சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட மூவர் கைது (Photos)
புத்தளம் - கற்பிட்டி - ஆனவாசல் பகுதியில் சட்டவிரோதமாக பீடி இலைகளைக் கடத்த முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (21.02.2023) இரவு கற்பிட்டி விஜய கடற்படையினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பீடி இலைகளை அனுமதிப்பத்திரமின்றி, சட்டவிரோதமாக லொறியில் கொண்டு செல்வதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய ஆனவாசல் பகுதியில் வைத்துக் குறித்த லொறியை மறித்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
மூவர் கைது
இதன்போது, குறித்த லொறியில் 48 உரைகளில் 1508 கிலோ பீடி இலைகளும் 39 உரைகளில் 744 கிலோ புகையிலைகளும் 8 உரைகளில் 129 கிலோ புகையிலைத் தூளும் மறைத்து வைத்திருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கலேவெல பகுதியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பீடி இலைகள், புகையிலைகள், புகையிலைத் தூள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், புகையிலைகள் மற்றும் புகையிலைத் தூள் கடத்தலுக்குப் பயன்படுத்திய லொறி ஆகியவற்றை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகக் கடற்படையினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.
விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், புகையிலைகள், மற்றும் புகையிலைத் தூள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கற்பிட்டி பொலிஸார் இதன்போது தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக இந்தியாவிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு ஐஸ், கேரளா கஞ்சா,
உலர்ந்த மஞ்சள், கிருமிநாசினிகள், திரவ உரம், ஏலக்காய் மூடைகள், கடலட்டைகள்,
சுறா இறகுகள், பாதணிகள், இலத்திரனில் உபகரணங்கள், கடற்குதிரைகள்
கடத்தப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.















