பொதுச் செயலாளர் பதவியை பகிர்ந்தளிக்க முயற்சி! குகதாசனுடன் சமரச பேச்சுவார்த்தை
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பகிர்ந்து கொண்டு இணக்கப்பாட்டோடு செயற்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னர் தெரிவுசெய்யப்பட்ட பொதுச் செயலாளர் குகதாசன் உடனான சமரச பேச்சுவார்த்தைகள் குறித்து இன்று (11.02.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொதுச் செயலாளர் தெரிவு
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு குறித்து இனிமேல் எந்த வாக்கெடுப்பும் நடைபெறாது.
பொதுச் செயலாளர் பதவியை குகதாசன் மற்றும் சிறிநேசன் ஆகியோருக்கு இரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்கும் நோக்குடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
இன்று(11) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதல் வருடத்தை யாருக்கு வழங்குவது என்பதில் தான் இழுபறி நிலை உள்ளது.
முதல் வருடத்தை மட்டக்களப்பிற்கு தருமாறு கோரியிருந்தோம் ஆனால் முதல் வருடத்தை திருகோணமலைக் தருமாறு குகதாசன் கோரியுள்ளார்.
ஆனால் அது குறித்து மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் பேசி முடிவெடுப்பதாக கூறியுள்ளேன்.
ஊடகங்களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும் என கோரி கையெழுத்து சேகரிக்கப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |