போரில் உயிர் தப்பிய இராணுவ வீரர் எரிவாயு வெடித்து மரணம்
நான்காவது ஈழப் போரில் விடுதலைப் புலிகளின் மோட்டார் குண்டு தாக்குதலுக்கு உள்ளாகி அங்கவீனமடைந்து, மருத்துவ காரணங்களுக்காக வீட்டில் இருந்து வந்த இராணுவ வீரர் ஒருவர், சமையல் எரிவாயு வெடித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம் கடந்த ஜூலை 17 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி, ஒரு மாதத்திற்கும் மேலாக கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ வீரர், ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயதான மொரகல்கெதர லசந்த ரஞ்சித் குமார என்ற இந்த இராணுவ வீரர், கண்டி மெனிக்ஹின்ன பிரதேசத்தை சேர்ந்தவர்.
இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதன் காரணமாக அவரது குடும்பத்தினர் பெரும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இராணுவ வீரரின் மனைவி ரோணுகா தஹாநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் இராணுவ வீரரின் தாயும் தீக்காயங்களுக்கு உள்ளாகி, தற்போதும் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த இராணுவ வீரரின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கூட இதுவரை நிறைவு செய்யப்படவில்லை எனவும் திவயின கூறியுள்ளது.