ஆர்தர் - சானக்கவுக்கு இடையில் கடும் வாக்குவாதம்
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் பின்னர் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரும், அணித் தலைவர் தசூன் சானக்கவும் ஆடுகளத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பகலிரிவு ஆட்டமாக இடம்பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 49.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியைத் தனதாக்கியது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 193 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருக்க, வெற்றியின் வாய்ப்பு இலங்கைக்கு அதிகளவில் காணப்பட்டது.
அதன் பின்னர் எட்டாவது விக்கெட்டுக்காக தீபக் சாஹர் மற்றும் புவேனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்து இலங்கையின் வெற்றிக் கனவைக் கலைத்தனர்.
இந்நிலையில் ஆட்டத்தின் முடிவுகளால் ஆத்திரமடைந்த மிக்கி ஆர்தர், போட்டியின் பின்னர் இலங்கை அணித் தலைவருடன் ஆடுகளத்தில் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
இருவரும் ஆடுகளத்தில் என்ன வாதத்தில் ஈடுபட்டார்கள் என்பது தெரியாத நிலையில், களத்தடுப்பு மற்றும் பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதம் குறித்து ஆர்தர், சானக்கவுடன் அதிருப்தியைப் பகிர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அது மாத்திரமன்றி ஆட்ட நேரத்தின்போது இலங்கை அணியினரின் ஒவ்வொரு மிஸ்ஃபீல்டிலும், தலைமை பயிற்சியாளர் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
கசூன் ரஜித்த, லக்ஷான் சந்தகன் ஆகியோர் அதிகமான ஓட்டங்களை வாரி வழங்கிய நிலையில் அவர்களுக்குத் தொடர்ச்சியான ஓவர்களை தசுன் சானக கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் குறைந்த ஓட்டங்களை வழங்கிய சமிக்க கருணாரத்ன மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோருக்கு தொடர்ச்சியாகப் பந்து வீசுவதற்கான வாய்ப்பினை அணித் தலைவர் வழங்கவில்லை.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்தைச் சாடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட்
பயிற்சியாளருக்கும், அணித் தலைவருக்கும் இடையிலான அந்த வாதம் ஆடுகளத்தில் நடந்திருக்க கூடாது. மாறாக அவர்களது ஆடை அறையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.