ஒன்பதாவது ஜனாதிபதி ஏமாற்றும் முன்னமே மண்ணைவிட்டு மறைந்தார் சம்பந்தன்!
ஏற்கனவே எட்டு ஜனாதிபதிகளால் ஏமாற்றப்பட்ட சம்பந்தன், கடந்த 30/06/2024 அன்று இரவு உயிர் நீத்தார். அன்னாரின் புகழுடல் இன்று 07/07/2024 அன்று அவருடைய சொந்த ஊரான திருகோணமலை இந்து மயாணத்தில் அக்கினியுடன் சங்கமிக்கிறது.
ஈழத் தமிழினத்தின் உரிமைக்கான போராட்டம் எழுபத்தி ஐந்து வருடங்களாக தொடர்ந்தும் அது இனவாத இலங்கை ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டதே வரலாறாக உள்ளது.
தந்தை செல்வா இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியை தொடங்கி 1949 டிசம்பர் 18இல் ஆரம்பித்த அகிம்சைப் போராட்டமும் அதன்பின்னர் 1976 மே 14இல் தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக்கூட்டணி ஊடாக எடுக்கப்பட்ட தமிழீழ தனியரசு தீர்மானமும் 36, விடுதலை இயக்கங்களாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகியது.
1987 யூலை 29ஆம் திகதி இந்தியப்பி்ரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவுக்கும் இடையில் கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக 1987 நவம்பர் 14இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தம் ஊடாக அறிமுகமான மாகாணசபை முறைமையுடன் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய 36 விடுதலை இயக்கங்களும் தானாகவே விலகின.
நல்லாட்சி அரசின் துரோகம்
சில விடுதலை இயக்கங்களை விடுதலைப்புலிகள் தடைசெய்ததும், சில அரசியல் நீரோட்டத்தில் அரசியல் கட்சிகளாக இயங்கியபோதும் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டும் தொடர்ந்தும் ஆயுதப்போரை நடத்தி வடக்கு கிழக்கில் 70 சதவீத நிரப்பரப்பையும் அதனுடன் இணைந்த கடல் பரப்பையும் தன்னகத்தே வைத்து ஒரு நடைமுறை அரசை உருவாக்கி ஆட்சிசெய்த வரலாறும் அதனை பொறுத்துக்கொள்ளாத இலங்கை ஆட்சியாளர்கள் சர்வதேச நாடுகளின் இராணுவப்பலத்தை பிரயோகித்து விடுதலைப்புலிகளை இல்லாமல் செய்தமையால் 2009 மே 18இல் முள்ளிவாய்க்கால் போர் மௌனம்வரை அளப்பரிய தியாகங்கள் நடந்தமையும் வரலாறு.
இந்த காலக்கட்டங்களில் எல்லாம் தந்தை செல்வா அகிம்சை ரீதியிலான போராட்ட காலத்தில் அப்போதய ஆட்சித்தலைவர்களான பண்டாரநாயக்கா, டட்லி சேனநாயக்கா ஆகிய பிரதமர்களுடன் பேச்சுவார்தைகளை நடத்தி ஒப்பந்தங்களையும் செய்து பார்த்து அதனை நடைமுறைப்படுத்த விடாமல் பௌத்த தேரர்களாலும், இனவாத சிங்கள தலைவர்களாலும் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டு ஏமாற்றப்பட்டதே உண்மை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் ஆயுதப்போராட்ட காலத்தில் அரசியல் உரிமைக்காக பல பேச்சுவார்தைகளை ஜரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகளின் முன்னிலையில் நடத்தியும் எதையும் இலங்கை ஆட்சியாளர்கள் தரமால் ஏமாற்றப்பட்ட வரலாறுகளே தொடர்ந்தன.
1982இல் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே ஆர் ஜெயவர்தன 1989இல் தெரிவான ரணசிங்க பிரேமதாசா, அவர் 1993 மே 01 கொலைசெய்யப்பட்ட பின்னர் அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட டிங்கிரி பண்டா விஜயதுங்கா, 1994இல் தெரிவான சந்திரிகா குமாரதுங்கா 2005இல் தெரிவான மகிந்த ராஜபக்ஷ,2015இல் தெரிவான மைத்திரிபால சிறிசேனா, 2019இல் தெரிவான கோட்டபாய ராஜபக்ஷ, அவரை நாட்டுமக்கள் போராட்டம் மூலமாக நாட்டைவிட்டு துரத்தியபின்னர் 2022இல் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவான தற்போதய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகிய எட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளுடனும் மறைந்த சம்பந்தன் பல நூறுதடவைகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர தீர்வு கிடைக்கவேண்டும் என இதய சுத்தியுடன் பேசிப்பார்தார்.
இந்த எட்டு ஜனாதிபதிகளும் தமிழ்தேசிய அரசியல் தலைவராக செயற்பட்ட இரா. சம்பந்தனை ஏமாற்றியதே வரலாற்றுப்பதிவுகள். இதனை சம்பந்தன் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாடாளுமன்றத்தில் ஆங்கில மொழி மூலமாக ஆதாரத்துடன் உரையாற்றி உள்ளார். அதற்கு ஆதாரங்கள் நாடாளுமன்ற அறிக்கைகளில் உள்ளன. இராஜதந்திரிகளுடனும், பாரதப் பிரதமர்களுடனும் இதனை கூறியும் உள்ளார்.
இந்த ஆண்டு 2024, செப்டம்பரில் மீண்டும் ஒரு ஐனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. அதில் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு பௌத்த சிங்களவர் ஜனாதிபதியாக தெரிவாகுவார். அந்த ஜனாதிபதியும் ஏற்கனவே சம்பந்தனை ஏமாற்றிய எட்டு ஜனாதிபதிகளில் ஒன்பதாவது ஜனாதிபதியாக அவருடைய பெயர் நிச்சயமாக இருக்கும். அந்த ஏமாற்றத்தை காண்பதற்கு முன்னமே கடந்த 2024 யூன் 30இல் சம்பந்தன் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
சம்பந்தன் கடந்த காலத்தில் எட்டு ஜனாதிபதிகளால் ஏமாற்றப்பட்டதில் மிகவும் மோசமாக நம்பவைத்து ஏமாற்றிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனாவையும், தற்போது ஜனாதிபதியாக செயல்படும் நல்லாட்சி அரசின் காலத்தில் பிரதமராக செயற்பட்ட ரணிலையுமே அடையாளப்படுத்தலாம். சம்பந்தரின் மனம் நோகும் படியான துரோகத்தை இந்த இருவரும் இணைந்து செய்தவர்கள் என குறிப்பிடலாம்.
அந்த நல்லாட்சி காலத்தில் 16, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்கட்சி தலைவராக அப்போது செயற்பட்ட சம்பந்தன், எப்படியாவது புதிய அரசியல் யாப்பு திருத்தம் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெறலாம் என முழுமனதுடன் தன்னால் எந்த அளவில் இறங்கிப்போக வேண்டுமோ அந்த அளவில் அவர் இறங்கிச்சென்றார்.
ஜனாதிபதித் தேர்தல்கள்
இலங்கை சுதந்திர தின நிகழ்வு எதிலுமே இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே 1948 தொடக்கம் 2015, வரை காலிமுகத்திடலுக்கு சென்ற வரலாறுகள் இருக்கவில்லை. ஆனால் நல்லாட்சி காலத்தில் ஜனாதிபதி மைத்திரியும், பிரதமராக செயற்பட்ட ரணிலும் கலந்து கொண்ட சுதந்திரதின விழாவில் சம்பந்தனும் சுமந்திரனும் கலந்துகொண்டு இலங்கை ஆட்சியாளர்களுக்கு நல்லெண்ணத்தை காட்டினர்.
அப்படி நல்லெண்ணத்தை காட்டியபோதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஏமாற்றப்பட்டதுதான் வரலாறு. 2004இல் விடுதலைப் புலிகளை இரண்டாக உடைத்தமைக்கு மூலகாரணம் தானே என பெருமை கூறும் ரணில் விக்ரமசிங்க அதனூடாக புலி நீக்க அரசியலுக்கு அத்திவாரம் இட்டு வெற்றிகண்டார்.
அதைப்போல் 2015இல் தமிழ்த் தேசிய நீக்க அரசியலுக்காக நல்லாட்சி காலத்தை நன்றாக பயன்படுத்தினார். அதனால் ரணிலின் திட்டம் ஓரளவு வெற்றிகண்டது என்பது உண்மை. அதன் பிரதிபலிப்பு 2020 பொதுத்தேர்தல் முடிவு வெளிக்காட்டியது. 2015, பொதுத்தேர்தலில் 16, நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்த பொதுத்தேர்தலில் 10, நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் பெற முடிந்தது என்றால் நல்லாட்சி அரசில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரியையும், பிரதமர் ரணிலையும் நம்பி ஏமாந்ததன் விளைவு என்பதை புரிதல் அவசியம். 2002, தொடக்கம் 2009 மே 18, வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழு நேர தமிழ்த்தேசிய அரசியலை மேற்கொள்ளவில்லை.
இருந்தபோதும், அந்த காலத்திலும் ஜனாதிபதிகளாக செயற்பட்ட சந்திரிகா, மகிந்த ராஜபக்ச ஆகியோருடனும் சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடுடன் அரசுயல் தீர்வை பெறவும் அன்றாட பிரச்சினைகளை தீர்க்கவும் பல சுற்றுப்பேச்சுக்களை நடத்தியபோதும் அந்த காலத்தில் இருந்த ஜனாதிபதிகளாலும் சம்பந்தன் ஏமாற்றப்பட்டதே வரலாறு.
அந்தக்காலத்தில் சம்பந்தன் ஏமாற்றப்பட்டாலும் ஒரு நம்பிக்கை எல்லோரிடமும் இருந்தது. விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்ட பலத்தின் ஊடாக ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கை சம்பந்தன் தொடக்கம் சாதாதாரண மக்கள் மத்தியிலும் இருந்தது என்பதே உண்மை.
ஆனால், 2009, மே 18இல் முள்ளிவாய்க்காலில் போர் மௌனித்து பாரிய தமிழினனப்படுகொலை அரங்கேறிய போது தமிழ்த் தேசிய அரசியல் தலைமை முழுமையாக சம்பந்தனுக்கு கிடைத்தது. 2010 தொடக்கம் தற்போது சம்பந்தன் இறக்கும்வரை மூன்று ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றது.
அதில் 2010, ஜனாதிபதி தேர்தலிலும், 2019, ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர்களான 2010, சரத்பொன்சேகா, 2020, சஜித் பி்ரமதாசா இருவரும் வெற்றிபெறவில்லை. 2015இல் மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியகூட்டமைப்பு ஆதரித்து வெற்றியீட்டினர்.
அவர் ஜனாதிபதியாக தெரிவானாலும் அவரால் கூட நிறைவேற்று அதpகாரத்தை பயன்படுத்தி தமிழினப்பிரச்சனைக்கு தீர்வு வழங்கவில்லை. அவர் பயன்படுத்திய நிறைவேற்று அதிகாரம் புதிய அரசியல் யாப்பு திருத்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க திகதி ஒதுக்கிய வேளையில் அதனை தடுப்பதற்காக நயவஞ்சகமாக நாடாளுமன்றத்தை கலைத்து தமது இனவாத சிந்தனையை அரங்கேற்றினார்.
2010இல் மகிந்த ராஜபக்சவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்காமல் அவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் 2011, ஜனவரி தொடக்கம் 2011, நவம்பர் வரையும் மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் தலைமையில் 18, தடவை இனப்பிரச்சனைக்கான தீர்வை பெறும் நோக்கில் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அவரும் இடையில் பேச்சுவார்தையில் இருந்து சம்பந்தன் குழுவை காத்திருக்க வைத்து தானாகவே விலகிச்சென்றதே வரலாறு.
2019இல் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பின்னரும் பலமுறை அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசுவதாக கூறி காலத்தை கடத்தினார். பின்னர் 2022 மார்ச் 15இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெறும் என ஊடகங்களில் செய்திகள் பரபரப்பாக வெளியிடப்பட்டது.
ரணிலின் உரை
ஆனால், அது அன்று நடைபெறாமல் மீண்டும் கோட்டபாய ஏமாற்றிய பின்னர் இறுதியாக ஜனாதிபதி அலுவலகத்தில் 2022, மார்ச் 26இல் ஜனாதிபதி கோட்டபாயாவுடன் சம்பந்தன் தலைமையில் பேச்சு வார்த்தை ஒன்று நடந்தது. அதுதான் கோட்டபாயாவுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நடந்த முதலும் கடைசியுமான சந்திப்பு. இந்த சந்திப்பில் “அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் உங்களுக்கு இருக்கின்ற பிரச்சினை என்ன?” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேசையில் அடித்துக்கேட்டதுடன் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வின் மூலம் நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவதே எமது எதிர்பார்ப்பாகும்.
நாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும். ஒரு நாடு, ஒரே மக்கள் என்று செயற்பட்டு, நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து, நாட்டை விடுவிப்பது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தபோதும் ஜனாதிபதி கோட்டபாய மௌனமாக இருந்து எதுவுமே பதில் கூறாமல் விட்டார்.
அதன்பின்னர் “கோட்டா கோ கம” போராட்டம் கொழும்பு தலைநகர் எங்கும் இடம்பெற்று நாட்டைவிட்டு அவர் ஓடிய பின்னர் ரணில் விக்ரமசிங்க 2022 யூலை 21இல் ஜனாதிபதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவான பின்னர் சம்பந்தன் தலைமையில் ஓரிரு தடவைகள் பேசு்சுவார்தைகள் நடந்தன.
2023 மே 08இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்பின்னர் 2023 யூலை19இல் மீண்டும் ஜனாதிபதி ரணிலுடன் உரையாடும் போது இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரப் பகிர்வு குறித்து பேசவில்லை.
மாறாக தாம் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த மனித உரிமைகள் சார்ந்த விடயம்,காணாமல் போனோர் பணிமனை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாகவே விளக்கமளித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேசப்படாத நிலையில், சினமுற்ற இரா.சம்பந்தன் 'எங்களை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள். அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் எங்களுடன் பேசுங்கள்...' என்று தெரிவித்தார். இதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13ஐ நடைமுறைபடுத்துவது குறித்துப் பேசி காலத்தை கடத்தி ஏமாற்றினார்.
திரும்பவும் சம்பந்தன் ஆத்திரத்துடன் 'எங்களை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்' என கூறிவிட்டு சென்றார். இவ்வாறாக ஜனாதிபதி ரணில் ஏமாற்றிய பின்னர் சம்பந்தன் இறந்து அவர் உடலம் பொறலை மலர்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வேளையில் கடந்த 2024 யூலை 02ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது “நான் என்னுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களில் எஞ்சியிருந்த எனது சகாக்களில் ஒருவரான சம்பந்தன் இப்போது எங்களுடன் இல்லை. மிகவும் கடினமான காலகட்டங்களில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அவர் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார். ஒருமுறை அவர் என்னுடன் உரையாற்றும் போது 'ரணில்,நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த போது, 1948ல் நாடு சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்' என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார்” என கூறிய ரணில் “சம்பந்தனின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே எமது கடமை “ எனவும் ஒரு குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.
சம்பந்தன் உயிரோடு உள்ளவரை நிறைவேற்ற முடியாமல் வக்கற்றவராக செயற்பட்ட ஜனாதிபதி ரணில் அவரின் சாவை வைத்து அரசியல் செய்வதற்காக சம்பந்தனின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே தனது கடமை என கூறி தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெறும் நோக்கில் பேசியது தெளிவாக தெரிகிறது.
அறியாத உண்மைகள்
1982 தொடக்கம் 2024 வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்த எட்டு ஜனாதிபதிகளாலும் ஏமாற்றப்பட்ட சம்பந்தன், எதிர்வரும் 2024 செப்டம்பரில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்படும் ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவாகும் ஒருவருடனும் பேசி ஏமாறுவதற்கு முன்னர் உயிர்நீத்துவிட்டார்.
இல்லை எனில் எட்டு ஐனாதிபதிகளுடன் ஏமாற்றப்பட்டதைப் போன்று ஒன்பதாவது ஜனாதிபதியுடனும் தான் ஏமாற்றப்பட்டேன் என்ற வரலாற்றை படைத்திருப்பார்.
சம்பந்தன் தொடர்பாக அறிந்தும் அறியாத உண்மைகள்..!
1. 2014 செப்டம்பர் 27ஆம் திகதி இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் கல்லடி துளசி மண்டபத்தில் நடாத்திய வரவேற்பு வைபவத்தின் போதே சம்பந்தன் தாயகத்தலைமகன் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2. கனேடிய தமிழர் பேரவை கடந்த சனிக்கிழமை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்' (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
இந்த விழாவில் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன், குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் யோன் மக்கலம், ஒன்ரேறியோ மாகாண முதலமைச்சர் கத்லீன் வின், ஒன்ரேறியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அன்ரியா கோர்வத், ரொறன்ரோ மாநகர சபை முதல்வர் யோன் ரோறி, மார்க்கம் நகர சபை மேயர் பிராங் ஸ்காப்பித்தி, இஸ்ரோவில் மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று மட்ட அரசுகளில் உள்ள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 50 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
3. சம்பந்தன் 2012 மே 01இல் யாழ்ப்பாண மே தின மேடையில் வைத்து அப்போது பிரதமராக இருந்த ரணில் வேண்டுமென திட்டமிட்டு சிங்கக்கொடியை சம்பந்தனின் கையில் பிடிக்கவைத்தார். இந்தப்படம் ஊடகபரப்பில் வந்தபோது அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அந்த கொடி ரணிலால் சம்பந்தனுக்கு அவருக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை.
4. சம்பந்தன் திருகோணமலையில் 2004 அக்டோபர் 17இல் ஒரு நிகழ்வில் அவர் விரும்பி புலிக்கொடியை ஏற்றினார். அந்த நிகழ்வில் 22 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
5. 2004 நவம்பர் 27 அன்று சம்பந்தன் தலைமையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் மாவீரர்களுக்கு 22 உறுப்பினர்களால் தீபம் ஏற்றி நினைவுகூரப்பட்டதுடன் சம்பந்தன் மாவீரர்கள் தொடர்பாக புகழந்தும் பேசினார் என்பதும் வரலாறு.
-பா.அரியநேத்திரன்-
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Ariyam அவரால் எழுதப்பட்டு, 06 July, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.