முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கூடுதல் அதிகாரம் - அமைச்சரவை அனுமதி
முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் வழங்க நேற்று (15) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
கலவரக்காரர்களின் கைகளில் துப்பாக்கிகள் சிக்குவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இராணுவத்தினரிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கிகளை விரைவில் மீட்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
திருடிச் செல்லப்பட்ட துப்பாக்கிகள்
அத்துடன், நாடாளுமன்றம் கூடும் போது அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் சந்திக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவையில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தை கைப்பற்றும் முயற்சியின் போது, இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று, அவர்களின் T-56 துப்பாக்கிகளை தோட்டாக்களுடன் திருடியுள்ளனர்.
அந்தச் சம்பவத்தில் இராணுவத்தினரிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் தேடுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்புத் துறைக்கு அதிகாரம் வழங்க அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.