எந்த அழுத்தத்துக்கும் அடிபணியவே மாட்டேன் - அமெரிக்காவில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தான் கட்டுப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசு ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த அரசைத் தெரிவு செய்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியத் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல், செயற்றிறனான அரச சேவையை ஏற்படுத்துதல் மற்றும் மோசடி மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருதல், போதைப்பொருட்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் ஒரு வருட குறுகிய காலத்தில் ஒரு சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் தற்போதைய அரசு ஒரு தீர்க்கமான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது . அனைத்து துறைகளிலும் இந்த சாதனைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுமே தவிர எக்காரணம் கொண்டும் திருப்பியமைக்கப்படாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாடு எதிர்கொள்ளும் அடுத்த சவால், அடைந்த பொருளாதார வெற்றிகள் நாட்டு மக்களைச் செல்வதை உறுதி செய்வதாகும் என்றும், இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டம் அந்த நோக்கத்தை மனதில் கொண்டு தயாரிக்கப்படுகின்றது என்றும் ஜனாதிபதி கூறினார்.
நியூயோர்க்கில் உள்ள ஸ்டெடன் ஐலண்ட் கலைக் கூடத்தில் நடைபெற்ற அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில் பங்கேற்றபோது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் இலங்கை தொழில்வல்லுநர்கள் உட்பட அமெரிக்காவில் வசிக்கும் பெருந்தொகையானவர்கள் பங்கேற்றது. அவர்களின் பிரச்சினைகளும் இங்கு ஆராயப்பட்டதோடு இலங்கையின் புதிய பொருளாதார மாற்றத்திற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டது.
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றம் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இலங்கைக்கு அச்சமின்றி வந்து முதலீடுகளைச் செய்வதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு பங்களிக்குமாறு அவர்களிடம் கோரினார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழு உரை பின்வருமாறு, "கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு, நான் நியூயோர்க் நகரில் இலங்கையர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். கடந்த வருடம் செப்டெம்பர் 21ஆம் திகதி நாங்கள் அடைந்த வெற்றியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பெரும் பங்காற்றினர். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
பெரிய வெற்றி
கடந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய அரசாங்கத்தை அமைக்க நீங்கள் ஏன் முடிவு செய்தீர்கள்? அந்த முடிவு ஒரு சாதாரண முடிவு அல்ல. நாங்கள் தலைமுறை தலைமுறையாக அரசியல் உரித்துள்ள குழு அல்ல. ஆனால் 2019 தேர்தலில் 3வீத வாக்குகளைப் பெற்ற ஒரு இயக்கம். இருப்பினும், 2024 ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் பாரிய வெற்றியைப் பெற்றோம்.
அதைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலில், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் நாங்கள் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றோம். அந்த வெற்றியை அடைந்து வருடம் கடந்துவிட்டது. இந்த அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது?
அந்த நோக்கத்துக்கு ஏற்றவாறு முடிவுகள் எட்டப்பட்டதா? இல்லையா? அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இந்த ஆட்சியை உருவாக்குவதற்கு பங்களிக்காத மற்றும் அதை எதிர்த்த குழுக்களின் அளவுகோல்களால் நம்மை அளவிட நாங்கள் தயாராக இல்லை. இந்த மாற்றத்திற்கு வழிவகுத்த காரணிகளைக் கொண்டே எம்மைப் பற்றி தீர்மானிக்க வேண்டும்.
நீங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், நம் நாட்டில் 2022/2023 ஆம் ஆண்டு பற்றி எழுதினால், நாடு வங்குரோத்தடைந்த காலகட்டமாக அது எழுதப்படும். 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி, கடனை செலுத்த மாட்டோம் என்று அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அனைத்தும் வீழ்ச்சியடையத் தொடங்கின. அபிவிருத்தித் திட்டங்கள் பாதியில் நின்றுவிட்டன, தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினர். சாதாரண மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ள போதுமான வருமானம் இல்லாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக ஒரு நாட்டிற்கு ஏற்படக்கூடிய அனைத்து பேரழிவு சூழ்நிலைகளும் எழுந்தன. இது எத்தகையதென்றால் இலங்கையில் முதல் முறையாக, ஆட்சியாளரை மக்களே தூக்கி எறிந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர், நம் நாட்டில் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இருப்பினும், இலங்கையில் முதல் முறையாக, மக்கள் தெருக்களில் இறங்கி தேர்தல் இல்லாமல் ஆட்சியாளர்களை துறத்தியடித்தார்கள். இது பொருளாதாரத்தில் ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கியது.
பொருளாதார நெருக்கடி
அதனால், அந்த பொருளாதார நெருக்கடியைத் தணித்து, இலங்கையில் மீண்டும் ஒருபோதும் நடக்காத வகையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதே எங்களுக்கு பிரதான சவாலாக இருந்தது. ஒரு வருடத்தில், நமது நாடு இழந்த பொருளாதார நெருக்கடியில் கணிசமான அளவை சீரமைத்து, ஸ்திரத்தன்மையை உருவாக்க முடிந்துள்ளது.
இன்று, பொருளாதார நெருக்கடியை மிக வேகமாகத் தணித்த நாடாக இலங்கை அறிமுகப்படுத்தப்படத் தொடங்கியுள்ளது. இது சர்வதேச நிதி நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சியில், அது நாட்டிற்கு இழந்த ஒரு தசாப்தமாகிறது என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, ஒரு நாடு அதன் முன்பிருந்த நிலையை அடைய 10 ஆண்டுகள் செல்லும்.
இருப்பினும், 2019 ஆம் ஆண்டு இலங்கை கொண்டிருந்த பொருளாதாரத்தை அடுத்த ஆண்டு எட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மிகக் குறுகிய காலத்தில் நாங்கள் அதை மேற்கொண்டுள்ளோம். அனைத்து தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இதை நாம் கணிக்க முடியும்.
நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு வழிவகுத்த முக்கிய காரணிகளில் ஒன்று, எமக்குத் தேவையான அளவுடொலர்களை சம்பாதிக்க தவறியமையாகும். இருப்பினும், டொலர்களை சம்பாதிக்கக்கூடிய நான்கு முக்கிய துறைகளிலும் இந்த ஆண்டு வரலாற்றில் மிக உயர்ந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு, சுமார் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகை தருவார்கள்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த ஆண்டாக இருக்கும். மேலும், இந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு அதிக அளவு டொலர்கள் பெறப்படும் ஆண்டாக இருக்கும். அதன்படி, இந்த ஆண்டு அதிக வருமானம் ஈட்டப்பட்ட ஆண்டாக இருக்கும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்து, ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளோம். மேலும், துறைமுக நகரத்தை அண்டியதாக 1.4 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் ஈர்க்கப்பட்ட ஆண்டாகவும் இருக்கும். நாம் எதிர்கொண்டிருக்கும் டொலர் கையிஇருப்பு சிக்கலை எம்மால் தீர்க்க முடியும். 2028 ஆம் ஆண்டுக்குள் நமது கடன் திருப்பிச் செலுத்துதலைத் தொடங்கும் சவாலை நாம் எதிர்கொள்கிறோம்.
எனவே, 2028 ஆம் ஆண்டுக்குள், கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையான திறன் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயல்படுகிறோம். அதன்படி,இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்தும் சூழ்நிலைக்கு வளர்ச்சி கண்டுள்ளது. நாம் எதிர்கொண்ட அடுத்த நெருக்கடி, அரசாங்கத்துக்குத் தேவையான வருவாயை உருவாக்கத் தவறியது.
வரவு - செலவுத் திட்டம்
நமது நாட்டின் வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் வருவாய் ஒருபோதும் பெறப்பட்டது கிடையாது. இருப்பினும், இலங்கையில் முதல் முறையாக, 2025 ஆம் ஆண்டில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான அரச வருவாயைப் பெற்றுள்ளோம். மேலும், எப்போதும் அரசாங்கத்துக்கு வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டை விட அதிக செலவுகளைச் செய்ய வேண்டியிருந்தது. இந்த ஆண்டு, அதுவும் குறைந்துள்ளது. எனவே, நாங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கியுள்ளோம். இருப்பினும், அது போதுமானதல்ல.
இந்த பொருளாதாரம் எட்டியுள்ள நன்மைகள் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும். பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தாமல், அந்த முடிவுகளை கீழ்மட்டத்திலுள்ள மக்களுக்கு வழங்க முடியாது. எனவே, எங்கள் முதல் சவால் பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகும்.இப்போது நாங்கள் எதிர்கொள்ளும் சவால் பொருளாதாரத்தில் அடையப்பட்ட இந்த வெற்றிகளை கீழ்மட்டத்தைச் சென்றடைய இடமளிப்பதாகும்.
இந்த ஆண்டு, எங்கள் வரவு - செலவுத் திட்டம் முற்றிலும் அந்த நோக்கத்தையே கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கான அரசாங்க தலையீடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை உருவாக்குதல் மற்றும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற பல துறைகளை இலக்காகக் கொண்டு இந்த வரவு - செலவுத் திட்டத்தை நாங்கள் தயாரிக்கின்றோம். அதேபோன்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, இந்த நாட்டு மக்களுக்கு எங்கள் அரச கட்டமைப்பு தொடர்பில் எதிர்பார்ப்புகள் இருந்தன. எங்கள் அரச கட்டமைப்பு மிகவும் செயற்றிறனற்ற மற்றும் செயலிழந்த அரச கட்டமைப்புமாகும்.
எனவே, நாட்டைக் கட்டியெழுப்புவதில், இந்த அரச கட்டமைப்பின் செயற்றிறன் அதிகரிக்கப்பட வேண்டும். அரசியல் நெருக்கத்தின் அடிப்படையில் மட்டுமே அரச சேவையை நிரப்புவதால், அரச சேவைக்கு அத்தியாவசிய ஆட்சேர்ப்புகள் நடைபெறவில்லை. எனவே, 70 ஆயிரம் பேரை புதிதாக அரச சேவையில் இணைக்க முடிவு செய்துள்ளோம். அரச சேவையை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்குத் தேவையான சம்பள அளவுகளையும் உருவாக்கியுள்ளோம். இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வை நாங்கள் வழங்கியுள்ளோம்.
இந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும், அந்தச் சம்பள உயர்வுக்காக 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் தலா 11 ஆயிரம் கோடி ரூபா வீதம் வழங்கப்பட வேண்டியுள்ளது.
அதன்படி, 2027 ஆம் ஆண்டாகும் போது சம்பளம் 33 ஆயிரம் கோடி ரூபாவாக உயர்த்தப்படும். அரச சேவையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அடுத்த ஆண்டுக்குள், அரசாங்கத்துடனான அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் முறை மூலம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். அரச சேவையில் பல சீர்திருத்தங்களையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.
மேலும், ஒற்றை சாளரத்தின் மூலம் இவை அனைத்தையும் மேற்கொள்வதற்கான கட்டமைப்பின் அவசியத்தை ஏற்றுமதியாளர்களும் முதலீட்டாளர்களும் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருகின்றனர். இதற்காக ஒரு புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தற்போது அது குறித்து இறுதி உடன்பாட்டை எட்டியுள்ளோம்.
முக்கிய விடயங்கள்
வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை வலுப்படுத்த தேவையான பணிகளை நாங்கள் செய்துள்ளோம் மேலும், பழைய நிறுவன கட்டமைப்புகளை நாங்கள் மாற்றுகிறோம். மின்சார சபையை பழைய முறைமையில் தொடர்ந்து முன்னெடுக்க முடியாதுள்ளது. எனவே, அதை திறம்படச் செய்ய ஒரு புதிய நிறுவன கட்டமைப்பை நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.
இந்த வகையில் திறம்படச் செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு புதிய கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். அரச நிறுவனங்களை நெறிப்படுத்த நாங்கள் கணிசமான அளவு பணிகளைச் செய்துள்ளோம். இன்னும் மேற்கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன. மேலும், சிறந்த சர்வதேச உறவுகளை மக்கள் எதிர்பார்த்தனர். சர்வதேச அரங்கில் நமது நாடு குறிப்பிட்டளவில் கருப்பு பட்டியல் நாடாக மாறியிருந்தது.
ஜனநாயகத்தை மதிக்காத, ஊடகவியலாளர்களைக் கொலைசெய்யும், மனித உரிமைகளை மீறும், பொருளாதாரத்தையே சீர்குலைத்த மோசடி மற்றும் ஊழல் நிறைந்த நமது நாட்டை மீண்டும் உலகில் ஒரு பிரகாசமான நாடாக மாற்ற வேண்டிய தேவை எமக்குள்ளது. எனவே, வலுவான இராஜதந்திர உறவுகளையும், சர்வதேச அரங்கில் இலங்கையின் நல்ல பிம்பத்தையும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது.
சர்வதேச அமைப்புகளில் இன்று இலங்கை தொடர்பில் ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரைச் சந்தித்தபோது இந்த விடயம் குறிப்பிடப்பட்டது. எனவே, மீண்டும் எமது நாட்டிற்கு பிரகாசத்தையும் உரிமைகளையும் மீண்டும் பெற நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.
அதில் குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை அடைந்துள்ளோம். மேலும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய எமக்கு தேவையாக இருந்தது. நமது நாட்டில், அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் முன்பாக வலைந்து கொடுக்கும் ஏழைகளைத் தண்டிக்கும் ஒரு சட்டம் இருந்தது. நமது நாட்டில் சட்டத்தை நெருங்கக்கூடியவர்களும், முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்ற ஒரு கருத்து நாட்டிலும் பொது சமூகத்திலும் இருந்தது. இருப்பினும், இன்று இலங்கையில் சட்டத்தை அடைய முடியாத எந்தவொரு நபரும் இல்லை என்பதை நடைமுறையில் நிரூபித்து வருகிறோம்.
யார் வேண்டுமானாலும் சட்டத்தை அணுக முடியும். இலங்கையில் இதுபோன்ற ஒரு தீர்க்கமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முறையாக நிலைநாட்டுவது நமது பொறுப்பாகும். நாம் எடுத்துள்ள முன்னெப்புகளை தொடர்ந்து முன்கொண்டு செல்வோமே தவிர பின்நோக்கி திருப்ப மாட்டோம். எங்களுக்கு வாக்களிக்கும் போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன.
அந்த எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளுடன் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இணைந்திருக்கிறோம். மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாங்கள் பணியாற்றுகின்றோம். இதில் யாருக்கும் அடிபணிய மாட்டோம். அதேபோல், மோசடி மற்றும் ஊழலை நிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்நாட்டு மக்கள் மத்தியில் இருந்தது.
எங்கள் நாட்டில் அரசியல்வாதியின் வீண் விரயம் ஒரு சட்டமாக மாறியிருந்தது. அவற்றைப் பற்றி கேள்வி கேட்க முடியாது. அரசியல்வாதிகளுக்கு தாம் விரும்பியவாறு பொதுமக்களின் பணத்தை வீணடிக்க முடியும் என்ற எண்ணக்கருவொன்று இருந்தது. அது தவறானது. பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சியடைந்து, எரிவாயு, எரிபொருள் இல்லாமல் இருந்த நிலையில் கூட ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புதுப்பிக்க 470 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
அரசியல் முன்மாதிரி
அரசியல்வாதிகளுக்கு அரச பணம் செலவிடுவதில் வரம்புகள் இருக்கவில்லை. அவர்களின் விருப்பத்தின் படி செலவு செய்யலாம் என்று நினைத்தார்கள். ஜனாதிபதிக்கு வரம்பு இல்லை. ஆனால், அந்த வரம்பு அந்த பதவியில் அமர்ந்திருப்பவரின் நாகரிகத்திலேயே அடங்கியுள்ளது. அப்படியானால் நாங்கள் சட்டத்தின் மூலம் அந்த வரம்பை உருவாக்க வேண்டியுள்ளது.
அதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அந்த சட்டத்தின் வரம்பாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இல்லங்கள் வழங்கப்படாது. இது யாரையும் பழிவாங்குவதற்காக அல்ல. எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட குரோதம் கிடையாது. எங்கள் நாட்டுக்கு சிறந்த அரசியல் முன்மாதிரி தேவை. அது உருவாகும் வரை நாங்கள் சட்ட வரம்புகளை உருவாக்குகிறோம்.
பொதுமக்களின் பணத்தில் ஒரு சதமும் வீணாக்காத அரசாங்கம் இலங்கையில் முதல் முறையாக இன்று அமைக்கப்பட்டுள்ளது. அதுதான் மக்கள் ஆணையின் சாராம்சம். இந்த காரணிகளின் விளைவாகவே நமது நாடு வீழ்ச்சியடைந்தது. எனவே இந்த நிலைமையை மாற்றுவதற்கு அனைத்து காரணிகளிலும் மாற்றம் தேவை. எனவே இலஞ்சம், ஊழலற்ற அரசொன்றை உருவாக்குவதற்கான மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பை நாங்கள் தற்போது நிறைவேற்றி வருகின்றோம். அதேபோல், மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்கள்.
இன்று நாங்கள் அதைச் செய்து வருகிறோம். அதேபோல், சர்வதேச அளவில் எங்கள் நாடு குறித்த கறைபடிந்த பிம்பத்தை உருவாக்கிய கொலைகள் மற்றும் கடத்தல்கள் குறித்து நீதி தேவை. அதற்கு நியாயம் தேவை. அதனைப் பற்றி நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் . படையினர்களை வேட்டையாடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. போரின்போது அவர்கள் செய்த பணி குறித்து எங்களுக்கு பாராட்டு உள்ளது. ஆனால் அதற்கு மறைமுகமாக செய்த குற்றங்கள் குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம். நமது நாட்டில் நீதி பற்றிய கருத்து வெறும் சட்டத்தின் இருப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படவில்லை.
நீதி பற்றிய சமூகக் கருத்து, தற்போதுள்ள சட்டம் நியாயமாக செயற்படுத்தப்படுகின்றது என்ற மனநிலையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சட்டம் இருப்பது மட்டுமே சமூகத்தில் நீதி பற்றிய கருத்தை உருவாக்காது. அநீதி ஏற்படும் தருணத்தில் நீதி செயற்படுத்தப்படும் என்ற கருத்து உருவாக்கப்பட்டால் மட்டுமே நீதி பற்றிய கருத்து உருவாக்கப்படுகின்றது. நாங்கள் அதை மேற்கொண்டு வருகிறோம்.
குற்றங்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை நாம் ஒருபோதும் அரசியல் கோணத்தில் நடத்துவதில்லை. இ லஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பன தேவையான விசாரணைகளை நடத்துகின்றன. தேவையான வசதிகளை மட்டுமே நாங்கள் வழங்குகின்றோம். அதற்கான அழுத்தம் கொடுப்பது எங்கள் பணியல்ல தற்போதுள்ள அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு அன்றி, தற்போதுள்ள நிறுவனங்களின் அடிப்படையில் அவை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அந்த நிறுவனங்களை வலுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும், நமது நாடு எதிர்கொண்டுள்ள போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எனவே, இந்த மறைவான அரசை நசுக்க நாங்கள் பாடுபடுகிறோம். ஒரு நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்க முடியாது. ஒரு அரசாங்கமே இருக்க வேண்டும். அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு அரசு பொறிமுறையின் மூலம் மட்டுமே அரசு செயற்படுத்தப்பட வேண்டும்.
எனவே, நமது நாட்டுக்குத் தேவையான மாற்றங்களை பல்வேறு கோணங்களில் செய்து வருகின்றோம். எனவே, ஒரு வருடத்திற்கு முன்பு எங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பாதையில் நாங்கள் இறங்கியுள்ளோம். பாதியில் நிறுத்தப்பட்ட திட்டங்களையும் மீண்டும் ஆரம்பித்துள்ளோம். கட்டுநாயக்க விமான நிலையத் திட்டம் 2023 இல் நிறைவுசெய்யப்பட வேண்டிய ஒரு திட்டமாகும். ஆனால் அது பாதியில் நிறுத்தப்பட்டது. எனவே, அடுத்த ஆண்டு பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் அதன் பணிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், பாதியில் நிறுத்தப்பட்ட நிர்மாணப் பணிகள் ஏராளமாக உள்ளன.
கலாசார அமைச்சர் மாத்தறையில் இருந்ததால், சார்க் கலாசார மையம் என்ற பாரிய கட்டிடம் மாத்தறையில் கட்டப்பட்டது. இப்போது எதுவும் செய்ய முடியாது. யாரும் அதைப் பொறுப்பேற்க தயாராக இல்லை. அது பழுதடைந்து வருகிறது. இவற்றை மறுசீரமைத்து பயனுள்ள பணிகளுக்கு பயன்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.
எனவே, நாங்கள் ஸ்திரத்தன்மை மற்றும் மறுசீரமைப்பை நோக்கி நகர்கிறோம்.எமக்கு மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிந்துள்ளது. ஆனால் அது போதாது, எங்களுக்கு கால அவகாசம் தேவை. அதற்கு உங்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இன்று, நாட்டில் உங்களுக்காக முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கூட தேவையில்லை, செயற்றிட்டங்கள் மட்டுமே தேவை. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களாக, சுற்றுலாத் துறைக்கு நீங்கள் பரந்த பங்களிப்பைச் செய்ய முடியும். தூதரகங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை நாங்கள் ஏற்பாடு செய்யலாம்.
நாம் தூரமாக இருப்பதற்குப் பதிலாக பல்வேறு வழிகளில் இலங்கையுடன் தொடர்பு கொள்ளும் ஒரு சமூகமாக மாற அனைவரைக்கும் அழைப்பு விடுக்கின்றேன்." - என்றார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.



