பேராயர் டெஸ்மண்ட் டூட்டு காலமானார்!
தென்னாபிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உதவியமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டூட்டு தனது 90 வது வயதில் காலமானார்.
அவரது மரணத்தை உறுதி செய்துள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோச, கேப்டவுணில் வைத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக கூறியுள்ளார்.
விடுதலை பெற்ற தென்னாபிரிக்காவை மக்களுக்கு வழங்கியவராக டெஸ்மண்ட் டூட்டு வரலாற்றில் பதிவாகியுள்ளதாக சிரில் ரமபோச தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெஸ்மண்ட் டூட்டு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அறியப்பட்ட தென்னாபிரிக்காவின் சிறந்த நபர்களில் ஒருவராக காணப்படுகின்றார். நாட்டின் கறுப்பின பெரும்பான்மையினருக்கு எதிரான வெள்ளையினத்தவர்களின் கொடூரமான ஒடுக்குமுறையை வெளிப்படையாக அவர் விமர்சித்திருந்தார்.
அத்துடன் தென்னாபிரிக்காவின் வெள்ளையினத்தவர்களின் சிறுபான்மை ஆட்சிக்கு எதிராக வன்முறையற்ற எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டமைக்காக 1984 ஆம் ஆண்டு டெஸ்மண்ட் டூட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தைரியம், கருணை, பிறர் நலனில் இறுதிவரை அக்கறை கொண்டவராக அவர் திகழ்ந்தார் என தென்னாபிரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam