இராணுவ வீரரொருவர் விபத்தில் சிக்கி பலி! தம்பலகாமத்தில் சம்பவம்
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி 13ம் கட்டை சந்தியில் காயமடைந்த நிலையில் விழுந்து கிடந்த இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இன்றிரவு (01) 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய்,கன்தலாவ பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரரான சசில மல்சான் (21வயது) எனவும் தெரியவருகின்றது.
தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 13 ஆம் கட்டை சந்தியில் இளைஞரொருவர் வீதியோரத்தில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் விழுந்து கிடப்பதாக 1990 அவசர அம்பியுலன்ஸ் சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக குறித்த இளைஞரை அருகில் உள்ள தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒப்படைத்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், நடந்து சென்ற இளைஞரை வாகனம் மோதி சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த இளைஞரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அருகில் குடையொன்று காணப்படுவதாகவும் அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
