உள்ளூராட்சித் தேர்தலிலாவது தமிழர்கள் ஒன்றுபடுவார்களா...!
"வரலாற்றுக்கு மன்னிக்கத் தெரியாததைத் தவிர தெரியாதது என்று ஒன்றும் இல்லை" எனவேதான் வரலாற்றை கண்டிப்பான கிழவி என்கின்றனர்.
இத்தகைய வரலாறு மனித குலத்திற்கு அதன் காலத் தேவைகளுக்கு ஏற்ப பாடங்களை கற்றுத் தராமல் விட்டதில்லை. தோல்விகளிலிருந்தும், அழிவுகளில் இருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களை முதலீடாகக் கொண்டே இன்றைய உலகின் அரசியல் முறைமை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய அனுபவங்களின் வாயிலாகவே மானிட குலத்தின் முன்னேற்றத்திற்கான பாதைகள் வரையப்பட்டன. ஆயினும் இத்தகைய வரலாற்றில் இருந்து இன்னும் தமிழர்கள் பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் எதார்த்தம்.
ஈழத் தமிழரின் அரசியலில் கடந்த வருடம் நடந்து முடிந்த இரண்டு தேர்தல்களும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு புதிய பாடங்களை மீண்டும் கற்றுக் கொடுத்திருக்கிறது.
தமிழ் தேசியம்
அந்தப் பாடங்களில் இருந்து தமிழ் மக்கள் ஒன்றுபட்டாலே வாழ்வு, இல்லையேல் அழிவு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் இப்போது தமிழ் தேசியம் பேசும் கட்சிகளை ஐக்கிய படுத்துவதற்கான சமிக்ஞைகள் தென்படுவது வரலாற்று வளர்ச்சியின் வளர்முகம் தான்.
இந்த சாதகத் தன்மையை சரிவரப் பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியலுக்கான புதிய வழியை திறக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் படிப்படியாக தொடர் பிரிவுகளைச் சந்தித்து சிதறண்டு போயுள்ளன. தாமே தனித்து அரசியல் தலைமைகள் என்று முழங்கி எதனையும் சாதிக்க முடியவில்லை.
தமிழ் மக்களை கருத்தியலால் வென்று தம்மை தனித்தலைமைகளாக யாராலும் முன் நிறுத்தவும் முடியவில்லை. ஆகவே இன்றைய சூழலில் தனி தலைமை தோற்றம் பெறுவதற்கோ, வளர்ச்சி பெறுவதற்கான கள எதார்த்தம் இப்போது தமிழர் தாயகத்தில் இல்லவே இல்லை.
ஆகவே, தமிழ் அரசியல் பரப்பில் உள்ள தலைவர்கள் எனப்படுபவர்கள் ஒரு கூட்டுத் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட்டு செயல்ப்பட உடன்படுவதுவே இன்றைய காலத்திற்கு பொருத்தமானதாகும். தமிழ் மக்கள் முற்றிலும் அறிவுபூர்வமான, நடைமுறைக்கு சாத்தியமான புதிய அரசியல் பாதையை திறந்து முன்னேற வேண்டுமென நிகழ்போக்கு அரசியலின் விளைவுகள் உந்தித் தள்ளுகின்றன.
இத்தகைய அரசியல் விளைவுகளின் உந்துவிசைதான் இப்போது கஜேந்திரகுமார் தமிழ் கட்சிகளின் ஐக்கியத்திற்காக முதலில் முன்வந்து குரல் கொடுத்திருக்கிறார். அது வரவேற்கத்தக்கது ஒன்றுதான். இது காலத்தின் தேவையும் கூடத்தான்.
தமிழ் தலைமைகள்
இந்த ஆரம்பத்தை தமிழ் தலைமைகள் சரியாகப் புரிந்து கூட்டிணைந்து முன்னெடுக்க வேண்டுமென காலச்சூழல் நிர்ப்பந்திக்கிறது. இத்தகைய செயற்பாடுகளை எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலோடு பொருத்தியும் ஒப்பிட்டும் ஆராய்வது அவசியமாகிறது.
இந்த மாதம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதாக அரசு அறிவித்துவிட்டது. ஆனாலும் உள்ளூராட்சி தேர்தல் நடைமுறையில் பல சிக்கல்கள் இப்போது உள்ளன. முதலாவதாக தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு. இரண்டாவது ஏற்கனவே உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்கள் நான்கு வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆயினும் அது காலவரையறை இன்றி பிற்போடப்பட்டிருந்தது. இப்போது அந்த வேட்பு மனுக்களை காலவதியாக்கி நிராகரிக்க வேண்டிய தேவை ஒன்று உள்ளது. ஏனெனில் அன்றைய உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராக இருந்தவர்கள் இப்போது அவர்கள் குறிப்பிட்ட கட்சிகளில் இல்லை.
அவர்கள் வெவ்வேறு கட்சிகளாக பிரிந்தும், புதிதாக தோன்றிய கட்சிகளுக்குள்ளும் இருக்கின்றார்கள். இந்நிலையில் அந்த வேட்பு மனுக்களையும், அதற்காக கட்டப்பட்ட கட்டுப்பணமும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அதற்கான சட்ட நடைமுறைகள் நாடாளுமன்றத்தின் ஊடாக கொண்டுவரப்பட வேண்டும். அத்தகைய நடைமுறைக்கு ஒரு குறிப்பிட்ட காலகவசம் தேவைப்படும்.
குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு ஆகக் குறைந்தது இரண்டு வாரங்களாவது இன்றைய அநுர தலைமையிலான அரசாங்கத்துக்கு தேவை. அதற்குப் பிற்பாடுதான் தேர்தல் திகதியை இவர்களால் அறிவிக்க முடியும். ஆகவே தை மாதத்தில் தேர்தலை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் மிக அரிது. ஆயினும் பெப்ரவரி மாதத்தில் நிச்சயமாக உள்ளூராட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என அறிவிக்கப்படும்.
தமிழர் தரப்பு
மார்ச் மாதத்தின் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்திலோ தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே இப்போது இரண்டு மாதங்கள் மாத்திரமே தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கான கால அவகாசமாக எம் கையில் உள்ளது. எனவே உள்ளூராட்சிசபை தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை இப்போதே நிர்ணயம் செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் தேசியம் பேசுகின்ற அனைவருக்கும் உண்டு.
ஆகவே கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியம் பேசும் தமிழ் கட்சிகள் நான்கு பிரிவுகளாகவும் பல சுயேட்சைக் குழுக்களாகவும் நின்று போட்டியிட்டதன் விளைவே யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டதும்.
தமிழ் தேசியம் பேசிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையே பெற முடிந்தது என்ற அடிப்படையில் பார்த்தால் தமிழ் கட்சிகளின் பிரிவினையே சிங்கள தேசியக் கட்சிகளின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததை அவதானிக்கலாம்.
தமிழ் தேசிய பேசுகின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக ஒரு குடைக்கீழ் நின்று ஒரு சின்னத்தின்கீழ் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு இருந்திருந்தால் ஐந்து ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தன.
கடந்த தேர்தலில் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒன்று கூட்டிப் பார்த்தால் இந்த உண்மை புரியும். ஆகவே நடைமுறை ரீதியாகவும், காலத்தின் தேவைகளையும், அவசியத்தையும் கருத்தில் கொண்டு தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் உள்ளூராட்சிசபை தேர்தலை எதிர்கொண்டால் மாத்திரமே தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும். அதனைத் தேர்தலின் மூலம் நிரூபிக்கவும் முடியும்.
தமிழ் மக்கள் ஒரு போதும் தமிழ்த் தேசியத்தை கைவிடவில்லை, கைவிட மாட்டார்கள் என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லவும் முடியும். இன்று இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை பிடித்திருக்கின்ற இடதுசாரிகளான எம்.பி.பி தலைவர்கள் “ஒரு நாடு“, “ஒரு மக்கள்“, “யாவரும் இலங்கையர்கள்“ என்ற கோட்பாட்டை முன்வைக்கின்றனர்.
யாவரும் இலங்கையர்கள்
இது மிகவும் ஆபத்தானது. அளவால் பெரிய தேசிய இனம் அளவால் சிறிய தேசிய இனத்தை விழுங்குவதற்கான, இனக் கலப்புச் செய்வதற்கான, இனக்கரைப்புச் செய்வதற்கான மூலோபாயச் சொல்லாடல்தான் “யாவரும் இலங்கையர்கள்“ என்ற கோட்பாடாகும்.
இதன் இறுதி வடிவம் தமிழின அழிப்பு என்பதில் சென்று முடியும். ஆகவே தமிழ் மக்கள் இனவழிப்பிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதற்கு தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். கட்சிகள் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும்.
ஈழத் தமிழர்கள் தம்மை தேசிய இனமாக நிலை நிறுத்துவதற்கும், தம்மைத் தாமே ஆளுகின்ற சுய நிர்ணய உரிமைக்கு உரித்து உடையவர்கள் என்பதை நிரூபிப்பதற்கும் தமிழ் மக்களையும், தமிழ் அரசியல் கட்சிகளையும் ஐக்கிய படுத்தி தேசமாக திரளவேண்டும். அவ்வாறு திரட்சி பெற்று எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொண்டு அமோக வெற்றியை பெற்றால் மாத்திரமே இப்போது ஆட்சியில் இருக்கின்ற அநுர அரசாங்கத்தை எதிர்கொள்ள முடியும்.
தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு திட்டம் தொடர்பாக இலங்கை தீவுக்குள்ளேயும், சர்வதேச பரப்பிலும் பேசமுடியும், அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் முடியும்.
இந்தப் பின்னணியில் தற்போது கஜேந்திரகுமார் முன்மொழிந்திருக்கும் அல்லது அவர் விடுத்த அழைப்பை தமிழ் கட்சிகள் பரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ஒரு குறுகிய கால அவகாசத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மேசையில் அமர்ந்து பேசி இருக்கிறார்கள்.
இது ஒரு நல்ல சமிக்ஞைதான். இதை அத்திவாரமாகக் கொண்டு அடுத்த கட்ட முன்னேற்றகரமான ஐக்கியத்திற்கான பாதையில் நகர வேண்டியது இன்றைய காலத்தின் தேவை.
மூன்று கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் முதற்கட்ட பேச்சுக்களை நடத்தி இருக்கிறார்கள் என்று இதனை எடுத்துக்கொண்டு செயற்படுவதுதான் தமிழ் மக்களுக்க நன்மை பயக்கும்.
மாறாக அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுக்கள் என்று அதனை மல்லினப்படுத்தி ஐக்கியத்திற்கான மூளையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது தமிழ் தேசிய அழிவை ஊக்கப்படுத்தி எதிரிக்கு சேவகம் செய்வதாகவே அமையும்.
இதனை சில தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்வதாக அதிலும் குறிப்பாக சாணக்கியன் ஊடகப் போட்டி ஒன்றில் "மதிய உணவு நேரத்தில் அவர்கள் தனிப்பட்ட ரீதியாக பேசிக்கொண்டது""என்றும் சிறீதரன் தமிழர் கட்சியின் பொறுப்பு வாய்ந்தவர் அல்ல என்று கூறியிருக்கிறார்.
அக்கூற்று அவர் வேறு ஏதோ ஒரு உள்நோக்கத்தை கொண்டதாக அமைதியாகவும், இது ஒரு நாசக்கார மறைமுக வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறதா? என்ற சந்தேகமும் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிகழ்வை ஒரு வரலாற்று பார்வையோடு பார்ப்போமானால் 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழரசு கட்சியின் செயலாளர் அமிர்தலிங்கமும், காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சிவசிதம்பரமும் தோல்வியடைந்திருந்தனர்.
தமிழ் அரசியல் கட்சிகள்
தோல்வி அடைந்த இரண்டு செயலாளர்கள் இலங்கையின் முதலாம் குடியரசு யாப்பு வெளிவந்ததன் பிற்பாடு 1972 முற்பகுதியில் யாழ்பாணத்தில் இருந்து கொழும்புக்கு விமான மூலம் செல்வதற்கு சென்றபோது விமான போக்குவரத்து ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதனால் பலாலி விமான நிலையத்திலிருந்து இருவரும் சந்தித்து பேசநேர்ந்தது.
அந்தப் பேச்சுத்தான் அடுத்து வந்த ஒரு வாரத்துக்குள் “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி“ என்ற கூட்டு கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான அத்திவாரத்தை இட்டது.
அதுவே பின்னாளில் 1976 ஆம் ஆண்டு “தமிழர் விடுதலைக் கூட்டணி“ என பரிணமித்து வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழ் மக்களின் முதுசமாக முன்வைத்த1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் தேசியத் திரட்சியை உலகுக்கு பறைசாற்றியதோடு தமிழ் மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையையும் கோரி நின்ற வரலாற்றை இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அன்றைய அத்தகைய ஒரு சூழமைவுதான் இன்று தமிழரசியல் சூழலில் நிலவுகிறது. இப்போது தமிழ் அரசியல் கட்சிகள் மக்கள் ஆதரவை சற்று இழந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்.
ஆயினும் மக்கள் ஆதரவைத் திரட்டி தேசமாக திரள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஐக்கியப்பட்டால் தமிழ் மக்களின் வாக்குகளை ஒன்று குவிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஆகவே இன்றைய இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை இனக்கலப்பு செய்து, இனக்கரைப்புச் செய்து ஈற்றில் இலங்கை தீவுக்குள் தமிழ் இனத்தை இல்லாது ஒழிக்கின்ற நாகாஸ்திரத்தை தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கிறது.
அநுர குமார ஏவிய இந்த நாகாஸ்த்திரத்தை எதிர்கொள்வதற்கு நாம் தமிழ் மக்களை ஐக்கிய படுத்தி, கட்சிகளை ஐக்கியப்படுத்தி வட-கிழக்கு தமிழ் மக்கள் தேசமாகத் திரட்டுவதுதான் அநுர அரசாங்கத்தின் நாகாஸ்திரத்துக்கு எதிரான கருடாஸ்திரமாக அமையும்.
அதுவே தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணப்பாதைக்கான கதவுகளை திறக்கவைக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 12 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.