ரணிலின் அழைப்பை அடியோடு நிராகரித்த அநுரகுமார
மக்கள் ஆணை இல்லாத தலைவரின் அழைப்பை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வரும் தலைவர்களுடன் தான் நாம் பேச்சு நடத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க என்பவர் ராஜபக்சகளின் காவலன் மாத்திரமே என்றும் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய பின்னர் விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில், அக்கிராசன உரை ஊடாக ஜனாதிபதி விடுத்த அழைப்பு சம்பந்தமாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ரணில் விக்ரமசிங்க என்பவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். மக்கள் வாக்குகளால் நாடாளுமன்றம் கூட வரமுடியாமல் போனவர்.
அப்படியான தலைவர்களுடன் எமக்கு எவ்வித கொடுக்கல் – வாங்கல்களும் இல்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வரும் தலைவர்களுடன்தான் பேச்சு நடத்த வேண்டும் என்பதே எமது கொள்கை.
எந்தத் தேர்தலை ஒத்தி வைத்தாலும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. நிதி இல்லை எனவும் கூற முடியாது.
சர்வதேச ஒத்துழைப்பு
ஜனாதிபதியால் 19 தடவைகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பணம் இருக்கின்றதெனில், அவ்வாறு செல்லும் தருவாயில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை அழைத்துச் செல்ல பணம் இருக்கின்றதெனில் தேர்தலை நடத்த ஏன் பணம் இல்லை? இலங்கை என்பது வளர்ந்து வரும் நாடு.
எனவே, சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். தனித்துச் செயற்பட முடியாது. இந்திய விஜயம் சம்பந்தமாக விரிவான விளக்கத்தை ஊடகவியலாளர் சந்திப்பு ஊடாக அறிவிப்போம் என அநுரகுமார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |