ஆப்பிள் சாதனங்களின் விலைகள் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, உலகளவில் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்டுள்ள உற்பத்திச் செலவீன உயர்வை ஈடுகட்டும் வகையில் விலைகளை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்துள்ளதால், தொழில்நுட்ப சந்தையில் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் பாகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.
இது ஒட்டுமொத்த தொழில்நுட்பத்துறையிலும் உற்பத்திச் செலவை பன்மடங்கு உயர்த்தியுள்ளதாக டிம் குக் சுட்டிக்காட்டியுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எங்கள் மீது சுமத்தப்படும் இந்த பாரிய செலவீன உயர்வை கட்டுப்படுத்த நாங்கள் எங்களால் இயன்றவரை முயற்சித்து வருகிறோம். வாடிக்கையாளர்களை இந்த திடீர் விலை உயர்வுகளில் இருந்து பாதுகாக்கவே நாம் இதுவரை முயன்றோம், ஆனால் தற்போதுள்ள நிலைமையை இனிமேலும் அவ்வாறு நீடிக்கச் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
எந்தெந்த சாதனங்கள் பாதிக்கப்படும்? இந்த விலை உயர்வு எப்போது முதல் அமலுக்கு வரும், எவ்வளவு தொகை அதிகரிக்கப்படும் அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் எந்தெந்த குறிப்பிட்ட தயாரிப்புகள் இதனால் பாதிக்கப்படும் என்பது குறித்த விபரங்களை அவர் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
இருப்பினும், செயற்கை நுண்ணறிவு சர்வர்களில் பயன்படுத்தப்படும் அதி-அலைவரிசை மெமரி (High-bandwidth memory) தயாரிப்புக்காக உலகளாவிய விநியோகம் பெருமளவில் திருப்பப்படுவதால், DRAM மெமரி விலைகள் அதிகரிப்பது குறித்து ஆப்பிள் நிறுவனம் குறிப்பாக கவலை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர்கள் சாதனங்களை அதிகம் விரும்பும் ஒரு காலகட்டத்தில் விநியோகம் குறைவாக உள்ளது. இதனால் மெமரி உற்பத்தியாளர்கள் பெருமளவிலான விலை உயர்வை எங்கள் மீது திணிக்கிறார்கள். நுகர்வோர் தயாரிப்புகளுக்கான மெமரி விலை மற்றும் விநியோகம் மீண்டும் ஒரு நியாயமான நிலைக்குத் திரும்புவது அவசியமாகும் என குக் மேலும் கூறியுள்ளார்.
விநியோகத்தை சீராக்க ஆப்பிளின் அடுத்த கட்ட நடவடிக்கை மெமரி விநியோக தட்டுப்பாட்டை நீக்கி அதனை அதிகரிப்பதற்காக, ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த நிதி வளங்களைப் பயன்படுத்தி சந்தைக்கு உதவத் தயாராக இருப்பதாக டிம் குக் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த சிக்கலுக்கு தீர்வாக ஆப்பிள் நிறுவனம் தனக்கென சொந்தமாக மெமரி மற்றும் ஸ்டோரேஜ் உற்பத்தி ஆலைகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை ரிம் குக் முற்றிலும் நிராகரித்துள்ளார்.