20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்த எம்.பிக்களுக்கு மன்னிப்பு! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி மன்னிப்பு வழங்கியுள்ளதாக அந்த கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கட்சி மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரும் நிபந்தனையின் அடிப்படையில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் அண்மையில் கூடியதுடன் இதன் போது இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலை கட்சியின் அதியுயர் பீடம் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த நிலையில் தமக்கு வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கோர நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கினர்.
தற்போதைய அரசாங்கத்திற்கு இதுவரை ஒரு எதிர்பார்ப்புடன் வழங்கிய ஆதரவுக்கு அரசாங்கம் வழங்கிய பதில் குறித்து கடும் வருத்தத்தை வெளியிடுவதாக அறிவிக்குமாறு கட்சியின் அதியுயர் பீடம் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது எனவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
இதேவேளை கோவிட் - 19 வைரஸ் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அரசாங்க தரப்பில் கூறியதால், தாம் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்ததாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எம்.எம்.ஹாரிஸ், எம்.எஸ். தவ்பிக், அன்வர் ஆகியோர் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.