உறவினர்களுக்கு பதவியை வழங்க திட்டமிடும் ராஜபக்சர்கள்: ரணில் வகுத்துள்ள திட்டம்
தற்போதைய இலங்கையின் ஜனாதிபதி அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்பட்டாலும், பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற கருத்தாடல்கள் காணப்படுகின்றன.
சரியான ஆணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என தேர்தல் மேடைகளில் எதிர்க்கட்சியினர் பரவலாக சாடி வருகின்றனர்.
ரணிலின் ஆட்சியை அடிப்படையாக கொண்ட உலக வங்கியின் கூற்றுப்படி, இலங்கையில் ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் உணவுப் பற்றாக்குறையுடன் உள்ளனர் என கூறப்படுகிறது.
ஆய்வறிக்கை
அதே நேரம் வறுமை வளர்ச்சியானது 2026இல் 22 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி பணியாளர்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கான நீண்ட வரிகளை விதித்து பலதரப்பு, இருதரப்பு மற்றும் வணிக கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஏற்பாடுகளை பேச்சுவார்த்தைமூலம் நகர்த்தி வருகின்றனர்.
இது மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
இன்று ரணிலின் பங்காளிகள் அவரை ஒரு சிறந்த தலைவர் என கூறி, தற்போது நடைபெற்று வரும் பொருளாதார சவால்களின் மூலம் இலங்கையை தொடர்ந்து வழிநடத்த அவரால் மட்டுமே முடியும் என்று கூறுகின்றனர்.
இதன் அடிப்படையில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஓரளவேனும் தற்போது நாடாளுமன்றத்தில் ரணிலை ஆதரிக்கிறது.
பொருளாதார மோசடி
இந்த ஆதரவென்பது ராஜபக்ச குடும்பத்தில் உள்ளவர்களை பொருளாதார மோசடியில் பொறுப்புக்கூற வைக்காததற்கு ஈடான ஆதரவு நிலைப்பாடு என எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.
நடைபெறவுள்ள தேர்தலில் ராஜபக்சர்களும் ரணிலை ஆதரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, இதன் காரணமாகவே நாமல் களத்தில் இறங்குவதற்கு முன்பே கட்சிக்குள் இருந்த பல அரசியல்வாதிகள் ஜனாதிபதிக்கு ஆதரவை அறிவித்தனர்.
இதை விரும்பாத ராஜபக்சர்கள் தலைமை ஆசனத்தை தந்தையிடம் இருந்து மகனுக்கு வழங்கியுள்ளனர்.
இவ்வாறான ஒரு பின்னணியிலேயே நேற்று இடம்பெற்ற கட்சி கூட்டம் ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியைக் கைப்பற்றினால் உறவினர்களுக்கே பதவிகள் பகிரப்படும் என சாடியுள்ளார்.
குறித்த மேடையில் அவரது கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது,
தம்பியை ஜனாதிபதியாக்க நடவடிக்கை
“மகிந்த அரசாங்கத்தை ஸ்தாபித்தால், தம்பியை ஜனாதிபதியாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறார்.
அடுத்த தம்பி பசிலுக்கு அமைச்சுப் பதவியை வழங்குகிறார். அண்ணனை அமைச்சராக்குகிறார். சமல் ராஜபக்சவின் புதல்வருக்கு அமைச்சுப் பதவியை வழங்குகிறார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு அவ்வாறு உறவினர்கள் இல்லை. அதன் காரணமாக அவர், கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஆலோசகர் பதவிகளை வழங்கியுள்ளார்.
அகில விராஜ் காரியவசம், ஆஷூ மாரசிங்க, ருவன் விஜேவர்த்தன, ஹரீன் பெர்னாண்டோ, மனுச நாணயக்கார ஆகியோருக்கு இந்த ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான காரணம் என்ன?
ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் தங்களது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |