7.7 பில்லியன் ரூபா உருவாகும் முக்கிய திட்டம்
அனுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் புராதன மதப் பின்னணியைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டப் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று நேரடியாக நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்திய அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 7.7 பில்லியன் ரூபாவாகும். இதற்கான அபிவிருத்திக் கட்டமைப்புத் திட்டம் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம் புனித நகரத்துக்கு சென்ற ஜனாதிபதி, நடந்து சென்று அபிவிருத்திப் பணிகளுக்குரிய காணிகள் மற்றும் திட்ட வரைபடங்களைப் பார்வையிட்டமையுடன், அதிகாரிகளுடன் கலந்துரையாடி முன்னேற்றக் கட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
8 ஏக்கர் பரப்பளவு
புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று தடாகங்களைச் சுற்றியுள்ள வீதி அபிவிருத்திப் பணிகள், மேற்கு ஆராமய விகாரை வளாகத்தின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் ருவன்வெலிசாயவுக்கு அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள வாகன நிறுத்துமிடத்துக்கான காணி என்பவற்றையும் ஜனாதிபதி ஆய்வு செய்தார்.

தொன்மை மற்றும் மதப் பின்னணியைப் பாதுகாத்து அனைத்துப் பணிகளையும் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, திட்ட அமுலாக்கத்தின் போது எழும் பிரச்சினைகளுக்குத் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் இணைந்து தீர்வுகண்டு பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சாயவை வழிபட்டு ஆசி பெற்ற ஜனாதிபதிக்கு, ருவன்வெலிசாய விகாராதிபதி ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.
இந்த நிகழ்வில் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உட்படத் துறை சார்ந்த பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



