அரசிற்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்! தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரன் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி
அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தினை ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் சட்டப்பூர்வமாக பெயரை மாற்றிக்கொண்டதாக அரசாங்க அமைச்சர் வெளியிட்ட கூற்றை "முற்றிலும் பொய்" என நிராகரித்து, அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.
புலனாய்வுத் தகவல்..
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தன் மீதான இந்த குற்றச்சாட்டை உறுதியாக மறுத்துள்ள அவர், அந்த மறுப்பு அறிக்கையை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி வழக்கில் தேடப்படும் அர்ஜுன் மகேந்திரன், 'ஹர்ஜன் அலெக்சாண்டர்' (Harjan Alexander) என தனது பெயரை மாற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.
நான் பெயரை மாற்றியுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பகிரங்கக் கூற்று வெளியிட்டுள்ளமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பதை உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் அறியத் தருகிறேன்" என மகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கப்பூர் முகவரியைக் குறிப்பிட்டுள்ள அவர், "லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன்" (Lakshman Arjuna Mahendran) என்ற தனது அதிகாரப்பூர்வ பெயரிலேயே இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என குறித்த ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு பகிரங்க சவால்
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பாக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியான தடைகள் நிலவி வருகின்றன.
இந்த நிலையில், அவரை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான மாற்று வழிகளை இலங்கை அதிகாரிகள் ஆராய்ந்து வரும் வேளையில், அவரது அடையாளத்தை மையப்படுத்தி அரசாங்கம் முன்வைத்த கூற்றை அர்ஜுன் மகேந்திரன் நேரடியாக மறுத்துள்ளார்.
சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரன் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் அமைச்சரின் கருத்தை நிராகரித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் தரப்பின் நிலைப்பாடு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மறுப்பு அறிக்கையை அர்ஜூன் மகேந்திரன் வெளியிட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதனையும் குறித்த ஊடகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.