விடுதலைப்புலிகளின் தலைவரிடம் அரியநேத்திரன் முன்வைத்த இரு கேள்விகள் (video)
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் கூட்டமைப்பை ஏன் பதிவு செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை 2004 ஆண்டிலேயே கூறியிருந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - பெரியகல்லாறு பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கம்
2010 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என முதலாவதாக முன்வைத்தவர்கள் ஈ,பி.எல்.ஆர்.எவ். ஐச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரனும், சிவசக்தி ஆனந்தன் அவர்களும், அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் ரெலோவும் இதனைப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் 2004 ஆம் ஆண்டு 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டோம்.அதில் நானும் ஒருவர், தேர்தல் முடிந்த பின்னர் நாம் முதன் முதலில் நாடாளுமன்றம் செல்லவில்லை.
மாறாக கிளிநொச்சியிலேயே இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தான் சென்றோம்.அதில் இயக்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலரும் இருந்தார்கள்.அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனிடம் இரண்டு விடயத்தை நான் வினவினேன்.
ஒரு கட்சியாக பதிவு செய்ய வேண்டும்
முதலாவதாக கருணா குழுவிலிருந்து வாகரையில் உயிரிழந்த போராளிகளை மாவீரர் பட்டியலில் சேர்க்க வேண்டும், அதற்கு அவர்
சம்மதம் தெரிவித்தார்.
இரண்டாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என கேட்டிருந்தேன். ஆனால் கூட்டமைப்பை பதிவு செய்யக்கூடாது என அவர் தெரிவித்தார்.
இதில் உள்ள நான்கு கட்சிகளுக்கும் தனித்தனியே கொள்கைகளும் கோட்பாடுகளும் இருக்கின்றன.அவர்கள் தனித்தனியே செயற்படலாம்,
தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செல்லலாம், அதனை இலங்கைத் தமிழரசுக் கட்சி
முன்னெடுத்துச் செல்லவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதற்காக தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாம் பதிவு செய்யவில்லை. இது தான் வரலாறு இதனை மாற்ற முடியாது.இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக தேர்தல்
இக்கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிப்பவர்கள் எல்லாம் 2010 ஆண்டுக்கு முன்னர் எவரும் கூறியிருக்கவில்லை.
2018 ஆம் ஆண்டு முதல் தடவையாக தேர்தல் இடம்பெற்ற போது அதனை எவ்வாறு எதிர்கொள்வது என மட்டக்களப்பில் தான் நாங்கள் கூடி முடிவெடுத்திருந்தோம்.அதில் அனைவரும் வட்டாரங்களுக்குச் சென்று பொது வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
அதில் எந்த கட்சியினதும் பெயர்கள் பாவிப்பது இல்வை என
முடிவெடுத்திருந்தோம். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எமது
தீர்மானம் மாற்றப்பட்டது.
அதன் பின்னர் தான் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளுக்கு பிரதேச சபைகள் பிரிக்கப்பட்டன.அதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக எமது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தேர்தல் பிரசாரத்திற்கு வர முடியாது என அதிலிருந்து விலகியிருந்தார் இதுதான் வரலாறு.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
1949ஆம் ஆண்டு தந்தை செல்வா அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்ததற்குப் பிற்பாடு, 1956ஆம் ஆண்டு மட்டக்களப்பிலே இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராஜதுரை, சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களையும் அடையாளம் கண்டிருந்தார்.
இவர்கள் ஊடாக தான் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியம் என்ற விதை விதைக்கப்பட்டது. அன்றிலிருந்து தற்போது வரைக்கும் பட்டிருப்புத் தொகுதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொகுதியாக இருந்து வருகின்றது.
1976.மே.16 ஆம் திகதி வட்டுக்கோட்டையிலே எடுக்கப்பட்ட சுதந்திர தமிழீழம் எனும் பிரகடனத்திற்குப் பிற்பாடு, அதன் ஆணையைப் பெறுவதற்கு வடகிழக்கிலிருந்து 23 வேட்பாளர்கள் தொகுதி ரீதியாக களமிறக்கப்பட்ட போது கணேசலிங்கம் அவர்கள் போட்டியிட்டடிருந்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சிய ஆரம்பிக்கப்ட்டடு 1949 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டு வரையிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியாகவே போட்டியிட்டிருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணி
1972 ஆம் ஆண்டு தமிழர் கூட்டணி என்று உருவாக்கப்பட்டாலும் கூட 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையிலே எடுக்கப்பட்ட சுதந்திர தமிழீழம் என்ற ஆணையைப் பெறுவதற்காக 1977ஆம் ஆண்டு தேர்தலிலே தமிழர் விடுதலைக் கூட்டணியாக அது சங்கமித்தது.அதனை ஆரம்பிப்பதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர்கள் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே தான்.
இதன் பின்னர் 1976ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையிலும் அனைத்து தேர்தலிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாக தான் நாம் போட்டியிட்டிருந்தோம்.
2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாக சங்கமித்தது. பின்னர் 2001டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் 15 பேர் நாடாளுமன்றத்திற்கும் தேர்வு செய்யப்பட்டிருந்து.
வடகிழக்கில் 70 சதவீத நிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் தன்னாட்சி அதிகார செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.அப்போது 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏக பிரதிநதிகளாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.ஆனந்தசங்கரி அவர்கள் மாத்திரம் அதற்கு இணங்கியிருக்கவில்லை.
வீட்டுச்சின்னம்
2004 இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் குழப்ப நிலை ஏற்பட்டது.பின்பு கிளிநொச்சியிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது என ஆலோசனை வழங்கப்பட்டது, இதுதான் வரலாறாகும்.2004 ஆம் ஆண்டிலிருந்து வீட்டுச்சின்னத்திலேயே நாம் போட்டியிட்டு வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ News Lankasri

குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. கண் கலங்கிய புகழ், சுனிதா Cineulagam
