தென்னிலங்கையில் ஓயும் அலை - மக்களின் நம்பிக்கையை இழக்கும் ஜனாதிபதி அநுர
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்து சமகால ஜனாதிபதி அநுகுரமார(Anura Kumara Dissanyaka) வெளியிட்ட தகவல்கள் தென்னிலங்கை அரசியலில் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.
கடந்த 19ஆம் திகதி களுத்துறை, கட்டுகுருந்தவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் மகிந்தவின் வாசஸ்தலம் குறித்து கடுமையான தொனியில் ஜனாதிபதி உரையாற்றிருந்தார்.
இந்த உரை தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிக்கு விசுவாசமான சில கட்சிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
உத்தியோகபூர்வ இல்லம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக அநுரகுமார திசாநாயக்கவின் உரையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவந்த அரச தலைவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்கான முறை குறித்து அவர்கள் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மகிந்த தொடர்பிலான ஜனாதிபதியின் கடுந்தொணியிலான உரையை தேசிய மக்கள் சக்தியின் ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். எனினும் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பவர்களும் வாக்களித்தவர்களும் ஜனாதிபதியின் உரையால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சமகாலத்தில் மிகவும் பலவீனமாக இருக்கும் பொதுஜன பெரமுனவுக்கு இது சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் அதிருப்தி
இதேவேளை அண்மைக்காலமாக அநுர அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்து வரும் நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்களின் அதிருப்தியை ஜனாதிபதி அநுர தனியாக நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்காக முயற்சிப்பதன் மூலம், ஜனாதிபதி நிர்வாகத் தலைவர் என்ற அவரது பதவியின் கண்ணியத்தை அவரது உரையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என ஆளும் கட்சியின் ஆதரவாளர்களில் மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பல்வேறு நிறுவனங்கள், துறைகள் மற்றும் பாதுகாப்புப் படைகள் குறித்து ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்த கருத்துகள், அந்தத் துறைகள் மற்றும் தனியார் துறை அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறிது காலத்திற்கு பிறகு, ஜனாதிபதி ஒரு பொது மேடைக்கு வந்து மக்களிடம் உரையாற்றியபோது, மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகளை வழங்குவது, நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னோக்கி நிர்வகிப்பது மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது என்பது பற்றி அவர் பேசுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
தென்னிலங்கை அரசியல்
வேலைவாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குவது, மக்களின் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து அவர் கருத்து வெளியிடவில்லை. ஆனால் அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது செய்ததைப் போலவே விமர்சனங்கள் நிறைந்த உரையை மட்டுமே நிகழ்த்தினார் என நடுநிலை தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கட்டுகுருந்த உரை அவரது கட்சியின் ஒரு பிரிவினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும் பல தரப்பினரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருவதாக தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Vethu அவரால் எழுதப்பட்டு, 22 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.