ஜனாதிபதியின் உண்மை ஆட்சியை கண்டறிய ஒரு வருடமாவது வேண்டும் : முன்னாள் இராஜாங்க அமைச்சர்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், தமது உண்மைத் தன்மையை வெளிப்படுத்தவேண்டுமானால், குறைந்தது ஒரு வருடமாவது சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அதற்கு முன்னர் அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு எவரும் அவசரப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
கடன் பெற்றுள்ள அரசாங்கம்
பதவிக்கு வந்த வெறும் 24 நாட்களுக்குள் 60 பில்லியன் ரூபாய்களை இந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளது. ஆனால் ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்க முடியவில்லை.
எனவே தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடையக்கூடும் என எச்சரித்த அவர், நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு திறமையான குழுவொன்றை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களின் பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார்.
நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தாலும், அவசரப்பட்டு ஆட்சியைக் கைப்பற்றக் கூடாது என்று ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி, வரவிருக்கும் நெருக்கடி குறித்து நாட்டுக்கு மக்களுக்கு நினைவுப்படுத்துவதாகவும் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.