விடுதலைப்புலிகளின் தலைவரையே மிஞ்சிவிட்டார் அநுர - கடுமையாகச் சாடும் துமிந்த
யுத்த காலத்தில் வடக்கில் இயங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பினருடைய நீதிமன்றத் தீர்ப்புகளில் கூட பிரபாகரன் தலையிட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இன்று அநுரகுமார பிரபாகரனையும் மிஞ்சிச் சென்று நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க பகிரங்கமாக சாடியுள்ளார்.
பத்தரமுல்லையில் நேற்று(15.05.2026) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட ஊடக சந்திப்பில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், "வன்முறை, கொள்ளை மற்றும் அரச சொத்துக்களை அழித்த வரலாற்றை மூடிமறைக்கவே 'திசைகாட்டி' என்ற பெயரில் இவர்கள் அதிகாரத்தைப் பிடித்துள்ளனர்.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு ஆபத்து
இவர்களது பொய் வாக்குறுதிகளைத் தொகுத்தால் பல புத்தகங்களையே எழுத முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமாரவின் மே தின உரையைச் சுட்டிக்காட்டிய துமிந்த திஸாநாயக்க, "வரும் 25ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வரவுள்ளது, கைதட்டத் தயாராக இருங்கள் என ஜனாதிபதி மேடையில் கூறுகின்றார்.

தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜனாதிபதிக்கு அது எப்படித் தெரியும்? ஒன்று அவர் நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் அல்லது நீதிபதி தீர்ப்பை முன்கூட்டியே ஜனாதிபதிக்கு கசியவிட்டிருக்க வேண்டும்.
இந்த இரண்டுமே நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு ஆபத்தானது" என்று விவரித்துள்ளார்.
'டித்வா' புயல் இழப்பீடு உள்ளிட்ட பல விடயங்களில் அரசு மக்களை ஏமாற்றியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், "நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ள மக்கள் வெட்கப்படத் தேவையில்லை.
ஆனால், அந்த வெட்கத்துக்காக நீங்கள் மௌனமாக இருந்தால் நாடு முழுமையாக அழிந்துவிடும். இப்போதாவது விழித்தெழுந்து இந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் போராடுங்கள்" என்றும் நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.