விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய உங்களால் இதை செய்திருக்க முடியாதா..! நாடாளுமன்றில் அனல் பறந்த கருத்து மோதல்
ஜே.வி.பியால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை நோக்கி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெற்றிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் பிள்ளையானுக்கும், அநுரவிற்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றிருந்தன.
பிள்ளையானின் கருத்து
பிள்ளையான் உரையாற்றுகையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எனது பெயரை குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார். அரசியலுக்காக நீங்கள் எதனையும் பேசலாம்.
ஆனால் நீங்கள் ஒருவிடயத்தை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன். நீங்களும் அரசியல் செய்யும் காலத்தில் நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்த போது உங்களுடைய அமைப்பினால் (ஜே.வி.பி) துப்பாக்கிகள், ஆயுதங்கள் வழங்கப்பட்டன.
அப்படியென்றால் நீங்கள் உங்கள் அமைப்பில் இருந்த பிணையில் விடுவிக்கப்பட்ட மகன்மார்களுக்கு உங்களின் பழைய துப்பாக்கிகள், வெடி குண்டுகளை கொடுத்திருக்க முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அநுரவின் பதில்
இதற்கு அநுரகுமார திசாநாயக்க பதிலளிக்கையில், தமிழீழ விடுதலை புலிகளுக்கு நாங்கள் ஆயுதங்கள் வழங்கியதாக கூறுவதை முற்றாக நிராகரிக்கின்றோம். அது தவறான கருத்து.
எமது அமைப்பு ஆயுத அரசியலில் ஈடுபட்டது. அது முழுமையாக நிறைவடைந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்த முடியும். எனினும் புலனாய்வு கணக்கில் மாதாந்தம் 35 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு பிள்ளையானின் குழு பராமறிக்கப்பட்டது.
இப்போதும் 35 இலட்சம் வழங்கப்படுகின்றதா என்று கேட்க விரும்புகின்றேன் என வினவியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |