தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெண் பிரதமர் : விஜித ஹேரத் தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ( Vijitha Herath ) தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 47.3 சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்படும் என மினுவாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 பேர் கொண்ட அமைச்சரவை
அநுரகுமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அரசாங்கத்தை நடத்த முடியும் என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அநுர ஜனாதிபதியான பின்னர் கொழும்பு மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள லக்மன் நிபுனாராச்சி புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் 4 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்கலாம், ஒரு புதிய பிரதமர் நியமிக்கப்படுவார், அது, ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்.
பல தொழில் வல்லுநர்கள்
சுவிட்சர்லாந்தில் ஏழு பேர் கொண்ட அமைச்சரவை மட்டுமே இருப்பதாக சுட்டிக்காட்டிய விஜித ஹேரத், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் வரை நான்கு பேர் கொண்ட அமைச்சரவை இரண்டு மாதங்களுக்கு இயங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்கள் யாராவது இருக்கிறார்களா என மக்கள் கேள்வி எழுப்புவதாக கூறிய அவர், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த கலாநிதிகள், பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் என பல தொழில் வல்லுநர்கள் தமது கட்சியில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹரிணி அமரசூரிய, நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் அவரை யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது அவர் நாடு முழுவதும் அறியப்பட்டுள்ளார்.
இதனைப்போன்று நாட்டுக்கு பெரும் பங்களிப்பைச் செய்யக்கூடிய எத்தனையோ பேர் தம்முடன் இணைந்திருப்பதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |