கைது செய்யப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சர்ச்சைக்குரிய சொகுசு வாகன விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று வாக்குமூலம் வழங்க சென்ற நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிட கோரி பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (22) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு மீதான பரிசீலனை
விசாரணையின் போது, பெர்னாண்டோ இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கத் தயார் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
மனு மீதான பரிசீலனை அக்டோபர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
பெர்னாண்டோ கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது, 153 ‘லங்கா சதொச’ ஊழியர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் உட்பட மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (ஒக்டோபர் 23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகர்த்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட சொகுசு வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க தயார் என நேற்று அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொகுசு வாகனமானது கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க கால அவகாசம் கோரியிருந்தநிலையில் அவர் இன்று திணைக்களத்திற்கு முன்னிலையாகியுள்ளார்.
பின்னணி
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நேற்று அறிவி்திருந்தார்.
சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தைப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, அவரது சட்டத்தரணி நீதிமன்றில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
பிரசார செயற்பாடு
இந்தநிலையில் குறித்த வாகனம் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் பயன்படுத்தப்பட்டதா? என நீதியரசர் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.
தேர்தல் கால பிரசார செயற்பாடுகளுக்காகக் குறித்த வாகனம் பயன்படுத்தப்பட்டதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகாத குற்றச்சாட்டில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு பயண தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
தொடர்புடைய செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |