போதைப்பொருள் வர்த்தக முறியடிப்பில் இராணுவத்தினர் தீவிரம்
போதைப்பொருள் வர்த்தக முறியடிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தக முறியடிப்பு நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு பாதுகாப்புப் படைத் தளபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பணிப்புரை விடுத்துள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்
2022ஆம் ஆண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வுகளின் மூலம், பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 981 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த சோதனையின் போது, 717 கிலோகிராம் கேரள கஞ்சா, 685 கிலோகிராம் கஞ்சா, 14 கிலோகிராம் ஐஸ் மற்றும் சுமார் இரண்டு கிலோகிராம் ஹெரோயின் என்பவற்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், 831 சந்தேகநபர்கள் குஷ் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத உள்நாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றல்
20 சட்டவிரோத உள்நாட்டு மதுபான போத்தல்கள், 57 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், கிட்டத்தட்ட 28,000 லீட்டர் சட்டவிரோத மதுபானம் என்பவற்றுடன் 89 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 2023ஆம் ஆண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வுத் தகவல்கள் மூலம், பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, 52 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 43 சந்தேகநபர்களும், 24 கிலோகிராம் கஞ்சாவுடன் 21 சந்தேகநபர்களும், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 73 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.