மட்டக்களப்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் சேவைகளை பாராட்டிய அலி சாஹிர் மௌலானா
கிழக்கு மாகாணத்தில் இருதய நோய் தொடர்பான சிகிச்சைகளை இலவசமாக வழங்கி வருகின்ற மட்டக்களப்பு - குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையின் சேவைகளை பாராட்டும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது குறித்த வைத்தியசாலையின் நாளாந்த மருத்துவ சேவைகள் மற்றும் அதி நவீன வசதிகள் கொண்டதாக அமையப்பெற்றுள்ள இருதய நோய் சத்திர சிகிச்சை கூடம் என்பவற்றையும் பார்வையிட்டுள்ளார்.
இருதய நோயாளர்கள்
450 மில்லியன் பெறுமதியான நவீன இயந்திரத்துடன் 1500 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 700இற்கும் அதிகமான இருதய நோயாளர்களுக்கு அஞ்சியோ சோதனைகள் மற்றும் இருதய செயற்பாட்டிற்கு அவசியமான ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலையில் 9 குழந்தைகளுக்கு இருதய அறுவை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர் என வைத்திய அத்தியட்சகர் இதன்போது தெரிவித்துள்ளார்.