ஈஸ்டர் தாக்குதல் ஆதாரங்களை அழித்த இராணுவம்! சிக்கலில் அருண ஜெயசேகர
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர உடனடியாக தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர், தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இராணுவம் அழித்ததாக கூறிய கருத்தையும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“அருண ஜெயசேகர பதவியை விட்டு விலகி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது அப்போதைய மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர கிழக்கு கட்டளைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஒரு குழு நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றபோது அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த விடயத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்கும், அது தொடர்பான ஆதாரங்களை அழித்ததற்கும் பின்னால் இராணுவ அதிகாரிகள் குழு இருந்ததாக கூறியிருந்தார்.
இதன்படி அப்போது கிழக்குத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தாக்குதலுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று குற்றம் சாட்டினார்” என தெரிவித்துள்ளார்.




