புலம்பெயர் தமிழர்களுக்கு யாழில் வைத்து ஜனாதிபதி வழங்கிய செய்தி
வடக்கிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நேற்றைய தினம் (17.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் மக்களை பிரித்துள்ளன. ஆனால் கடந்த பொது தேர்தலின் போது வடக்கு, கிழக்கு, தெற்கு, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்தனர். அப்படிப்பட்ட ஒன்றிணைந்த தேர்தல்களே வேண்டும். மீள பிரிய மக்கள் பிரிந்து வாக்களிக்க வேண்டாம்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என அனைவரும் ஒரு நாட்டு மக்களாக ஒன்றாக வாழ வேண்டும். சகல மக்களுககும் சமனான உரிமை வேண்டும். அவ்வாறான நாடு தான் எமக்கு தேவை. கடந்த காலங்களில் போர் புரிந்தோம் அதனால் என்ன நடந்தது அழிவுகளை தான் சந்தித்தோம். எம் உறவுகளை இழந்தோம். வடக்கிலும் தெற்கிலும் அதே நடந்தது.
மீள அப்படி ஒரு நிலை எமக்கு வேண்டாம். எங்கள் தலைமுறைகள் போர் புரிந்தோம் அடுத்த தலைமுறைகள் போர் இல்லாது சமாதானமாக அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என வெளிப்படுத்துவோம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களையும் வெளிப்படுத்துவோம். அரசாங்கத்திடம், பொலிஸாரிடம், இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துவோம்.
ஒருவர் இறந்தால் அவருக்காக அழுது, அவருக்கு செய்ய வேண்டிய கிரியைகளை செய்து சில காலத்தில் ஆறுதல் அடைவோம். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாமல் படும் வேதனைகளை நான் நன்கு அறிவேன்.
எனது சகோதரர் கூட காணாமல் ஆக்கப்பட்டவரே. அதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலி எனக்கு புரியும். எமக்கு அமைதி தேவை. அதற்காக அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறிந்து வெளிப்படுத்துவோம்.
பொலிஸ் முப்படைகளில் வேலை வாய்ப்பு
அதேபோன்று பல வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். குறிப்பாக தமிழ் இளையோர் 2000 பேருக்கு பொலிஸ் திணைக்களத்தில் வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம். அதேபோன்று இராணுவம், கடற்படை விமான படையிலும் தமிழ் இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதற்கு இங்குள்ள பெரியவர்கள் பெற்றோர்கள் இளையோர்களை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எடுத்து கூற வேண்டும். காங்கேசன்துறையில் ஒரு ஜனாதிபதி மாளிகை உள்ளது. அது எமக்கு தேவையில்லை. அதனை யாழ்ப்பாண மக்களுக்கு பயன்பட கூடியவாறு மக்களுக்காக அதனை வழங்கவுள்ளோம்.
புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு திரும்ப வர வேண்டும்
வடக்கில் இருந்து பலர் புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மீள நாட்டிற்கு வர வேண்டும். எமது நாட்டினை கட்டியொழுப்ப தங்கள் முதலீடுகளை நாட்டில் மேற்கொள்ள வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நாட்டை கட்டியொழுப்ப நாட்டிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.
இந்த நாட்டில் கடந்த காலங்களில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம் இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாகுபாடு இருந்தது. இனிஅவ்வாறு இருக்காது. அனைவருக்கு சட்டம் பொதுவானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
