தமிழ் மக்கள் எந்த முற்போக்கு சக்திகளை நம்பி வாக்களிப்பது..!
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முன்னேற்பாடுகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. ஜனாதிபதி தேர்தல் வந்துவிட்டால் சிங்கள தேசத்தின் இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்கும் தமிழ் மக்கள் மீது பெரும் அனுதாபங்கள் பொங்கி பிரவாகிக்க தொடங்கிவிடும்.
இவ்வாறு பொங்கி பிரவாகித்துத்தான் அனுரகுமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்துவிட்டார். அவர் வடிக்கும் முதலைக் கண்ணீரை பார்க்க ஒரு பெருங்கூட்டம் யாழ்ப்பாணத்தில் திரண்டு இருக்கிறது. இந்த தென்னிலங்கை தலைவர்களின் அரசியல் குத்துகரணங்களுக்கு அளவே கிடையாது.
இலங்கைத்தீவின் 75 ஆண்டுகால ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் சார்ந்து பேசப்படுகின்ற போது ""சிங்கள தேசத்தின் முற்போக்கு சக்திகளுடன் ஈழத் தமிழர்கள் கைகோர்க்க வேண்டும்"" என்று பலதரப்பட்டவர்களும் பேசுகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர் தரப்பில் இடதுசாரிகள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்கள் இந்த கூற்றை மந்திர உச்சாடனமாக தேர்தல் காலங்களிலும் ,தமிழர் அரசியற் தீர்வு பற்றி பேசுகின்ற போதும் உச்சாடனம் செய்வதை காணமுடிகிறது. அப்படியானால் இந்த முற்போக்கு சக்திகள் யார்? இவர்கள் கருதும் அந்த முற்போக்கு சக்திகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக ஏதாவது ஒரு உப்புக் கல்லைத்தானும் தூக்கிப் போட்டார்களா? என்பதை பற்றி அறிவது அவசியமானது.
ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு சிங்கள முற்போக்கு சக்திகளுடன் கைகோர்க்க வேண்டும் என்று தமிழ் தரப்பில் இருக்கும் இடதுசாரிகள் என தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் அல்லது தாராள வாதிகள் எனப்படுவோர் குரல் எழுப்புகின்றனர். இவர்கள் குறிப்பிடும் முற்போக்கு சக்திகள் யார் என்றால் அதில் முதன்மையானவர்களாக சிங்கள தேசத்தில் இருக்கின்ற இடதுசாரி கட்சிகளையும் இடதுசாரி செயற்பாட்டாளர்களையுமே குறிப்பிடுகின்றனர்.
ஒரு சிங்கள இனவாதி
இரண்டாவது முற்போக்கு சக்திகளாக தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்காக பரிந்து பேசி முதலைக் கண்ணீர் வடிக்கும் சிங்களத் தலைவர்களை குறிப்பிடுகின்றனர். இந்த இரண்டு வகையான வகையறாக்களில் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்காக பரிந்து பேசுவது, வாக்குறுதிகளை அள்ளி வீசுவது, கடந்த ஆட்சியாளர்களை நோக்கி குற்றம் சுமத்துவது, எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தேனாறும் பாலாறும் ஓடும் என மாயமான்களை காட்டும் சிங்களத் தலைவர்களை இப்போது விட்டுவிடுவோம்.
முதலில் இந்த இடதுசாரிகள் என்று அழைக்கப்படுகின்ற சிங்கள தேசத்தின் முற்போக்கு சக்திகள் என்று தமிழர் தரப்பிலிருந்து கைநீட்டப்படுபவர்கள் பற்றி சற்று பார்ப்போம். இலங்கையின் அரசியல் கட்சி என்றும் கட்சிக்குரிய தகுதி நிலை பெறாவிட்டாலும் தொழிலாளர் கட்சி(Labour party) 1928ல் A.E குணசிங்க என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
அதில் மத்திய குழு உறுப்பினராக A.மகாதேவா, C.W.W.கன்னங்கரா (அரசாங்க சபை உறுப்பினர்1936, இலவசக் கல்வியின் தந்தை) போன்றவர்கள் அங்கம் வகித்தனர். ஆனால் ஏ.இ.குணசிங்க மார்க்சிய வாதியல்ல. ஆனால் அவர் தமிழர் எதிர்ப்பு, மலையாளி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பனவற்றை தெளிவாகப் பேசிய ஒரு சிங்கள இனவாதியாக தன்னை வெளிக்காட்டத் தொடங்கியதனால் மகாதேவா அதிலிருந்து வெளியேறினார்.
அவ்வேளையில் 1946 ஆண்டு ரணசிங்க பிரேமதாசா தொழிற் கட்சியில் சேர்ந்தார் என்பதனையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதேவேளை மலேரியா தடுப்பு மற்றும் நிவாரண பணிக்காக ஆரம்பிக்கப்பட்ட சூரியமல் இயக்கத்திலிருந்து செயற்ப்பட்ட வைத்திய கலாநிதி எஸ் . ஏ. விக்ரமசிங்க, பிலிப் குணவர்த்தன, என்.எம் பெரேரா, லெஸ்லி குணவர்த்தன, கொல்வின் ஆர்.டி. .சில்வா, ரொபேட் குணவர்த்தன போன்ற முக்கியமானவர்கள் இணைந்து 18-12-1935ல் லங்கா சமசமாஜக் கட்சியைத் தோற்றுவித்தனர்.
தமிழ் மொழிக்கு சாதகமான நிலைப்பாடு
இதுவே இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட முதலாவது அரசியல் கட்சி யாகும். லங்கா சமசமாஜக் கட்சியில் ரஸ்கிவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தி மொஸ்கோ சார்பு நிலையை எடுக்க விரும்பியவர்களான எஸ்.ஏ.விக்ரமசிங்க, பீட்டர் ஹெனமன், எம்.ஜி.மெண்டிஸ், பொன்.கந்தையா, அ.வைத்திலிங்கம், நா.சண்முகதாசன், மு.கார்த்திகேசன் போன்றவர்கள் இணைந்து லங்கா சமசமாஜ கட்சியில் இருந்து பிரிந்து 03-07-1943ல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை (மொஸ்கோ சார்பு) தோற்றுவித்தனர்.
1956ம் ஆண்டு பொதுத் தேர்தலில் எஸ். டபுள்யூ .ஆர். டி. பண்டாரநாயக்கா தாம் வெற்றி பெற்றால் 24 மணி நேரத்தில் தனிச் சிங்கள மொழிச் சட்டத்தை உருவாக்குவேன் என தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்தார். அவ்வேளை இலங்கையில் சோசலிசத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற பிலிப் குணவர்த்தனவும், அவரது தலைமையிலான புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சியும் தீவிர தமிழின எதிர்ப்பு இனவாதம் பேசி 1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க தலைமையிலான மகாஜன எக்ஸத் பெரமுன கூட்டின் அங்கமாக இணைந்து செயற்பட்டு தம் கம்யூனிச முகத்திரையை கிழித்து இனவாதத்தை வெளிக்காட்டினர்.
அதேநேரம் தீவிர இனவாதம் பேசிய தொழிலாளர் கட்சியும் மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி 1955ம் ஆண்டு காலனி மகாநாட்டில் சிங்கள மொழி சட்டத்தை தீர்மானமாக நிறைவேற்றியது என்ற அடிப்படையிலேயே இந்தக் கூட்டு உருவாவதற்கான அடிப்படை காரணம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு இலங்கையில் தோன்றிய இடது இடதுசாரி தலைவர்களான என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர் டி சில்வா என்போரைத் தலைவர்களாகக் கொண்ட லங்கா சமசமாஜ கட்சி தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தது.
தமிழ் மொழிக்கு சமா அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், தமிழர்களின் இலங்கை நாட்டுக்கான பங்களிப்பு பற்றியும் விதந்து பேசியது போன்று இன்று வரை தமிழ் தலைவர்கள் யாரும் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அதேபோல எஸ்.ஏ.விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இதே போல தமிழ் மொழிக்கு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
இனவழிப்புக் கொள்கையின் வெளிப்பாடு
ஆனால் 1966ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து நடாத்திய மே தின ஊர்வலத்தில் தமிழரை இன ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் “தோசே, மசாலா வடே அப்பிட்ட எப்பா” என்ற கோசத்தை எழுப்பியதன் மூலம் தமது இனவாத நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். குறிப்பாகச் சொன்னால் 1960 களின் நடுப்பகுதியில் அனைத்து இடதுசாரிகளும் சிங்கள பௌத்த தேசியவாத கட்சிகளுக்குள் கரைந்து இனவாதிகளாக மாறிப் போய்விட்டார்கள் என்று சொல்வதே பொருந்தும்.
“மொழி ஒன்றெனில் நாடு இரண்டு, மொழிகள் இரண்டெனில் நாடு ஒன்று” என்று தீர்க்கதரிசனமான ஒரு கோட்பாட்டை முன்வைத்த கொல்வின் ஆர்.டி.சில்வாதான் தமிழ் மக்களுக்கு விரோதமான, தமிழ் மக்களுக்கு அரசியலில் பங்கற்ற, பௌத்த மதத்திற்கும் சிங்கள மொழிக்கும் முன்னுரிமை அளிக்கின்ற, ஒரு தீவிர இனவாத அரசியல் யாப்பை 1972ஆம் ஆண்டு உருவாக்குவதற்கு மூளையாகச் செயற்பட்டு வடிவமைத்தார். சட்டரீதியாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக் கொள்கையின் வெளிப்பாடாகவே "முதலாம் குடியரசு யாப்பு" உருவாக்கப்பட்டது. இத்தகைய இடதுசாரி கட்சிகளினதும், தலைவர்களினும் வழியில் இவற்றினது எச்சங்களாக, வாரிசுவாக இன்றைய தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளார்.
இவர்களை எந்த அடிப்படையில் தமிழ் மக்கள் நம்புவது? இவர்களை நம்பி எத்தகைய முற்போக்கு கூட்டுக்களை உருவாக்குவது? இவர்களால் தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு தீர்வை முன் வைக்க முடியுமா? அவ்வாறே தமிழ் மக்களுக்கு பரிந்து பேசி சமாதானம், சமத்துவம் என முழக்கமிட்டு லங்கா சமசமாஜ கட்சியில் இருந்து போடப்பட்ட குட்டியாக வெளியே வந்து ஈழத் தமிழர் உரிமைக்காக தீவிரமாக குரல் எழுப்பி நெருக்கடியான காலத்தில் யாழ்ப்பாணம் வரை தூதுவந்த வாசுதேவ நாணயக்கார அவர்களின் தலைமையிலான நவ சமசமாஜ கட்சி தீவிர இனவாதக் கட்சியாக மாறி ராஜபக்ச அரசாங்கத்துடன் தோள் கொடுத்து நின்ற வரலாற்றை இலகுவில் மறந்து விட முடியுமா? இவர்களையும் முற்போக்காளர்கள் என இனியும் நம்ப வேண்டுமா? இப்போது இறுதியாக முற்போக்காளர் பட்டியலில் உள்ள ஜே.வி.பி யினர் பற்றி பார்ப்போம்.
வந்தேறு குடிகள்
என். சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இருந்த ரோகண விஜயவீர, தமிழின எதிர்ப்பு உணர்வோடு, தமிழரான சண்முகதாசன் தலைமை தாங்கும் கட்சியில் தான் இருக்கக் கூடாது என்பதனாலேயே அக்கட்சியின் இளைஞர் அணியைப் பிரித்தெடுத்துச் சென்று ஜே.வி.பி. என்ற தனிச் சிங்கள கட்சியை உருவாக்கினார்.
31அக்டோபர் 1978 ல் யாழ் முற்றவெளி மைதானத்தில் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளர் ரி.சந்ததியார் தலைமை உரை ஆற்றும் போது ""ரோஹன விஜவீராவை நாம் நம்பக் கூடாது அவர் தமிழர் சுயநிர்னய உரிமையை ஏற்க மறுக்கிறார். தனது வகுப்புகளில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்கிறார்.
1977ம் ஆண்டு கலவரத்தின் போது தமிழ் மக்களை பாதுகாக்க தவறியவர். அதற்காக குரல் கொடுக்கவும் தவறியவர்.'"" என ஜே.வி.பி யின் உண்மை முகத்தை தோலுரித்தக்காட்டி பேசியதையும் இங்கே குறிப்பிட்டுச் செல்ல வேண்டும். சந்ததியார் ரோஹன விஜவீராவுடன் சிறையில் ஒன்றாக இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் வெளிப்பாடுதான் மேற்படி கூற்று.
இத்தகைய ஜே.வி.பி யினர் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியை நடத்தி பலத்த உயிரிழப்புகளை சந்தித்து தோல்வியடைந்த பின்னரும் சிங்கள தேசத்தின் இனவாத தேசியக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து இருப்பது என்பது ஒரு வியப்புக்குரிய விடயம் அல்ல. அரசியலில் அதிகாரமே முக்கியம்.
அதிகாரம் என்கின்ற நலனை அடைவதற்கு அரசியலில் கொள்கைகளும், கோட்பாடுகளும் தூக்கி வீசப்பட்டுவிடும் என்பதற்கு ஜே.வி.பி. நல்லதொரு உதாரணம். 2004 சுனாமி பேரிடருக்கு பின்னர் மீள் கடடுமான, நிவாரண பணிகளை செயற்படுத்த சுனாமி பொது கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இனப்படுகொலையின் கூட்டுப் பங்காளிகள்
சமாதான கால சம பங்காளிகளான விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி பொதுக் கட்டமைப்பில் நிர்வாக ரீதியாக செயல்பட முடியாது என கடுமையக எதிர்த்தார் அனுரகுமார திநாயக்க. அதற்காகவே தனது அமைச்சுப் பதவியைத் துறந்து சுனாமி பொதுக்கட்டமைப்பு இயங்குவதற்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி அக்கட்டமைப்பை இயங்க முடியாமற் செய்தவர்தான் இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களின் ஆதரவை வெறுவதற்காக வந்திருக்கும் இந்த அனுரகுமார திசநாயக்க.
அந்த சிறப்பு நடிகனை நம்பி தமிழ்மக்கள் வாக்களிக்க முடியுமா? இத்தகைய தென்னிலங்கை நடிகர்களின் நாடகங்கள் தமிழ் மக்களுக்கு புதியதொன்றல்ல. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடக்கு - கிழக்கு தற்காலிக இணைப்பை நிரந்தரமாகப் பிரிப்பதற்காக உயர்நீதிமன்றில் ஒரு வழக்கை தாக்கல் செய்து வெறும் சாதாரண சட்ட நுணுக்கத்தைப் பயன்படுத்தி வடக்கு - கிழக்கை இரண்டாகப் பிரித்து தமிழ் மக்களுக்குக் கிடைத்த அற்ப, சொற்ப அரசியல் தீர்வையே இல்லாமற் செய்தவர்களும் இந்த ஜே.வி.பி.யினரே என்பதை தமிழ் மக்கள் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். 2005ல் பொதுத் தேர்தலில் ராஜபக்சாக்களுடன் தேர்தற் கூட்டில் ஜே.வி..பி. யினர் சேர்ந்து கொண்டனர்.
ஜே.வி.பி.யினர் இந்திய எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்பவற்றைத் தெளிவாக முன்னிறுத்தி சிங்கள தேசத்தின் பட்டிதொட்டி எங்கும் மேடைகளில் பேசியதை எப்படி மறந்திட முடியும்? அத்தேர்தலில் ராஜபக்சக்களையும் வெல்ல வைத்து தாமும் 39 ஆசனங்களை பெற்றுக் கொண்டனர். இந்த வெற்றியின் பின்னர் ஜே.வி.பி யினர் தமிழினத்திற்கு எதிரான யுத்தத்திற்கு சிங்கள தேசமெங்கும் ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் பிரச்சாரத்தை பெருமெடுப்பில் முன்னெடுத்து கணிசமான சிங்கள அடித்தட்டு இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்தனர்.
இவர்களே முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை வகை தொகையின்றிப் படுகொலை செய்த முன்னணி படை பிரிவினராகச் செயற்பட்டு இருந்தனர். எனவே 2009 முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் மீதான ராஜபக்சக்கள் நடாத்திய இனப்படுகொலையின் கூட்டுப் பங்காளிகளாக ஜே.வி.பி. கட்சியினரே இருக்கின்றனர்.
இத்தகைய இனப்படுகொலையாளிகளை தமிழ்மக்கள் எப்படி நம்புவது? கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வாதத்திற்கு உட்பட்ட சிங்கள பௌத்த இனவாதத்தை தமிழ் மக்கள் ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் சிங்கள தேசத்தில் உதிரிகளாக, சிங்கள மக்கள் மத்தியில் பலமற்றவர்களாக காணப்படுகின்ற பேராசிரியர் விக்ரமபாகு கருணரத்த போன்ற சில முற்போக்கு வாதிகளுடன் தமிழ் மக்கள் கைகோர்த்து எதனை அடைய முடியும்? தனிப்பட்ட நபர்களின் வாக்குறுதிகளையோ, தனிப்பட்டவர்களின் வார்த்தை ஜாலங்களையோ நம்புவது மிக ஆபத்தானது.
இப்போது இந்த இனப்படுகொலை கூட்டுப் பங்காளிகளை தமிழ் மக்கள் நீதிவிசாரணைக்கு உட்படுத்தித் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டியதே அவசியமாகும். இனப்படுகொலையாளியான அனுரகுமாரதிநாயக்காவை தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 10 April, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.