ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை
பொருளாதார நெருக்கடியுள்ள சுமார் ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
முதலாம் தரத்தில் இருந்து 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் பொருளாதார நெருக்கடியுள்ள ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் "ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025"க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமான www.facebook.com/president.fund மூலம் விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவுறுத்தல்களை மூன்று மொழிகளிலும் பெற முடியும்.
மேலும் சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.03.2024 ஆம் திகதிக்கு முன் மாணவர்கள் தாம் கற்கும் பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,600 மில்லியன் ரூபா நிதி
வலய/மாகாணக் கல்வி அலுவலகங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு பாடசாலையின் தலைமையாசிரியரும் தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பொறுப்பான குழுவிற்கு தலைமை தாங்குவார், பிராந்திய மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையுடன். சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு அளவுகோல்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும், செயல்முறை முழுவதும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
இந்த முழு வேலைத்திட்டத்திற்காகவும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 3,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் நேரடியாக ஜனாதிபதி நிதியத்திற்கு அனுப்பப்படக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.