இலங்கையர்களுக்கு இந்திய கடவுச்சீட்டுக்களை வழங்கிய குழு கைது
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடி செல்லவிருந்த 5 இலங்கையர்களுக்கு இந்திய கடவுச்சீட்டுக்களை வழங்கிய குழு ஒன்றை இந்திய பெங்களூர் நகர காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த போலி கடவுச்சீட்டுகளுக்காக இலங்கை குடிமக்கள் 50,000 முதல் 1,50,000 ரூபாய் வரை பணம் செலுத்த தயாராக இருப்பதாக பெங்களூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் தமிழர்கள் என்று பெங்களூர் நகர காவல் ஆணையர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். இவர்களுக்கு போலி கடவுச்சீட்டுக்களை பெற உதவியமைக்காக பெங்களூரை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை தகவல்களின்படி, இந்திய கடவுச்சீட்டை பெற விரும்புவோர் இந்திய குடியுரிமை அடையாளச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
20 கடவுச்சீட்டுக்களை பெற்றிருக்கலாம்
அத்துடன் அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வசித்தார் என்பதற்கான ஆதாரத்தையும் வழங்க வேண்டும்.
இதேவேளை அண்டை வீட்டாரும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்தநிலையில் பெங்களூரை சேர்ந்த ஒருவரின் அண்டை வீட்டாராகக் காட்டி கடவுச்சீட்டுக்களை குறித்த இலங்கையர்கள் பெற முயன்றபோதே, காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதேவேளை போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்த குழு, குறைந்தது 20
கடவுச்சீட்டுக்களை பெற்றிருக்கலாம் என்று பெங்களூர் காவல்துறையினர் சந்தேகம்
வெளியிட்டுள்ளனர்.