கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால் பொது சேவையை முறையாக செய்யுங்கள் - அனுராதா யஹம்பத்
மக்கள் சேவையை முறையாக செய்யாமல் இறைவனின் ஆசியை எதிர்பார்க்கக் கூடாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட பிரதேச செயலக காணி திணைக்களத்தின் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக UNHCR அமைப்பினால் அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நேற்று (12.10.2022) இடம்பெற்ற தகவல் கணனி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவை
அவர் மேலும் கூறுகையில், மாகாண காணி திணைக்கள ஆணையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த கணனிகள் விநியோகம் இடம்பெற்றது.
அதிகாரிகளாகிய நாம் மக்களின் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும்.
அந்த பிரச்னைகளை தீர்க்கும் பொறுப்பு பிரதேச செயலார்களுக்கு இருக்கின்றது. அதனை உணர்ந்து அரச சேவையை சீரழிவின்றி நிறைவேற்றுவது முக்கியம்.
எமது மாகாணத்தில் பாரியளவிலான உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காணப்படுவதால் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீண்ட காலம் எடுக்கின்றது.
மக்கள் சேவை
ஆனால், மக்கள் பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வைத்தால் நம் மனசாட்சிக்கு நியாயம் கிடைத்திருக்கும்.
ஒவ்வொருவருக்கும் கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால் மக்கள் சேவையை முறையாக செய்வார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இந் நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, மாகாண காணி ஆணையாளர்
பி.எம்.ஆர்.சி. தசநாயக்க, மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின்
தலைவர் சாமர நிலங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.