இந்திய பாதுகாப்பு அமைச்சரிடம் இலங்கை ஜனாதிபதி நேரில் வாக்குறுதி
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மேற்படி இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன என்றும், இதன்போதே இந்த உறுதிமொழியை இலங்கை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய திட்டங்கள்..
இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன ஆக்கிரமிப்பு மற்றும் இலங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் பீஜிங்கின் விரிவடைந்து வரும் ஆதிக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததுள்ளது என்றும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட இந்தப் பயணத்தின் போது, இலங்கை விமானப்படைக்கான எல் - 70 ரக பீரங்கிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், இரு நாடுகளின் தேசிய மாணவர் படையணி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு இடையே ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்திய அரசின் மானியத்தின் கீழ் இலங்கையின் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"பாரம்பரியமாக சுமுகமான உறவுகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையால் வகைப்படுத்தப்படும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையின் முழு அளவிலான பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆழமான கலந்துரையாடல்களை நடத்தினர்" என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.