நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினராக நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்
நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமிக்கப்படுவதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபை வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு சபை கடந்த 22ம் திகதி நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் கூடியது.
அதன்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நீதியரசர் யசந்த கோதாகொட தொடர்பில் முன்வைத்திருந்த பரிந்துரையை பரிசீலித்ததன் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வு பெற்றதன் காரணமாக
அரசியலமைப்பின் படி, நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்ததாக சிரேஷ்ட நிலை வகிக்கும் நீதியரசரே நியமிக்கப்பட வேண்டும்.

அதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீதிபதி யசந்த கோதாகொட பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்திருந்தார்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா ஓய்வு பெற்றதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காகவே யசந்த கோதாகொட நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார்.