மன்னாரில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள்
மன்னாரில் (Mannar) 2ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வு குறித்து நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன.
குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இன்றைய தினம் புதன்கிழமை (12.06.2024) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
எனினும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் எவ்வித அனுமதியும் வழங்கப்படாமல் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
காற்றாலை மின் செயற்றிட்டம்
குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் 2ஆவது கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு குறித்து கலந்துரையாடப்பட்ட போது பல்வேறு தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மன்னார் தீவு பகுதிக்குள் கணிய மணல் அகழ்வு அல்லது ஆராய்ச்சி
நடவடிக்கைகள் இனி இடம் பெற கூடாது என பல முறை தெரிவிக்கப்பட்ட போதும் குறித்த
அகழ்வு தொடர்பாக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டமைக்கு எதிர்ப்பு
வெளியிடப்பட்டது.
மேலும், கடந்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது காற்றாலை மின் செயற்றிட்டம் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த போதும் இதுவரை எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மன்னார் தீவில் கணிய மணல் அகழ்வை முன்னெடுக்கும் நிறுவனத்தை அழைத்து கலந்துரையாடியமையை ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |