வலுசக்தித் துறையில் அரசு வெற்றிப் பயணம் - மார்தட்டும் ஜனாதிபதி அநுர
வலுசக்தி சந்தையில் வலுவான அரச பங்கைப் பேணி, மக்களுக்குச் செயற்றிறனுடன் சேவையாற்றுவதே அரசின் எதிர்பார்ப்பாகும் எனவும், அதனை நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஜெட் ஏ - 1 குழாய் கட்டமைப்பு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்துக்கு உரிய இரண்டு புதிய எண்ணெய் தாங்கி சேமிப்புத் தொகுதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மொத்த கொள்ளளவு
விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், விநியோகச் செலவைக் குறைத்தல் மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பவற்றுக்காக இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முத்துராஜவெல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் வகையில், 21 கிலோமீட்டர் நீளமும் 10 அங்குல விட்டமும் கொண்ட நிலத்தடி குழாய் மூலம் விமான எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டம் 30 மாதங்களில் நிறைவுபெறும். 92 ஆயிரம் கன மீற்றர் மொத்த கொள்ளளவு கொண்ட ஐந்து புதிய ஜெட் ஏ-1 எரிபொருள் தாங்கிகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் இரண்டு பெரிய தாங்கிகள் (ஒவ்வொன்றும் 30 ஆயிரம் கன மீற்றர்), இரண்டு நடுத்தர தாங்கிகள் (ஒவ்வொன்றும் 15 ஆயிரம் கன மீற்றர்) மற்றும் 2 ஆயிரம் கன மீற்றர் கொண்ட மேலதிக தாங்கி ஆகியவை அடங்கும்.
சி.பி.எஸ்.ரி.எல். மூலம் முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய சேமிப்புத் தாங்கிகளை (தலா 15 ஆயிரம் கன மீற்றர் கொள்ளளவு கொண்ட 2 தாங்கிகள் மற்றும் 10 ஆயிரம் கன மீற்றர் கொள்ளளவு கொண்ட 1 தாங்கி) அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இந்தத் திட்டம் 18 மாதங்களில் அதாவது 2028 ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும்.