவைகளாகவும் அர்ப்பணிப்புக்கு தயாரானவைகளாகவும் இருக்க வேண்டும்.நவீன காலத்தில் தமிழ்மக்கள் மன்றாடி எதையும் பெறவில்லை. போராடித்தான் பெற்றார்கள். பதின்மூன்றாவது திருத்தமே தமிழ் மக்களின் போராட்டத்தின் விளைவுதான்.
ஆனால் தமிழ்க் கட்சிகள் நோகாமல் போராடப் பார்க்கின்றனவா? அல்லது கடமைக்கு போராடுகின்றனவா? அல்லது 2009க்குப் பின்னரான அறவழிப் போராட்ட வடிவத்தை குறித்துத் தமிழ்க் கட்சிகளிடம் படைப்புத்திறன் மிக்க தரிசனம் எதுவும் கிடையாதா? போதாக்குறைக்கு போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கோஷம் எழுப்பும் போது ஒவ்வொரு கோஷத்தின் முடிவிலும் “அரோகரா” சொல்லப்பட்டது.
நீதிபதிக்கு அரோகரா
அரோகரா என்றால் என்ன? அரன் – சிவன் ; ரோகம் – துன்பம், தீவினை, வலி; அர-அறுக்க. “ சிவனே ரோகம் அறுக்க” என்றும் பொருள்படும். அரோகரா முதலில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் பயன்படுத்தப்பட்டது என்று ஒரு தகவல் உண்டு. திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்து கொண்டு வந்தவர்கள் ‘ஏலேலோ ஏலேலோ’ என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர்.
அதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர்,பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று,’அர ஹரோ ஹரா’ என்பதைக் கற்றுக் கொடுத்தார். அதன்பிறகு ‘அர ஹரோஹரா’ என்றுச்சொல்வது வழக்கமாயிற்று என்று ஒரு தகவல் உண்டு.
அது மருவி அரோகரா ஆயிற்று அரோகரா என்ற சொல் மங்களமானது நேர்க்கணியமானது. திட்டுவதற்கும் சபிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு சொல் அல்ல. ஆனால் கடந்த புதன்கிழமை கொக்குவிலில் அரோகரா எப்படிப் பயன்படுத்தப்பட்டது? “நாடாளுமன்றத்துக்கு அரோகரா…நீதிபதிக்கு அரோகரா…நீதித்துறைக்கு அரோகரா….ஜனாதிபதிக்கு அரோகரா….சிறீலங்காவுக்கு அரோகரா”… என்றால் என்ன பொருள்?
பண்பாட்டு ரீதியிலான சடங்குகளை, மத நம்பிக்கைகளை போராட்டங்களில் இணைப்பது ஒர் உத்தி.
அறுந்த சங்கிலிப் போராட்டம்
அது ஒரு மக்கள் கூட்டத்தை உணர்வுபூர்வமாக இணைப்பதற்கு உதவும்.ஈழப்போராட்த்தின் முதலாவது தெரு நாடகம் “விடுதலைக் காளி” அது கலையாடிக் குறி சொல்லும் மத நம்பிக்கையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அரகலயவின்போது சிங்களச் செயற்பாட்டாளர்கள் அவ்வாறான மகத்தான புத்தாக்கத் திறனை வெளிப்படுத்தினார்கள். தமிழ்க் கட்சிகள் அங்கிருந்துகூட எதையும் கற்றுக் கொள்ளவில்லையா? தமிழ்க் கட்சிகளின் கற்பனை வறட்சியை;தமிழ் கட்சிகளுடைய அரோகராப் போராட்டம் காட்டியதா? ஒரு போராட்டத்தில் படைப்புத்திறன் எங்கே வெளிப்படுகிறது என்றால் போராடுபவர்கள் அந்தப் போராட்டத்துக்கு ஆகக்கூடிய பட்சம் உண்மையாகவும் அர்ப்பணிப்போடும் இருக்கும்போதுதான்.
மக்களை நேசித்த எல்லாப் போராட்டங்களிலும் படைப்புத்திறன் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் அதற்கு உதாரணங்களைக் காட்டலாம். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்க் கட்சிகளால் அவ்வாறான படைப்புத்திறனை வெளிப்படுத்த முடியவில்லை. ஏன்? 2009இல் இறுதிக்கட்ட போரின்போது தமிழ்நாட்டில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தை இங்கே சுட்டிக்காட்டலாம்.
அது மிக நீண்டது; பிரமாண்டமானது. கொட்டும் மழைக்குள் நனைந்து தோய்ந்த ஆடைகளில் நீர் சொட்டச் சொட்ட மனிதர்கள் சங்கிலிகளாகப் பிணைந்து நின்றார்கள். ஆனால் கடந்த புதன்கிழமை நடந்தது அத்தகையது அல்ல.அது ஓர் அறுந்த சங்கிலிப் போராட்டம்.
அடுத்ததாக ஒரு கடையடைப்புக்கு அழைப்பு விடப்போவதாக ஏழு கட்சிகள் கூடி முடிவெடுத்திருக்கின்றன. ஆயின்,தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு நோகாத போராட்டங்களைத்தான் தெரிந்தெடுக்கிறார்களா?
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 08 October, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.