பதவி விலகவுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவருக்கு எதிராக ஒரு பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் கருணாரத்ன இந்த மாத இறுதியில் தனது பதவி விலகலை சமர்ப்பிக்க உள்ளதாக அறியப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
முன்னதாக, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதான 63 வயதை எட்டியவுடன் இந்த ஆண்டு ஜூன் 16ஆம் திகதி அவர் ஓய்வு பெறவிருந்தார்.
இதேவேளை, கருணாரத்னவின் அண்மைய செயல்களை மேற்கோள் காட்டி அவருக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இடையே நடந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள 11 கடுமையான குற்றவியல் வழக்குகளை' விரைவுபடுத்த சட்டமா அதிபர் திணைக்களம் முடிவெடுத்துள்ள நிலையிலேயே இந்த குற்றப்பிரேரணை தீர்மானமும் வந்துள்ளது.

இந்தநிலையில், நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளை மேலதிக விசாரணைகளுக்காக மீண்டும் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் ரணசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதால், மூன்று வழக்குகள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள நான்கு வழக்குகளில் சந்தேக நபர்களுக்கு எதிராக வரும் வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளன.
அரசியலமைப்பு பேரவை
சில குற்றங்கள் வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ளதாகத் தோன்றுவதால், விசாரணைகளை நடத்துவதற்கு சட்ட உதவி வழங்க சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளை முடித்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரஸ்பர சட்ட உதவிச் சட்டங்களின் கீழ் இந்த நாடுகளிடமிருந்து உதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் செய்தியாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, மூன்று கடற்படை உறுப்பினர்களை கைது செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இருப்பினும், அந்த அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படவில்லை. அதற்கு பதிலாக, விசாரணை கோப்பு வேறொரு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு நான்கு நீதியரசர்களை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் செய்யப்பட்ட பரிந்துரைகளை அரசியலமைப்பு பேரவை அங்கீகரித்துள்ளது.
அதன்படி, சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் அபயகோன் மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் இன்று(12) உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவியேற்க உள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        