ஜெலன்ஸ்கியின் ஐ.நா உரைக்கு போலாந்து பதிலடி: நிறுத்தப்படும் ஆயுத உதவி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் ஐ.நா. கூட்டமைப்பு உரைக்கு பதிலளிக்கும் முகமாக போலந்து பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
உள்நாட்டு இராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது 2022 பெப்ரவரி மாதம். இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து 575 நாட்களாக போரிட்டு வருகிறது.
மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது. போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷ்யா தடைசெய்தது.
ஐரோப்பிய ஒன்றியம்
இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது.
ஆனால் கடந்த (15.09.2023)வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்திருந்தது.
இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன.
இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, "சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு இராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |