கே.பி.யைப் பாதுகாக்கும் அநுர அரசாங்கம் இராணுவ அதிகாரிகளைப் பழிவாங்குவது ஏன்..! சம்பிக்க ரணவக்க கடும் சீற்றம்
விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்து நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாத்த இராணுவ உயர் அதிகாரிகள் இன்று அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.
குருநாகல் நகரில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று சாடிய அவர், பொருளாதாரச் சுமைகள் அனைத்தும் நாட்டு மக்கள் மீதே திணிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைத் தவிர, பொருளாதாரத்தை மீட்க இந்த அரசிடம் வேறு எவ்விதத் திட்டங்களும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் கலாசாரம்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைச் சுட்டிக்காட்டிய அவர், நிர்வாகக் கட்டமைப்பின் பலவீனமே இதற்குப் பொறுப்பு என்றும், தார்மீகப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

"நாகரிகமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த காலத்தை விமர்சிப்பதில் நேரத்தை வீணடிக்காமல் சிறந்த உதாரணங்களாகச் செயற்பட வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட்ட இராணுவ உயர் அதிகாரிகள் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று குறிப்பிட்ட பாட்டலி சம்பிக்க, பிரபாகரனுக்குப் பக்கபலமாக இருந்த கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனைப் பாதுகாக்கும் அரசு, நாட்டைப் பாதுகாத்த இராணுவ அதிகாரிகளை இலக்கு வைப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
தேசியத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படும் சகல தரப்பினரும், எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலச் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து வலுவாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் அழைப்பு விடுத்தார்.