பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது
வத்தளை - எலகந்தை சந்தியில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் வத்தளை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (10.04.2023) பதிவாகியுள்ளது.
சந்தேகநபர் தாக்கியதில் வத்தளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் சந்தீப் காயமடைந்துள்ளார் எனவும், அவர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணம்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எந்தல வெலியமுன வீதியில் வசிக்கும் நபர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றிரவு கடமையில் ஈடுபட்டிருந்த வத்தளை பொலிஸ் நிலையத்தின் மூன்று உத்தியோகத்தர்கள் எலகந்தை சந்திக்கு அருகில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரைத் தடுத்து நிறுத்தியதையடுத்து, குறித்த சந்திப் பகுதியில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு இது பற்றி தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீருடையை இழுத்து தாக்குதல்
அப்போது குறித்த நபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தீப் அந்த இடத்துக்கு வந்து, சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட போது, அதிகாரியை கடுமையான வார்த்தைகளால் திட்டி, சீருடையைக் குறித்த நபர் இழுத்து தாக்கியுள்ளார்.
இது தொடர்பில் வத்தளை பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், நிலையக்
கட்டளைப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று
சந்தேகநபரைக் கைது செய்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.